Friday, June 15, 2012

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா?


பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா?
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா?
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-உள்ள
சூழ்நிலை! தனியார் பள்ளிகளே! 

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியரவரே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட!
கனிவாய் அவர்சொலல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே!
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பதும் மறைவது எந்நாளில்!

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே!
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே!
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை!
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதார்!
எனவே,
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா?
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக!
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்!
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 12, 2012

பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ரெட்டியாருக்கு பாராட்டும் வாழ்த்தும்

          பத்மஸ்ரீ விருது பெற்ற இவரின் பள்ளிப்படிப்பு
  நாலாவது மட்டுமே! ஆனால் விவசாயத்துறையில்
  கற்றவர்களை விட மேலான ஆய்வு செய்து, சவுக்கு
  மரங்களையும்,கனகாம்பரப் பூக்கள் பல நிறங்களிலும்,
  பல மடங்கும் அமோக விளைச்சல் தர தன் இயற்கை
  அறிவின் மூலம் ஆய்ந்து வெற்றி கண்டார்
           விவசாய விஞ்ஞானி யான இவரது திறன் கண்டே,
 மத்திய அரசு, படிக்காத மேதையான இவருக்கு இவ் விருதினைத்
 தந்துப் பாராட்டியுள்ளது


 .
 படிக்காத மேதை யெனும் கெட்டியாரே-கூட
    பாக்கத்து விவசாயி ரெட்டி யாரே!
கொடுத்தாரே பத்மஸ்ரீ விருது யின்றே-நம்
    குடியரசு  தலைவரின் கையால் நன்றே!
எடுத்தாராம் உழுதொழிலும் பெருமை காண-ரெட்டி
   இனமக்கள் அனைவருமே மகிழ்ச்சி பூண!
தொடுத்தேனே ரெட்டிமலர் கண்டுப் பாவே-மேலும்
   தொடரட்டும் நல்லாய்வு புதுவைக் கோவே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வா ரென்றே-தம்
   உள்ளத்தில் தெளிவான உறுதி நின்றே!
பழுதுண்டு போனராம் பாடு பட்டும்-அதில்
   பலனின்றி பல்வகையில் மனமே கெட்டும்
தொழுதுண்டு வாழவும் தோன்ற வில்லை-வேறு
  தொழில்செய்ய அனுபவம் ஏது மில்லை!
அழுதுண்டு முடங்கிட எண்ண வில்லை-பல
   ஆய்வுகள்! முயற்சிகள்! உண்டோ! எல்லை!

பூவிலே அவர்கண்ட முயற்சி வெற்றி-சவுக்குப்
    போடுவதில் அவர்கண்ட முயற்சி வெற்றி!
மேவினார் வெங்கட பதியும் வெற்றி-மிக
    மேலான விருதுக்கும் பெற்றார் வெற்றி!
பாவிலே சொல்வதா அவரின் வெற்றி-அவர்
   பள்ளியே வயல்தானே! தந்த வெற்றி!
ஆய்விலே படித்தவரும் காணா வெற்றி-இவர்
   அனுபவம் கண்டதே வெற்றி! வெற்றி!


வருத்தமுற அவர்சொன்ன செய்தி யொன்றே-நம்மை
    வாட்டுகின்ற நிலைதானே கண்டோ மின்றே!
திருத்தமுற ஆய்ந்தேதான் விருது தந்தார்-அங்கே
   தேடிவந்து வாழ்துவரோ? இல்லை! நொந்தார்!
நடிகர்களை! கலைஞர்களை! தேடிச் சென்றே-அரசியல்
   நடிகர்கள்! அலுவலர்! அருகில் நின்றே
பிடிகவெனப் புகைப்படமும் எடுத்துக் கொள்ள-இவர்
  பேச்சற்று நின்றாராம் துயரம் தள்ள!

உலகுக்கே அச்சாணி உழவர் என்றார்-அங்கோர்
   உழவரைத் துச்சமாய் விலக்கிச் சென்றார்!
நிலவுக்கே சென்றாலும் பயனென் உண்டே-பசி
    நீங்கிடச் செய்வது உழவன் தொண்டே!
இலவுக்குக் காத்தகிளி ஆவார் ஒருநாள்-அது
   இன்றல்ல! என்றாலும் வருமே அந்நாள்!
பலகற்றும் கல்லாரே! அறிவார் நன்றே-அழி
    பசிவர அனைத்தும் பறக்கும் அன்றே!

                    புலவர் சா இராமாநுசம்

Sunday, June 10, 2012

நெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை!


தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரி
   தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்!
வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக
    வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்!
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
   போகவில்லை!அறிந்தின்று! சிறுமைப் பட்டோம்!
ஆண்டாரே, ஆள்வோரே எண்ணிப் பாரும்-இந்த
   அவலத்தைப் போக்கவழி விரைந்துக் கூறும்!

ஊராட்சி தலைவரென தலித்தும் வந்தால்-அவர்
    உட்கார நாற்காலி ஒன்று தந்தால்!
பாராட்சி போனதெனல், சாதி வெறியே-நற்
   பண்பல்ல! ஒம்புங்கள் உயர்ந்த நெறியே!
யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
   எண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே!
சீராட்சி நடந்திட வழியே காண்பீர்-சாதிச்
    சிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்!

ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-அது
   ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை!
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
    நிலைப்பது ஒற்றுமை காணும் ஒன்றா?
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை!-நம்முள்
   சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை!
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
   போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்!
   

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என
   உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்!
நன்றேதான்  அதுவென்றே ஏற்றுக் கொண்டோம-நம்
   நாடெங்கும் கொள்கையென பரப்பி விண்டோம்!
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
   இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே!
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
       ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

                         சா இராமாநுசம்