Friday, September 7, 2012

வந்தாரை வரவேற்று வாழும்தமிழ் நாடே-உலா வந்தவரை விரட்டியது சிந்திக்கா கேடே!


வந்தாரை வரவேற்று வாழும்தமிழ் நாடே-உலா
    வந்தவரை விரட்டியது சிந்திக்கா கேடே
நொந்தாராய் திரும்பினாராம் அன்னவரும் வீடே-நல்
    நோக்கமல்ல! நோக்கிடுவீர்! நோக்கின்எதிர் கேடே!

அவரென்ன செய்தார்கள் விரட்டிவிட அங்கே-பாவம்
    ஆண்டவனை வணங்குதற்கே வந்தவராம் இங்கே
தவறென்ன செய்தார்கள் தாக்கியவர் ஓட-அழகுத்
    தமிழ்ப்பேசக் கண்டோமே! எண்ணியதேன்? சாட

அப்பாவி மக்களிடம் நமக்கென்ன கோபம்-வெறும்
    ஆத்திரத்தில் விரட்டுவது அறியாமை! பாவம்!
அப் பாவி பக்சேவும் வருகின்றான் தடுப்போம்-நாம்
    அனைவருமே ஒன்றாகி அறப்போரும் தொடுப்போம்!

ஒற்றுமைக்கே நம்மிடையே வழியில்லா தன்மை-காலம்
    உணர்த்தியதே பல்வகையில் அறிந்திட்ட உண்மை!
பெற்றதென்ன இதனாலே! ஆய்திடவும் வேண்டும்-மேலும்
    பெரிதாக்கி இனியேனும் செய்யாதீர் மீண்டும்!

போர்குற்ற வாளியென  ஐ.நா வும சொல்ல-ஆய்ந்து
    புகன்றபின்னும் வருகின்றான் துணிவுமிக கொள்ள
யார்குற்ற வாளியிங்கே எண்ணிடவோம் ஈண்டும்-ஈழம்
    யாராலே அழிந்ததென ஆய்வோமா யாண்டும்!

யாதுமெம தூரென்றே வாழ்ந்தவனே தமிழன்-உலகில்
   யாவருமே கேளீரென வாழ்ந்தவனே தமிழன்!
தீதுமென எவருக்கும் செய்தறியாத் தமிழன்-எட்டுத்
    திசைநோக்கி ஓடுவதா? ஐயகோ! தமிழன்!

அரக்கனவன் வருகைதனை தடுக்கவென வாரீர்-இங்கே
    அனைவருமே இணைந்தரென சொல்லவென சேரீர்
இரக்கமிலா கொடுங்கோலன் வந்துவிட்டே செல்ல-நாம்
    இடங்கொடுத்தால்! இழிவாகும் உலகமெல்லாம் சொல்ல

எண்ணிடுவீர்! இணைந்திடுவீர்! உலகமதும் காண-எனில்
    எள்ளல்தான் மிஞ்சிடுமே உள்ளமிக நாண
திண்ணியராய் செயல்படுவீர் நாம்தமிழர் என்றால்-உடன்
    தேவையிது வெற்றிபெற சேர்ந்தின்றே நின்றால்...!

              செய்வீரா?  

                         புலவர் சா இராமாநுசம்

Thursday, September 6, 2012

எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்




மீண்டும்  மீண்டும்  வருகின்றான்-நம்
     மீனவர் வலையை அறுக்கின்றான்
 தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
     துயரக் கண்ணீர் வடிக்கின்றார்
 ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
    எனினும் பழைய காட்சியதே
 வேண்டும் துணிவு அதுவொன்றே-அவர்
    வேதனை போக்கும்  வழியின்றே


எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
    எடுபிடி யாக  ஆவார்கள்
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
    மேலும் போவது அவமானம்
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
     புத்தரே சொல்லினும் கேளாரே
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
    எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்


ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
   அம்மா   அவர்கே   கதியாரே
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
   கொடுப்பீர் மத்திக்கு இதுபோதே
மீறினால் வருமே போராட்டம்-என
    மத்தியில் ஆள்வோர் உணரட்டும்
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
    மக்களை அரசே திரட்டட்டும்

பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
  பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்
அடித்தான் இன்றும் தொடர்கதையா-இந்த
  அவலம் மீனவன்  தலைவிதியா
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
  தமிழக அரசே உடன்ஒல்லை
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
  எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை

                   புலவர் சா இராமாநுசம்  

Wednesday, September 5, 2012

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதையும் வேண்டுகோளும்!

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

Monday, September 3, 2012

விதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்



சொந்தம் என்றே ஏதுமிலை –சிலர்
   சொல்லும் சொற்களில் பொருளில்லை
பந்தம்  பாசம் எல்லாமே-பெரும்
    பணமும் வந்தால் சொல்லாமே
அந்தம் ஆகிடும் அறிவீரே-இந்த
    அவனியில் நடப்பதாம் புரிவீரே
சிந்தனை செய்வீர் மானிடரே-இதை
    செவியில் ஏற்றால் ஏனிடரே

பிறந்த உடனே அழுகின்றோம்-இனி
   பிறவா நிலைதர தொழுகின்றோம்
இறந்தால் மண்ணொடு கலக்கின்றோம்-அது
   இயற்கை என்றே உரைக்கின்றோம்
சிறந்தார் இவரெனச் செப்பிடவே-நம்
   செயலைக் கூறியே ஒப்பிடவே
மறைந்தார் அடடா இன்றென்றே-மக்கள்
    மதிக்க மறைதல் நன்றின்றே


வந்தவர் அனைவரும் போவதுவே-இயற்கை
    வகுத்த நிலையென ஆனதுவே
நிந்தனை பேசிட ஏதுமில்லை-இங்கே
    நிலையென இருப்பவர் எவருமில்லை
சந்தையில் கூடும் கூட்டமென-மனித
    சரித்திரம் கலைந்து ஓட்டமென
மந்தையுள் மாடென வாழ்கின்றோம்-தேடி
    மரணம் வரவும் வீழ்கின்றோம்


இதுதான் வாழ்க்கை இன்றுவரை-இதில்
    ஏற்றமும் தாழ்வும் வருமேமுறை
எதுதான் வாழ்வென அறிவோமே-அதில்
    ஏற்புடை தன்னை ஏற்போமே
மதிதான் நல்வழி கண்டிடவும்-நம்
   மனமே அவ்வழி விண்டிடவும்
விதிதான் வலிதென ஆயாதீர்-வரும்
   வினையெனச் சொல்லி ஓயாதீர்

                       புலவர் சா இராமாநுசம்