ஒழிந்ததா மரண
பயமேதான் –அடடா!
உலகே
மகிழ்வின் மயமேதான்!
அழிந்ததா
? இல்லை! அகிலம்தான்-என்ன
ஆகுமோ
என்றத் திகிலில்தான்!
எழுந்திட பொழுதும்
விடிந்தனவே –ஆனால்
எதுவுமே
இன்றி முடிந்தனவே!
மொழிந்திட மேலும்
ஏதுமிலை –வாழும்
முறைப்படி
வாழ்ந்தால் தீதுமிலை!
இயற்கையை ஒட்டியே
வாழ்வோமா –அதை
எதிர்த்து
அழித்தே வீழ்வோமா!?
செயற்கை நம்முடை
சீரழிக்கும் –தினமும்
செய்தால்
அதுநம் வேரழிக்கும்!
உலகம் அழிதல்நம்
கையில்தான் –நான்
உரைப்பது
சற்றும் பொய்யில்தான்!
கலகம்,
கயமை, போராட்டம் –என
காண்பது
முற்றிலும் மாறட்டும்!
பிறந்தார் இறப்பதில்
மாற்றமுண்டா –இதில்
பேதம் ஏதும் காண்பதுண்டா !
சிறந்தார்! செயலால்!
என்றேதான் –உலகம்
செப்பிட
வாழ்தல் நன்றேதான்!
இறந்தார் என்றால் பெருங்கூட்டம் – நம்
இல்முன்
கூடின் அதுகாட்டும்!
வருந்தார் இல்லை
ஒருவரென –நாமும்
வையத்தில்
வாழ்வோம் ஒருவரென!
புலவர் சா
இராமாநுசம்