Friday, April 20, 2012

இளமையில் வறுமை இன்னாது!


இளமையில் வறுமை இன்னாது
   இசையின்றிப் பாடல் இன்னாது!
வளமிலா வயலே இன்னாது
   வன்சொல் கூறல் இன்னாது!
அளவிலாச் செலவும் இன்னாது
   ஆயாது செய்தலும் இன்னாது!
களமின்றி ஆடல் இன்னாது
      காதலில் தோல்வியும் இன்னாது!


கூடா ஒழுக்கம் இன்னாது
  குறையேக் காணல் இன்னாது!
வீடே இன்றெனில் இன்னாது
  விவேகம் இன்றெனில் இன்னாது!
ஆடா அரங்கும் இன்னாது
  அன்பிலா இல்லம் இன்னாது!
காடாம் நாடெனில் இன்னாது
  கடமையை மறப்பது இன்னாது!


உழைப்பின்றி உண்பது இன்னாது
  உணராது வாழ்வதும் இன்னாது!
அழைப்பின்றிச் செல்வதும் இன்னாது
  அனுபவ மின்மையும் இன்னாது!
பிழைப்பின்றி வாடுதல் இன்னாது
  பிறனில் விழைதல் இன்னாது!
மழையின்றி பயிரிடல் இன்னாது
   மறதியும் சோம்பலும் இன்னாது!

                          புலவர் சா இராமாநுசம்




Tuesday, April 17, 2012

ஏகும் உயிரும் ஒருநாளே-அதை எண்ணி வாழ்வோம் இந்நாளே!



அச்சம் அகற்றி வாழ்வார்க்கு-வேறு
   அரணே எதுவும் வேண்டாமே!
இச்சை அடக்கி வாழ்வார்க்கு-ஏதும்
    இன்னல் வாரா ஈண்டாமே!
பச்சைக் கீரைக்கும் உப்பின்றி-மிக
    பழைய சோற்றுக்கும் வழியின்றி
பிச்சை எடுத்து வாழ்ந்தாலும்-கல்வி
   பெற்றிட முனைவது நன்றாகும்!


ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்
    இதயம் வேதனைக் கொண்டாலும்!
சான்றோர் பழிக்கும் வினைவேண்டா-என
    சாற்றிய குறளின் வழியிண்டே!
ஆன்றோர் கூறும் நெறிதன்னை-நன்கு
   அறிந்து நடப்பின் துயருன்னை
தோன்றா வகையில் வளந்தருமே-என்றும்
   தோல்வி காணா உளம்பெறுமே!


நல்லார் ஒருவர் உளரானால்-மழை
   நாளும் பெய்யும் பலருக்கும்
வல்லார் வாய்ச்சொல் மறையாகும்-நல்
  வாழ்வில் ஒழுங்கு முறையாகும்
எல்லாம் உடையார் என்றாலும்-வரும்
   எதிர்ப்பை எதிர்த்து வென்றாலும்
பல்லார் போற்றலே வாழ்வாகும்-வீண்
   பழிவர சாற்றிடின் வீழ்வாகும்

ஆகும் காலம் எல்லாமே-நம்
   அருகே வருமே சொல்லாமே
போகும் காலம் என்றாலே-அது
   போகும் எதுவும் இல்லாமே
சாகும் காலம்  தேடிவர-பெற்ற
   சாபமும் பாபமும் ஓடிவர
ஏகும் உயிரும் ஒருநாளே-அதை
   எண்ணி வாழ்வோம் இந்நாளே!


Sunday, April 15, 2012

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்