நீலம் புயலும் வந்தாயே –மக்கள்
நிம்மதி இழக்கத்
தந்தாயே!
காலன் வருவதாய் ஆயிற்றே-பெரும்
காற்றொடு மழைவர
போயிற்றே!
ஆலம் விழுதொடு ஆடியதே –கடல்
அலைகள் ஊருக்குள்
ஓடியதே!
சீலம் ஆல்ல உன்செயலே – ஏன்
செய்தாய் இப்படி
வன்புயலே!?
வாழைகள் முறிந்து வீழ்ந்தனவே –உழவர்
வயிரும் பற்றி
எரிந்தனவே!
ஏழைகள் குடிசைகள் அழிந்தனவே-அவர்
இருவிழி
நீரைப் பொழிந்தனவே!
பேழையுள் பாம்பென முடங்கினரே-ஏதும்
பேசவும்
வழியின்றி அடங்கினரே!
கோழைகள் அவராம் என்செய்வார்-உதவி
கொடுத்தால்
தானே! இனிஉய்வார்!
விளைந்த நெல்லும் மூழ்கியது –நாற்றும்
வேரெடு எங்கும்
அழுகியது!
வளைந்த கதிர்நெல் கொட்டியதாம்-இனி
வாழ்வே
உழவர்க்கு எட்டியதாம்!
தளர்ந்தவன் கைகள் மடங்கிவிடின்-உலகம்
தாங்குமா
பசிபிணி ஓங்கிவிடின்!
களைந்திட வேண்டும் அரசிதனை –உடன்
கடமையாய் எண்ணி
அரசதனை!
புலவர் சா
இராமாநுசம்