Saturday, December 15, 2012
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில் சென்றதும் என்ன செய்கின்றீர்
அள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
உணர்ந்த ஞானி அன்னாரே
ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
சண்டைகள் தேவையா இனிமேலும்
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்
நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்
Thursday, December 13, 2012
எத்தனை நாட்கள் பொறுப்பார்கள் –எனில் என்றுமே உம்மை வெறுப்பார்கள்!
பதிவர்கள் பலபேர்
எழுதவில்லை –தினம்
பவர்கட்
ஆவதா தெரியவில்லை!
இதுவரை தீர்த்திட
முயலவில்லை –மின்
இணைப்பினை
நம்பிப் பயனில்லை!
எதுவரை இந்நிலை!
தெரியவில்லை –மாற்று
எதுவென
ஏதும் புரியவில்லை!
விதியென
கிடப்பதே
நம்நிலையா –இருள்
விலகிட
ஒளிவர வழியிலையா!
முற்றும் முடங்கின தொழில் கூடம் –பூட்டி
மூடிட
கண்ணீர் வழிந்தோடும்!
வற்றின நீர்நிலை
மழையில்லை –இரவு
வந்தால்
கொசுவோ பெருந்தொல்லை!
பற்றின துயரோ
தீயாக –நோய்
பற்றிட , தொற்றிட பேயாக!
பெற்றனர்
நாளும்
துன்பந்தான் –இனிப்
பெருவரோ?
வாழ்வில் இன்பந்தான்!
கடிதம் எழுதி
வருவதில்லை !–நேரில்
கண்டுப்
பேசிடின் தீரும்தொல்லை!
அடிமேல் அடியும்
அடித்தாலே –பெரும்
அம்மியும்
நகரும் அதுபோலே!
துடியாய
நேரில் போவீரே –மெகா
தொடர்கதை
மின்வெட்டை முடிப்பீரே!
முடியா நிலையென
ஏதுமிலை –மேலும்
மௌனம்
காப்பது நீதியிலை!
மத்திய மாநில
அரசுகளே –ஈகோ
மனதை
விடுவீர் அரசுகளே!
நித்தம் மக்கள்
படும்பாடே –மேலும்
நீண்டால்
அடைவீர் பெரும்கேடே!
சித்தம் இரங்கிட
வேண்டுகிறேன் –
உடன்
செயல்பட
உம்மைத் தூண்டுகிறேன்!
எத்தனை நாட்கள்
பொறுப்பார்கள் –எனில்
என்றுமே
உம்மை வெறுப்பார்கள்!
புலவர் சா இராமாநுசம்
Tuesday, December 11, 2012
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித புத்தரே சொல்லினும் கேளாரே!
மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம்
மீனவர் வலையை அறுக்கின்றான்!
தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
துயரக் கண்ணீர் வடிக்கின்றார்!
ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
எனினும் பழைய காட்சியதே!
வேண்டும் துணிவு! அதுவொன்றே-அவர்
வேதனை போக்கும் வழியின்றே!
எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
எடுபிடி யாக ஆவார்கள்!
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
மேலும் போவது அவமானம்!
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
புத்தரே சொல்லினும் கேளாரே!
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்!
ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
அம்மா அவர்க்கும் கதிநீரே!
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
கொடுப்பீர் மத்திக்கி, இப்போதே!
மீறினால் வருமே போராட்டம்-என
மத்தியில் ஆள்வோர் உணரட்டும்!
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
மக்களை அரசே திரட்டட்டும்!
பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்!
அடித்துச் சிறையிடல் தொடர்கதையா-இந்த
அவலம் மீனவன் தலைவிதியா!
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
தமிழக அரசே உடன்ஒல்லை!
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!
புலவர் சா இராமாநுசம்