Friday, August 17, 2012

அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.!



அன்பின் இனிய உறவுகளே!

                     வணக்கம்!

        அன்று நான் கண்ட கனவு இன்று நினைவாகி வருகிறது.
நேற்று,பதிவர் சந்திப்புக்கான விழாவிற்கு காவல் துறையின் ஒப்புதல் பெற,
நானும் கவிஞர் மதுமதியும்,நண்பர் செயக்குமார் அவர்களும் சென்று
ஒப்புதல் பெற்றோம்!
         இதில், மிகவும் மகிழ்ச்சியான செய்தி, நாங்கள் கொடுத்த
மனுவில், தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் என்ற அமைப்பின் சார்பாக
என்றே குறிப்பிட்டு, கையொப்பமிட்டுக் கொடுத்தோம்
           ஆக, முதற்கண் நமக்கென ஓர் அமைப்பு காவல் துறையில்
தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் பதிவாகி விட்டது.
         இனி, இதனை முறைப்படுத்துவதும், செயல்படுத்துவதும்
வருகைதருகின்ற உங்கள்  கையில்.....!!!
            இதுபற்றி நான் எட்டு திங்களுக்கு முன் எழுதிய பதிவினை
மீள்பதிவாக கீழே வெளியிட்டுள்ளேன் அதுபோது, ஐம்பதிற்கும் மேற்பட்டோர்
ஆதரவு தெரிவித்திருந்தனர்
                                             அன்புடன்
                                           சா இராமாநுசம்

பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

          அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
          விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல
வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில்
அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது
        அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை
சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்
முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை
எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
 
    இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி
சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில்
பதிவு செய்யவேண்டும்
        தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்
என்று சொல்வார்கள்
       நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும்
தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால்
இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை
எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்
 
       உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்
         -----------------------------------------------------------------------------
 என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)
  பெயரிலோ செயல்படலாம்
  
          முதற்கண், இக்கருத்தை ஏற்றுச் செயல்படலாம்,
அமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகின்றவர்கள்  இப் பதிவின்
கீழ் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
         நிறைவாக நீங்கள் ஆதரவு தெரிவித்தால் எப்படி
அமைக்கலாம் என்பதை விரிவாக ஆராயலாம்
        முதலில், அமைப்பு  வேண்டுமா வேண்டாம
 என்பதைத் தெளிவுப் படுத்துங்கள்
            
                           பிற பின்னர்
 





Wednesday, August 15, 2012

பாரதியார் மன்னிக்க வேண்டுகிறேன்




ஆடுவோமே பள்ளுப் பாடு வோமே-மீண்டும்
   ஆனந்த சுதந்திம் தேடு வோமே
எங்கும் சுதந்திரம் என்பது போச்சே-ஆனால்
  எதிலும் சுயநலம் என்பதே ஆச்சே
                 
                                      (ஆடுவோமே)

சங்கு கொண்டே இதனை ஊதுவோமே-நம்
   சமுதாயர்ம் அறிய எடுத்து ஓதுவோமே
இங்குக் காணும் அரிய காட்சியாமே-ஏக
  இந்திய நாடே நல்ல சாட்சியாமே

                                     (ஆடுவோமே)

ஏழையின்  வாழ்விலே ஏற்ற மில்லை-சாதி
   ஏற்றத் தாழ்விலே மாற்ற மில்லை
பேழையுள் உறங்கும் நோட்டுக் கட்டே-விலைப்
    பேசியே வாங்கும் ஓட்டு சீட்டே

                                         (ஆடுவோமே)

ஊற்றாக ஓடுதாம் ஊழல் இங்கே-அதை
   ஒழிப்பதாய் சொல்வாரும் பெறுவார் பங்கே
மாற்றமே இல்லாது இன்றும் என்றும்-இதை
    மாற்றிட வழிதானே  இல்லை ஒன்றும்

                                      (ஆடுவோமே)

  
                  புலவர் சா இராமாநுசம்