பழகிவிட்டால் எல்லாமே
சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
அழுதுகிட்டே மீன்பிடிக்கும் மீனவன்
போல -அவன்
அல்லலுக்கு
விடிவுண்டா என்றும் சால!
பழகிவிட்டால் எல்லாமே
சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
பொழுதுமுட்ட குடிக்கின்றான் கவலை
அகல –இல்லம்
போனபின்னர்
அவன்செயலை எடுத்துப் புகல!
விழுதுகளாம் பிள்ளைகளும்
மனைவி என்றே –படும்
வேதனையை
விளக்குவதும் எளிதும் அன்றே!
பழகிவிட்டால் எல்லாமே
சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
நஞ்சுண்ட விவசாயி
கண்டோம் இன்றே –வரும்
நாட்களிலே
நடக்குமிது காணும் ஒன்றே!
பஞ்சுண்டு நெய்வதற்கும்
ஆலை யுண்டே –ஆனா
பலநாளாய் மூடியது அரசின்
தொண்டே!
பழகிவிட்டால் எல்லாமே
சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
கஞ்சுண்டு வாழ்வதற்கும்
தொட்டி கட்ட –அரசு
கருணையுடன்
மானியமே நம்முன் நீட்ட!
நெஞ்சுண்டு
நன்றிமிக
வாழ்வோம் நாமே –பெரும்
நிம்மதியாய் அஞ்சலின்றி
நாளும் தாமே!
பழகிவிட்டால் எல்லாமே
சரியாய்ப் போகும் –இதை,
பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!
புலவர் சா
இராமாநுசம்