Thursday, June 21, 2012

உதிரிப் பூக்கள் மூன்று!


             மதி!

விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு
   விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்!
மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை
   மழைமேகம் சிலபோது மறைக்கின்ற தாலே!
கண்பட்டே விட்டதென கலங்கிடவும் நெஞ்சம்-அந்த
   கருமேகம் விளையாடி போவதென்ன கொஞ்சம்!
தண்ணென்ற குளுமைதனைத் தருகின்ற நிலவே-நாளும்
   தருகின்ற கற்பனைகள் சொல்வதெனில் பலவே!

            தென்றல்!

தவழ்ந்தோடி வருகின்ற தென்றலெனும் காற்றே-மேனி
   தழுவுகின்ற காரணத்தால் இன்பமது ஊற்றே!
உவந்தோடிப் பெருகிடவும் கரைகாண வெள்ளம்-நன்கு
  உருவாகி உணர்வாகப் பாயுதுபார் உள்ளம்!
சிவந்த்தோடும் வெட்கத்தில் காதலியின் முகமோ-உனை
   செப்பிடவும் ஒப்பிடவும் காதலிக்கும் அகமோ!
தவழ்ந்தாடி வருகின்றாய் தென்றலெனும் சேயோ-இன்பத்
   தமிழ்போல எமைநாடி தொடுகின்ற தாயோ!

          நினைவு!


கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
   கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
   தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
   சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
   குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை

               புலவர் சா இராமாநுசம்
       

       இனிய உறவுகளே! நடக்க இருக்கும் பதிவர் சந்திப்புப் பற்றி
       அனைவரும் அறிவீர்கள். எனவே மேலும் இங்கே நான் அதை
       போடத் தேவையில்லை எனக் கருதுகிறேன்
                           ஆனால் 
                ஒரு முக்கிய( திருத்த) அறிவிப்பு
   அக்கூட்டதிற்கு தலைவராக மூத்த பதிவரான சென்னைப் பித்தன்
   அவர்கள இருப்பார்கள். நான் முன்னிலை வகிக்கிறேன். அதுதான 
   முறையானதாகும் சரியானதாகும்.  இது என் விருப்பம் மட்டுமல்ல
                       வேண்டுகோளாகும்
           அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்


                          புலவர் சா இராமாநுசம்
     


Wednesday, June 20, 2012

ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே!

    ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப்பாவே!
    தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத்தில்!
    தானாய் வந்தது அலைபோல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலைபோல!
    வானாய் விரிந்திட சிந்தனைகள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனைகள்!  

    உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந்தாச்சே!
    எண்ண மெல்லாம் வலைப்பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்பூவே!
    போதை கொண்டவன் நிலையுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலைபெற்றேன்!
    பொழுதும் சாய்ந்தே போனதுவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்ததுவே!

    பாதி இரவில் எழுந்திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதிடுவேன்!
    வீதியில் ஒசைவந்தவுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்திடிமே!
    தேதி கேட்டால தெரியாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரியாதே!
    காதில் அழைப்பது விழுந்தாலும-என்
    கவன மதிலே செல்வதில்லை!

    படுத்த படியே சிந்திப்பேன்-என்
    பக்கத் தில்பேனா தாளுமே!
    தொடுக்க நெஞ்சில் இருவரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறைவில்லை!
    அடுத்த வரிகள் காணாதாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணாதாம்!
    எடுத்த பாடல் முடியாதாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயாதாம்!

    அப்பா  வேதனை ஆப்பா-தினம்
    ஆனது என்நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப்பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப்பாவே!
    ஒப்பா யிருந்ததே என்னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனைப் பெருவெள்ளம்
    இப்பா போதும் முடியப்பா-சோர்வு
    எழவே தொடரா படியப்பா!

              புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 19, 2012

போனாய் எங்கே தமிழ்மணமே?


போனாய்  எங்கே தமிழ்மணமே-ஏங்கிப்
   பார்த்திட மறையும் தமிழ்மணமே!
ஆனாய்  என்ன  அறியோமே-எங்கள்
   ஆவலை அடக்க தெரியோமே
தேனாய் இனிக்க வருவாயே-பதிவை
  தேடி  எடுத்துத் தருவாயே!
மானெனப் பாய்ந்து போனதுஏன்-இந்த
   மறையும் நிலைதான் ஆனதுஏன்?


எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
   எதிரியை எதிர்த்து வெல்வாயா?
இங்கே பலரும்  அலைகின்றார்-தினம்
     ஏங்கி  ஏங்கி குலைகின்றார்!
அங்கே தங்கி விடுவாயா-மனம்
     அஞ்சுதே துயரம் படுவாயா?
பங்கே உன்னுடன் நாள்தோறும்-வைத்த
   பதிவரின் துயரை உடன்பாரும்!
 
முன்னே ஒருமுறை இவ்வாறே-துயர்
   மூண்டிடச் செய்தல் எவ்வாறே!
என்னே அருமை கண்மணியே-இது
   ஏற்புடை செயலா தமிழ்மணியே!
பொன்னே என்றுனை காத்திடவும்-தினம்
    போற்றி வரவை நோக்கிடவும்,
மின்னே போலத் விரைந்திடுவாய்-வலை
   மேதினிக் காணத் தந்திடுவாய்!
 
           புலவர் சா இராமாநுசம்
    
  

Sunday, June 17, 2012

சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்

       இனிய உறவுகளே!
                சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப்
     பேராசிரியர், தி வா மெய்கண்டார் அவர்கள் நடத்தும்
     இளந்தமிழன் என்னும் இதழ் பற்றிய விளக்கமும்
                                   வாழ்த்தும்

இளந்தமிழன் என்னுமொரு திங்கள் ஏடே-நல்
   இலக்கியமாய் வருகிறது! இல்லை ஈடே!
உளந்தமிழே மெய்கண்டார் மெய்யே கொண்டார்-பல
   உண்மைகளை உள்ளபடி இதழில் விண்டார்
வளந்தருமே தமிழுக்கும் அவரின் தொண்டே-இதழ்
   வரலாற்றில் தனியிடமே அவருக்   குண்டே
அளந்தறிய இயலாத சிறந்த அன்பே-எதிலும்
   அடக்கம்தான் அவரிடத்து கண்ட பண்பே!

அந்நாளின் செய்திகளை நாமும் அறிய-அவர்
    ஆற்றுகின்ற அரும்பணியை சொல்லல் அரிய
எந்நாளும் படிப்பதற்கு ஏற்ற வகையில்-பல
   எண்ணற்ற சான்றோரின கருத்துக் குவியல்
இந்நாளில் பலர்காண இதழில் வருமே-நம்
   இதயத்தில் தனக்கென்றே இடமும் பெறுமே
பொன்னாக அதைப் போற்றிக் காக்கவேண்டும்-தமிழ்
   பெருமைக்கு அதுமேலும் வளர யாண்டும்!

பயன்கருதா நோக்கமுடன் செய்யும் பணியே-நம்
   பைந்தமிழுக் கழகூட்டும் பொன்னின் அணியே
நயன்தூக்கிக் கட்டுரைகள் எதையும் செய்தே-இதழ்
   நடத்துவதால் பட்டறிவு நாமும் எய்த
சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்-அவர்
   சமுதாய வாழ்வுக்கே தன்னை ஈன்றார்
தமரொன்றே தமிழென்றே வாழும் பெரியார்-ஏதும்
   தன்னலமே இல்லாத தூய்மைக் குரியார்!

தனக்கென்றே தனிப்பாதை வகுத்துக் கொண்டே-இளந்
   தமிழனென இதழ்தன்னில் செய்யும் தொண்டே
மனக்குன்றில் மறையாது வடிக்கும் மொழியே-நம்
   மாத்தமிழின் சிறப்பினைக் காணும் விழியே
எனக்கென்ற சுயநலம் ஏதும் இல்லார்-பலர்
   எண்ணத்தில் மெய்கண்டார் வாழும் நல்லார்
வனக்குயிலாய் முத்தமிழின் இசையே பாட-தமிழ்
   வரலாற்றில் அவர்புகழே நெஞ்சில் ஆட


                      புலவர் சா இராமாநுசம்
                   மேனாள் மாநிலத் தலைவர்
                   தமிழகத் தமிழாசிரியர் கழகம்










இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...