எண்பதும் நிறைந்து
போக-வயது
எண்பத்தி ஒன்றும் ஆக
நண்பரே!
வாழ்த்தும் நன்றே –நாளும்
நலம்பெற சொல்வீர் இன்றே
உண்பதும்
குறைத்துக் கொண்டேன் –நல்
உடல்நலம் பேணக் கண்டேன்
பண்புடைய
உறவே பெற்றேன் –வலை
பதிவரால் உவகை உற்றேன்
உள்ளுவ
உயர்வு என்றே –
முன்னோர்
உரைத்திட்ட வழியில் சென்றே
கொள்ளுவ
கொண்டேன் வாழ –ஐயா
குறையின்றி மகிழ்வும் சூழ
எள்ளுவார்
எள்ளும் போதும் –நான்
எண்ணிய தில்லை ஏதம்
வள்ளுவர்
வழிதான் வாழ்வாம் –அவ்
வழிமாறின் வருதல் தாழ்வாம்
வரவுக்கும் ஏற்ற செலவே –என
வாழ்ந்ததால் துன்பம் இலவே
உறவுக்கும்
கைகொ டுப்பேன் –என்
உரிமைக்கும் குரல் கொடுப்பேன்
கரவுக்கும்
இடமே இன்றி-நல்
கடமையில் உள்ள மொன்றி
பொறுமைக்கும்
இடமே தந்தேன் –வீண்
புகழெனில் ஒதுங்கி வந்தேன்
உற்றவள்
துணையால் தானே –வாழ்வில்
உயர்வினை அடைந்தேன் நானே
பெற்றநல்
பிள்ளைகள் பெண்கள் –தினம்
பேணிடும் என்னிரு கண்கள்
கற்றவர்
கடமை என்றே –அவர்
காத்திட நானும் இன்றே
நற்றமிழ்
கவிதை தன்னை –மேலும்
நல்கிடச் செய்தார் என்னை
புலவர் சா இராமாநுசம்