தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும்
நாட்டில்-எரி
தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்
வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக
வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
ஆண்டாரே, ஆள்வோரே எண்ணிப் பாரும்-இந்த
அவலத்தைப் போக்கவழி விரைந்துக் கூறும்
ஊராட்சி தலைவரென தலித்தும் வந்தால்-அவர்
உட்கார நாற்காலி ஒன்று தந்தால்
பாராட்சி போனதெனல், சாதி வெறியே-நற்
பண்பல்ல! ஒம்புங்கள் உயர்ந்த நெறியே
யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
எண்ணமின்றி
நடப்பது அனைத்தும் வீணே
சீராட்சி நடந்திட வழியே காண்பீர்-சாதிச்
சிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்
ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-அது
ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்
ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என
உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான்
அதுவென்றே ஏற்றுக் கொண்டோம-நம்
நாடெங்கும்
கொள்கையென பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
ஏங்கிட நீங்குமா சாதி மடமை!
புலவர் சா இராமாநுசம்