வந்தாரை வரவேற்று வாழும்தமிழ் நாடே-உலா
வந்தவரை விரட்டியது சிந்திக்கா கேடே
நொந்தாராய் திரும்பினாராம் அன்னவரும் வீடே-நல்
நோக்கமல்ல! நோக்கிடுவீர்! நோக்கின்எதிர் கேடே!
அவரென்ன செய்தார்கள் விரட்டிவிட அங்கே-பாவம்
ஆண்டவனை வணங்குதற்கே வந்தவராம் இங்கே
தவறென்ன செய்தார்கள் தாக்கியவர் ஓட-அழகுத்
தமிழ்ப்பேசக் கண்டோமே! எண்ணியதேன்? சாட
அப்பாவி மக்களிடம் நமக்கென்ன கோபம்-வெறும்
ஆத்திரத்தில் விரட்டுவது அறியாமை! பாவம்!
அப் பாவி பக்சேவும் வருகின்றான் தடுப்போம்-நாம்
அனைவருமே ஒன்றாகி அறப்போரும் தொடுப்போம்!
ஒற்றுமைக்கே நம்மிடையே வழியில்லா தன்மை-காலம்
உணர்த்தியதே பல்வகையில் அறிந்திட்ட உண்மை!
பெற்றதென்ன இதனாலே! ஆய்திடவும் வேண்டும்-மேலும்
பெரிதாக்கி இனியேனும் செய்யாதீர் மீண்டும்!
போர்குற்ற வாளியென ஐ.நா வும சொல்ல-ஆய்ந்து
புகன்றபின்னும் வருகின்றான் துணிவுமிக கொள்ள
யார்குற்ற வாளியிங்கே எண்ணிடவோம் ஈண்டும்-ஈழம்
யாராலே அழிந்ததென ஆய்வோமா யாண்டும்!
யாதுமெம தூரென்றே வாழ்ந்தவனே தமிழன்-உலகில்
யாவருமே கேளீரென வாழ்ந்தவனே தமிழன்!
தீதுமென எவருக்கும் செய்தறியாத் தமிழன்-எட்டுத்
திசைநோக்கி ஓடுவதா? ஐயகோ! தமிழன்!
அரக்கனவன் வருகைதனை தடுக்கவென வாரீர்-இங்கே
அனைவருமே இணைந்தரென சொல்லவென சேரீர்
இரக்கமிலா கொடுங்கோலன் வந்துவிட்டே செல்ல-நாம்
இடங்கொடுத்தால்! இழிவாகும் உலகமெல்லாம் சொல்ல
எண்ணிடுவீர்! இணைந்திடுவீர்! உலகமதும் காண-எனில்
எள்ளல்தான் மிஞ்சிடுமே உள்ளமிக நாண
திண்ணியராய் செயல்படுவீர் நாம்தமிழர் என்றால்-உடன்
தேவையிது வெற்றிபெற சேர்ந்தின்றே நின்றால்...!
செய்வீரா?
புலவர் சா இராமாநுசம்