Thursday, October 18, 2012

இன்றென் பிறந்த நாளாம்! எண்பத்தி ஒன்றும் ஆக !




எண்பதும்  நிறைந்து  போக-வயது
   எண்பத்தி ஒன்றும் ஆக
நண்பரே! வாழ்த்தும் நன்றே நாளும்
  நலம்பெற சொல்வீர் இன்றே
உண்பதும் குறைத்துக் கொண்டேன் நல்
   உடல்நலம் பேணக் கண்டேன்
பண்புடைய உறவே பெற்றேன் வலை
   பதிவரால் உவகை உற்றேன்

உள்ளுவ உயர்வு என்றே முன்னோர்
   உரைத்திட்ட வழியில் சென்றே
கொள்ளுவ கொண்டேன்  வாழ ஐயா
   குறையின்றி மகிழ்வும் சூழ
எள்ளுவார் எள்ளும் போதும் நான்
    எண்ணிய தில்லை ஏதம்
வள்ளுவர் வழிதான் வாழ்வாம் அவ்
    வழிமாறின் வருதல் தாழ்வாம்

வரவுக்கும்  ஏற்ற செலவே என
    வாழ்ந்ததால் துன்பம் இலவே
உறவுக்கும் கைகொ டுப்பேன் என்
   உரிமைக்கும் குரல் கொடுப்பேன்
கரவுக்கும் இடமே இன்றி-நல்
    கடமையில் உள்ள மொன்றி
பொறுமைக்கும் இடமே தந்தேன் வீண்
   புகழெனில் ஒதுங்கி வந்தேன்

உற்றவள் துணையால் தானே வாழ்வில்
   உயர்வினை அடைந்தேன் நானே
பெற்றநல் பிள்ளைகள் பெண்கள் தினம்
    பேணிடும் என்னிரு  கண்கள்
கற்றவர் கடமை என்றே அவர்
   காத்திட நானும் இன்றே
நற்றமிழ் கவிதை தன்னை மேலும்
    நல்கிடச் செய்தார் என்னை

                     புலவர் சா இராமாநுசம்


Tuesday, October 16, 2012

இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே!




கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
    கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
   தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
    ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
    நிம்மதி ஏற்பட செய்வீரா?

பட்டப் பகலில் நடக்கிறதே-பெரும்
    பணமே கொள்ளை! அடிக்கிறதே!
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறதே!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
    திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!


வலையைக் கொண்டே தினத்தோறும்-தன்
     வாழ்வை நடத்திடக் கடலோரம்
அலையைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையே தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையா! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

தொழிலே இன்றி வாழ்கின்றான்-மனத் 
     துயரால் குமுறி அழுகின்றான்
விழிநீர் வழிய வேண்டுகின்றான்-மின்
    வெட்டை நீக்கென தொழுகின்றான்
வழியே இல்லையே இனிவாழ-அவன்
     வாழ்வில் இருளே நனிசூழ
பழிதான் முடிவில் நிலையாகும்-எங்கு
    பார்க்கினும் அமைதி இலையாகும்
     

             புலவர் சா இராமாநுசம்