Thursday, July 19, 2012

தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத் தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றே


தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத்

     தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl

இனிஈழம் வாழ்நாளின் நோக்கம் என்றே-மேலும்

    இயம்பாதீர்! கலைந்தது வேடம் நன்றே


கனிகேட்டு காய்கவர நினைத்தல் தீதே-உரிய

    காரணம்தான் யாமறியோம் சொல்வீர் யாதே

பனிபட்டு பூக்கருகி உதிரல் போல-ஏனோ

    பதில்சொல்ல இயலாது விழித்தல் சால


உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்

    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!

வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக

     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!


வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்

    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!

நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்

     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!


அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை

    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!

கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்

    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!


உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்

   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!

திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி

    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!



ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்

    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்

கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு

    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!


எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த

    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!

புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது

    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!


                         புலவர் சா இராமாநுசம்









Wednesday, July 18, 2012

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்)

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்
          அதன் விளைவே, நினைவே இக் கவிதை

பொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்
வெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்
கறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்
பிறப்பில் தமிழனா-?ஒழித்திடு என்றே
அழிக்கத் தொடங்கிய அந்நா ளாகும்
செழிக்க வாழ்ந்த ஈழத் தமிழன்
செத்தனர் மூன்று ஆயிரம் ஆமே
எரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்
விரிந்தன கலவரம் இரண்டு மாதம்
அன்றுத் தொடங்கி இன்று வரையில்
கொன்று அழிப்பதேக் கொள்கை யாக
அகதிக ளாக ஈழரின் இரத்தம்
சகதிக ளாக வாழ்வதா நித்தம்
ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
தேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா
பிறந்த நாடும் பிரிந்த உறவும்
மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
மண்ணின் மறவரே நீரே வெல்வீர்
இன்று இல்லை! எனினும் வருநாள்
நன்று வருமே ஈழத் திருநாள்
சித்தம் கலங்க வேண்டாம்! உறுதியே
சிங்களர் அழிந்து பெறுவார் இறுதியே

புலவர் சா இராமாநுசம்

Monday, July 16, 2012

இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!


 ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை!
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே,
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே!


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்!
ஒன்றே சொல்வேன் உழுவாரை-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்வீரே!

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்!
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்,
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ!
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்!

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே!
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
      தவறின் பஞ்சம் ஈண்டமே


                         புலவர் சா இராமாநுசம்