Saturday, December 1, 2012

தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்!




புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
கவிதை-  புலவர் சா இராமாநுசம்

      தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்

      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா மின்விளக்காய் விண்ணில் தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்

             அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்

                                                            
                              புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 28, 2012

இடுவீர் பிச்சை இடுவீரே!




 இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே!
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே!
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை!
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர!

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே!
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்,
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா!

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா!
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்!
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா!
 கல்லார் என்றும் அவர்தானா-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா!

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்!
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திடப் பணமது தாம்பாக!
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென!
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே!

                               புலவர் சா இராமாநுசம்

Monday, November 26, 2012

கோடி எடுக்கவும் ஆளில்லை கொள்ளி வைக்கவும் ஆளில்லை!



 தாழ்ந்தாய்த் தமிழா தாழ்ந்தாய்நீ
   வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய்நீ
வாழ்ந்தாய் அன்று பலர்போற்ற
   வாழ்கிறாய் இன்று பலர்தூற்ற
சூழ்ந்ததே உன்னைப் பழிபாவம்
   சொன்னால் எதற்கு வீண்கோவம்
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
    அடிமையா? வருமா இனிவேகம்

அல்லல்   பட்டவர்  ஆற்றாது 
    அழுகுரல் உனக்குக் கேட்கலையா
கொல்லப் பட்ட உடல்தன்னை
    குழியில் புதைப்பதை பார்கிலையா
சொல்லப் பட்டது மிகையில்லை
    சொன்னதே சேனல் துயரெல்லை
உள்ளம் உண்டா இல்லையா
    உண்மைத் தமிழா சொல்லையா

ஓடிஓடி தேடுகி  றார்தம்
     உறவினர் உடலைத் தேடுகிறார்
ஆடிப் போகுதே நம்உள்ளம்
    அருவியாய் கண்ணீர் பெருவெள்ளம்
தேடி எங்கும் தெருத்தெருவாய்த்
   திரியும் அவர்நிலை கண்டாயா
கோடி எடுக்கவும் ஆளில்லை
   கொள்ளி வைக்கவும் ஆளில்லை

வேண்டாம் தமிழா வேண்டாமே
     வேதனை தீரா ஈண்டாமே
கூண்டாய் இறந்து போவோமாகை 
     கூலிகள் உணர  சாவோமா
மாண்டார் மானம் காத்தாரே
      மற்றவர் பின்னர் தூற்றாரே
ஆண்டோம் அன்று இவ்வுலகே
     அடைவோம் இன்று அவ்வுலகே
          
          வருவீரா????  எழுவீரா?????
                      அன்பன்
                   புலவர் சா இராமாநுசம்
    
         சேனல் நான்கைக் கண்டு எழுதியது

மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பகசே பாவீநீர்



மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் 
மகிழும் பகசே பாவீநீர் 
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் 
மீள ஆட்சி புரிவாரே 
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில் 
வீணில் படுவீர் அலங்கோலம் 
பூண்டே அற்றுப் போவீரே-இந்த 
புலவனின் சாபம் ஆவீரே 

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம் 
கெட்டவ உன்னை விடுவதில்லை 
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப் 
பழியும பாவமும் பின்னாலே 
விட்டதாய் நீயும எண்ணாதே-மேலும் 
வேதனை எதையும் பண்ணாதே 
நீ 
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி 
தோல்வியே உனகுலம விளங்காதாம் 

அல்லல் பட்டு ஆற்றாது-அவர் 
அழுத கண்ணீர் கூற்றாக 
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல் 
வாங்கி யாவது படித்தீரா 
கொல்லல் உமக்குக் தொழிலென்றே-உலகம் 
கூறச் செய்தீர் மிகநன்றே 
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து 
வீழப் போவது நீங்கள்தான் 

புலவர் சா இராமாநுசம்

Sunday, November 25, 2012

விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்

 மாவீரர் நினைவாக...


எண்ணில்லாப் புதைகுழிகள் ஈழ மண்ணில்-எம்
     இதையத்தை இரணமாக்க ஆறாப் புண்ணில்
மண்ணெல்லாம் அள்ளிவந்து அதனமேல் தூவி-அதை
      மேன்மேலும் கிளறிவிடும் செயலை மேவி
கண்ணில்லாக் சிங்கள கயவர் நாளும்-அங்கே
     காட்டுகின்ற அடக்கமுறை வெறியாய் மூளும்
விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து
     விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்!

அற்பனுக்கு வந்திட்ட வாழ்வு தானே-இன்று
      அடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே!
பொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ
       புற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்!
கற்பனையாய் எண்ணாதே கடியும் படுவாய்-தேடி
      காலன்தான் வருகின்றான்  மடிந்தே விடுவாய்
சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என
      சொலகின்ற புலவனது சாபம் இதுவே!


எத்தனையோ உயிர்தன்னைப் பறித்தாய் நீயே-ஐ.நா
      இயம்பியதோர் கணக்கதனைத் தாண்டும் மெய்யே
சித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த
      சிங்களமே உன்னாலே முற்றும் அழியும்
இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
      எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை
புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
      போதனையை அறிவாயா? வேண்டாம் மமதே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...