Friday, April 6, 2012

அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை!


அளவின்றி மருந்தினை உண்பார் இல்லை
   அமிர்தமே ஆனாலும் அதுதான் எல்லை!
வளமில்லா நிலத்தாலே பயனே இல்லை
   வளராது பயிரங்கே!துயரே! எல்லை!
களமின்றி விளையாட்டா? எதுவும்இல்லை
    கண்ணற்றார் துயருக்கு ஏது எல்லை!
உளமின்றி செய்வார்க்கு வெற்றி இல்லை
    உணர்வின்றி நடப்பார்க்கும் அதுவே எல்லை!

பொய்சொல்லி வாழ்வதும் வாழ்வா இல்லை
    புறம்சொல்லி திரிவார்க்கும் வருமே எல்லை!
மெய்சொல்லி வரும்துன்பம் உண்மை யில்லை
    மேதினியில் அவர்வாழ்வே புகழின் எல்லை!
செய்நன்றி மறந்தார்க்கும் உயர்வே யில்லை
     சினம்காக்க தவறினால் அழிவே எல்லை!
தொய்வின்றி உழைப்பார்க்கு தோல்வி யில்லை
     தோற்றாலும் முயற்சிக்கு இல்லை எல்லை!


விதியென்ற சொல்லுக்கு வலிமை இல்லை
     வீணென்று புறந்தள்ளி நடப்பின் எல்லை
மதிவென்று வாழ்வுகுத் தாழ்வேஇல்லை
   மட்டற்ற மகிழ்வுக்கே காணார் எல்லை!
எதுவொன்றும் குறையின்றி ஆயின், இல்லை
     இனிதென்ற சொல்லுக்கு, வாழ்வில் எல்லை!
இதுவென்று சொல்பவர் யாரும் இல்லை
     இவ்வண்ணம் செயல்படின் உண்டோ எல்லை!

                    புலவர் சா இராமாநுசம்
   


Wednesday, April 4, 2012

அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!


கற்றிலன் ஆயினும் கேட்டலும் நன்றே
   கற்றாரின் சொற்களை ஏற்றலும் நன்றே!
பெற்றவர் தமையென்றும் பேணுதல் நன்றே
    பெரியோரைத் துணையாகக் காணுதல் நன்றே!
உற்றவர் துயர்கண்டே நீக்குதல் நன்றே
    உண்மையை மறைக்காமல் உரைப்பதும் நன்றே!
அற்றவர் அழிபசி தீர்தலும் நன்றே
     அன்பேதான் கடவுளாம் அறிவதும் நன்றே!

வழியலா வழிசென்று வாழ்வதும் தீதாம்
    வைதாரைப் பதிலுக்கு வைவதும் தீதாம்!
பழிவர எச்செயலும் செய்வதும் தீதாம்
    பாதகர் தம்முடன் பழகலும் தீதாம்!
இழிகுணம் ஒருவர்க்கு என்றென்றும் தீதாம்
    இல்லாரை எள்ளுதல் மிகமிகத் தீதாம்!
விழியெனக் கல்வியை அறியாமை தீதாம்
    வீண்காலம் போக்குதல் வாழ்வுக்கே தீதாம்!

எண்ணியே எச்செயலும் செய்திட வேண்டும்
     எண்ணாமல் ஆபத்தில் உதவிட வேண்டும்!
கண்ணியம் வார்த்தையில் என்றுமே வேண்டும்
    கடமையைத் தவறாது செய்திட வேண்டும்!
புண்ணியம் எதுவென்று அறிந்திட வேண்டும்
    புகழ்பெறப் பிறரைப் புகழ்ந்திட வேண்டும்!
பெண்ணினம் தன்னையே போற்றிட வேண்டும்
     பிறர்வாழ தான்வாழ நினைத்திட வேண்டும்!

                      புலவர் சா இராமாநுசம்



Monday, April 2, 2012

யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே!


யாதும் ஊரே யாவரும் கேளீர்!
ஓதினான் அன்றே புலவன் நன்றே
கோதில் அன்னோன் கூற்றை ஏற்றே
மேதினி அறியதன் மேன்மையை சாற்றே!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!
சேதியை எடுத்தும் செப்பினான் அவனே!
நோதலும் தணிதலும் அதுபோல் என்றே
நுவன்றவன் அவனே! மேலும் நன்றே!


இப்படிப் பல்வகைக் கருத்துகள் கொண்டே
ஒப்பிட இயலாத் தமிழில் உண்டே!
செப்பிட முடியா இலக்கியப் பாடல்
எப்படி யேனும் படித்திட வேண்டும்!


பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல என்றே வகுத்தனர் இலக்கணம்!
பிழையென எதையும் தள்ளுதல் வேண்டா
விழைவன தவறெனில் கொள்ளுதல் வேண்டா!


உள்ளுவ தெல்லாம் உயர்வென இருப்பின்
எள்ளும் நிலையே என்றும் வாரா!
தெள்ளிய தமிழில் திருமறை வடித்த
வள்ளுவன் வகுத்த வழிதனில் செல்வீர்!


ஏதிலார் குற்றம் கண்டது போதும்
வாதமே செய்து வாழ்ந்தது போதும்!
சோதனைப் பற்பல! மோதும் போதும்
சாதனைச் செய்திட முனைவீர் ஏதும்!


இரவும் பகலுமாம் இன்பம் துன்பம்!
வரவும் போதலும் வழிவழி யாகும்!
உறவும் உணர்வும் ஒன்றிடவாழின்
துறவும் வேண்டா துன்பமும் தீண்டா!


நல்லன செய்தே நலமிக வாழும்
அல்லன நீக்கி அறமது சூழும்
வல்லமை ஒன்றே! வாழும் வழியாம்!
இல்லறம் காக்கின் இல்லை பழியாம்!

                                   புலவர் சா இராமாநுசம்