Saturday, March 31, 2012

மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே!


மின்சார சுடுகாடு இனிமேவேண்டா-வீடே
     மின்சார சுடுகாடாம் ஆமேஈண்டே
பொன்போல கட்டணமே விண்ணைமுட்ட-மற்ற
     பொருள்களின் விலையேற்றம் கண்ணீர்சொட்ட
என்செய்வர் மக்களும் அம்மாயம்மா-மேலும்
     அடிமேலே அடியா சும்மாயம்மா!
மின்சாரக் கட்டணம் குறைப்பீரம்மா-இந்த
     மின்வெட்டே! வாட்டுவது, போதுமம்மா!

நாதியின்றி வாழ்பவர் நாட்டிலின்றே-இன்று
    நடுத்தர குடும்பங்கள் பாவமன்றே!
வீதியிலே இறங்கிவர இயலாரென்றே-இந்த
    வேதனையா? எண்ணுங்கள்! செய்வீர்நன்றே!
பாதிக்கும் பலவகையில்! பாருமம்மா-அப்
    பாவிகளின் துயரத்தைத் தீருமம்மா!
நீதிக்கும் குரல்கொடுக்க துணியமாட்டார்-இரவு
     நிம்மதியும் இல்லாமல் உறங்கமாட்டார்!

பணக்காரர் இதுபற்றி  கவலைகொள்ளார்-இங்கே
    பரமயேழைக்கும் இலவசம்! தொல்லையில்லார்
கணக்காக செலவுதனை திட்டமிட்டும்-மாதக்
     கடைசியிலே கடன்வாங்கித் துயரப்பட்டும்
பிணமாக உயிரோடு நடக்கப்பலரும்-வாழும்
    பேதைகளாம் நடுத்தரமே! பொழுதாபுலரும்!?
குணமான குன்றேறி நின்றாரவரே!-அவர்
    கொதித்தாலே எதிர்வந்து நிற்பாரெவரே!

வெந்துவிட்ட  புண்ணிலே வேலும்பாயா-மேலும்
    வேண்டுமா?முயல்வீரே! நாளும் ஆய!
நொந்துவிட்டார் ஏற்கனவே அறிவீர்நீரே-அந்த
     நோக்காடே தீரவில்லை! இதுவும்வேறே
வந்துவிட்டால் துயர்நீங்க வழியேயில்லை!-எதிர்
    வரலாற்றில் என்றென்றும் பழியேயெல்லை!
கந்துவட்டி மேலாகும் இந்தவுயர்வே-எம்மைக்
    கடங்காரன் ஆக்காதீர் கருணைகாட்டும்!

                        புலவர் சா இராமாநுசம்
   

Thursday, March 29, 2012

காலம் ஓடும் நிற்காதே-வீண் காலம் கடத்தல் ஆகாதே!


காலம் ஓடும் நிற்காதே-வீண்
  காலம் கடத்தல் ஆகாதே!
ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
   நடப்பது இயற்கைப் பேராலே
ஆலம் கூட மருந்தாகும்-தூய
  அன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
   கொள்கை அழகு! பேசலுக்கு

திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
   தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
   பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
    கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
   எண்ணா செயல்தரும் துயரன்றோ

மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
   மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
   சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
   குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
   சிந்தனை தன்னில் ஆழ்வோமே

வையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
   வாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
    சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
   உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
   பூமியில் புகழச் சொல்லேது!

                   புலவர் சா இராமாநுசம்


Wednesday, March 28, 2012

ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே!



ஆசிரியர் பணியாற்றப் படித்துவிட்டே-இன்று
   அறைப்பட்டுக் கன்னத்தில் வேலைகேட்டே
கூசுகின்ற காட்சியினை திரையில்கண்டேன்-மனம்
   கொதிப்படைய இக்கவிதை இங்கேவிண்டேன்
மாசுதரும் இசெயலே காவல்துறைக்கே-ஆளும்
    மாண்புகளும் பெறுவாராம் இதிலேபங்கே!
பேசுகின்றார் மக்கள்மிகத் துயரப்பட்டே-கறைப்
   போக்கிடவும்? துடைப்பீரா வருத்தப்பட்டே!

ஏணியாக அனைவரையும் ஏற்றிவிட்டே-வாழ்வில்
    என்றென்றும் வறுமையே நாளும்பட்டே
கேணியாக ஊருக்கே நீரும்தந்தார்-இன்று
    கேவலமாய்த் தள்ளிவிட அந்தோ!நொந்தார்!
தோணியாகக் கரைதனிலே ஏற்றிவிட்டே-இன்று
     துயரமெனும் தீயாலே எரியும்பட்டே
நாணுகின்ற நிலைதானே நெஞ்சில்கொண்டேன்-ஐயா
     நானுமொரு ஆ, சி(றி)ரியன் எனவேவிண்டேன்

நாட்டுக்கே கோவலமாம் இந்தக்காட்சி-மிக
     நல்லோரே சொல்லுங்கள் இதுவாமாட்சி
கேட்டுக்க ஆளில்லை! எண்ணவேண்டா-இந்தக்
    கொடுமைக்கே இனியேனும் எல்லைஉண்டா
ஓட்டுக்கு வரும்போது உரைப்பதென்ன-அதை
    உணராது நடப்பதும் என்னஅன்ன?
பாட்டுக்கே வேண்டியிதை எழுதவில்லை-பாதை
    பழுதின்றி சென்றாலே வாரதொல்லை!

                         புலவர் சா இராமாநுசம்




   
      

Monday, March 26, 2012

வலையின் வயது ஒன்றாகும்!


வலையின் வயது ஒன்றாகும்-நீர்
    வாழ்த்திடப் பிறந்தது இன்றாகும்
இலையில் தெளித்த முத்தாகும்-அது
    இதயத்தில் வாழும் சொத்தாகும்
அலையில் மிதக்கும் கலமாகும்-என்
    அகமே விளையும் நிலமாகும்
நிலையில் வாழ்வில் நிலையாகும்-உயிர்
    நீங்கிடின் கவிதைக் கலையாகும்


எட்டுத் திக்கிலும் உள்ளாராம்-என்
   இதயம் கவர்ந்த பல்லோராம்
தட்டித் தட்டி வளர்த்தாரே-நல்
   தமிழாம் பண்பின் உளத்தாரே
மொட்டுள் உள்ள மணம்போல-நாசி
   முகரத் தந்தார் தினம்போல
கட்டிக் காத்தார் என்வலையே-ஏதும்
    கவலை என்றும் எனக்கிலையே!

இளமைப் பருவம் போயிற்றாம்-என
    இதயம் இளமை ஆயிற்றாம்
வளமைத் தந்தாள் தமிழன்னை!-மேலும்
    வாழ வைப்பதும் அவளென்னை
உளமே மகிழ இதனாலே-கவிதை
    உருவாய் பிறந்திடும் அதனாலே
களமே! கணிணீ! ஆனாயே-என்
   கவிதை வளர்ப்புத் தாய்நீயே!

எப்படி ஓடின பலநாளும்-அது
   எனக்கும் தெரியா! வருநாளும்
இப்படிப் போனால் அதுபோதும்!-கவிதை
    எண்ணத்தில் நாளும் அலைமோதும்
தப்படி வாழ்வில் வைத்ததில்லை-நான்
    தனக்கென எதையும் சொன்னதில்லை
செப்பிட மேலும் ஏதுமிலை-என்
    சிந்தையில் அணுவும் தீதுமிலை!

               புலவர் சா இராமாநுசம்