Saturday, March 24, 2012

ஒன்றென நாம்தான் ஆவோமா?-ஈழம் உருவாய் மலர்ந்திடச் செய்வோமா?



நன்றது ஓட்டுமே நல்கிவிட்டீர்-சற்று
    நம்பிக்கைப் பெற்றிட வைத்துவிட்டீர்
சென்றது பழியும் ஓரளவே-நாம்
   செய்ய வேண்டுவ பேரளவே
கொன்றவன் தலையும் சாய்ந்திடவே-கொலைக்
   கூண்டிலே அன்னோன் மாய்ந்திடவே
இன்றுமை இங்கேப் போற்றுகின்றேன்-ஏக
    இந்தியா நிலைத்திட சாற்றுகின்றேன்

இத்துடன் முடியும் கதையல்ல!-தமிழ்
   இனமது வாழ்ந்திட மிகநல்ல
சித்தமே கொள்வீர் மத்தியிலே-ஈன
   சிங்களர் உணர்ந்திட புத்தியிலே!
பத்தொடு ஒன்றும் இதுவல்ல-அந்தப்
   பாவிகள் அறியார் பதில்சொல்ல
எத்தனைக் குண்டுகள் பெய்தாரே-ஈழ
   இனமே அழியச் செய்தாரே!

நான்தான் என்பார் சிலபேரே-கபட
   நாடகம் என்பார் சிலபேரே
ஏன்தான் இப்படிப் பேசுவதோ-நல்
   இதயம் வருந்திக் கூசுவதோ?
தான்தான் எல்லாம் இனியென்றே-வரும்
   தலைகனம் நீக்கி நனிநன்றே
ஒன்றென நாம்தான் ஆவோமா?-ஈழம்
   உருவாய் மலர்ந்திடச் செய்வோமா? 
               
               புலவர் சா இராமாநுசம்




   

Friday, March 23, 2012

நியாயம் தானா அம்மாவே!

 நேற்று ஊடகங்களில் மக்கள் நலப் பணியாளர்
  பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டதின்
             விளைவே இம், மீள்பதிவு!

நியாயம் தானா அம்மாவே-இது
   நியாயம் தானா அம்மாவே
ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்
   ஆணையில் நீக்கினீர் சும்மாவே
தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
   தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்
ஆயன உடனே செய்வீரா-நீக்க
   ஆணயை இரத்தும் செய்வீரா?

நீதி கேட்டே அலைகின்றார்-தம்
   நிலையை எண்ணிக் குலைகின்றார்!
வீதியில் புரண்டே அழுகின்றார்-உமை
   வேதனை நீக்கத் தொழுகின்றார்!
நாதியில் அவர்கே எண்ணுங்கள்-உடன்
   நலன்பெற வழியும் பண்ணுங்கள்
சாதியில் ஏழைகள் அனைவருமே-அவர்
   சந்ததி வாழ்ந்து நலம்பெறுமே!

தவறா செய்தார் அன்னவரே-வேலை
    தந்தது ஆண்ட முன்னவரே!
இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
    எதற்கு இந்த முன்கோபம்
சுவரா என்ன இடித்துவிட-ஒரு
    சொல்லில் வாழ்வை முடித்துவிட
அவரால் வாழ இயலாதே-அவரை
    அநாதை ஆக்க முயலாதீர்

இரண்டு முறையேப் பட்டார்கள்-பாபம்
   இனியும் தலையில் குட்டாதீர்
திரண்டு உதிக்கும் கண்ணீரே-அவர்
   தினமும் வடிக்க பண்ணீரே
மிரண்டு ஓடும் மாடாக-உடல்
   மேலும் வற்றிக் கூடாக
வரண்டு போகும் அவர்வாழ்வே-இனி
   வாழ்வதும் தாழ்வதும் உம்கையில்!

                  புலவர் சா இராமாநுசம்


      

Thursday, March 22, 2012

கூடங்குளம் நமக்கெல்லாம் கூறுவதும் முக்காலும்!


நாடகமே உலகமென
      நவின்றதுவும் அக்காலம்!
பாடகரும் பாடியதை
      பயின்றதுவும் பிற்காலம்!
ஊடகங்கள் ஏடகங்கள்
      உணர்த்துவதும் தற்காலம்!
கூடங்குளம் நமக்கெல்லாம்
      கூறுவதும் முக்காலும்!

மாதக்கணகாக அங்கே
      மாதர்களும் போராட
ஆதரவு காட்டியவர்
      அம்மம்மா கைவிட்டார்!
சேதமில்லை என்றின்றே
      செப்பிவிட்டார்! ஒப்பிவிட்டார்!
வாதமென்ன செய்வாரா?
      வாயில்லா மக்களவர்!

ஊக்கம் கொடுத்தவரும்
    உற்றதுணை என்றவரும்
நோக்கம் என்னவென
     நோக்கவில்லை! அம்மம்மா!
காக்கும் கரமின்றே
      கைவிரித்து விட்டதம்மா!
ஆக்கம் அறியாதவர்
      அழுதமனம் தவிக்குதம்மா!

வேலியேப் பயிர்மேய
      விட்டகதை ஆயிற்றே
கூலிதந்து சூனியத்தை
     கொண்டநிலை ஆயிற்றே
காலிரண்டைக் கட்டிவிட்டும்
     கண்களையும்  கட்டிவிட்டும்
மேலிருந்து தள்ளிவிடும்
      மே(ல்)தாவி அரசியலே!
           வாழ்க!

             புலவர் சா இராமாநுசம்



   

Tuesday, March 20, 2012

மதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை!மேலும்,


மதில்மேல் பூணை நிலைபோலும்-நம்
   மத்திய அரசின் நிலை!மேலும்
புதிர்போல் பதிலும் தோன்றிடுமே-ஐயம்
   புகுந்திட மனதில் ஊன்றிடுமே!
எதிலும் இதுவே வாடிக்கையா-என
   எண்ணிட செய்வது வேடிக்கையா
பதிலில் குழப்பமே! தெளிவில்லை!-எங்கள்
   பாரதப் பிரதமரே! இதுஎல்லை!


முழுவதும் அரசுக்குக் கிடைக்கிலையா-அன்றி
   முழுமனம் கொண்டிட இடமிலையா
அழுவது போலிது நாடகமா-பதில்
    அளித்தது எதற்கோ? பூடகமா!
தொழுவது எல்லாம் முடிந்தகதை-இங்கே
    தோன்றும் மற்றோர் இடிந்தகரை!
எழுவது தடுத்திட முனைவீரே-ஓட்டு
    இலங்கைக்கு எதிர்ப்பாய் தருவிரே!


சென்றது சென்றன ஆகட்டும்-நாம்
   செய்தன பாபம்! போகட்டும்!
கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
    கொடியோர் செய்தது? பல்லாயிரமா!
இன்றென வந்தது சிறுவிடிவே!-இதில்
   எடுப்பீர் பிரதமரே நல்முடிவே!
நன்றென உலகம் வாழ்த்தட்டும்-தமிழ்
    நாடும் மகிழ்ந்து போற்றட்டும்!

              புலவர் சா இராமாநுசம்
 

Monday, March 19, 2012

பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்தப் பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!


பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
    பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
   பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
    தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
    வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்

சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
    செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
    உள்ள நிலைமை இதுவாகும்!
செலவும் வரவும் அறியோமே-எடுத்து
    செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
   ஆகுமோ? என்றே குலைகிறதே!

பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
  பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
   அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
   போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
   இயல்பாய் நமக்கும் போனதுவே!


ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
   உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
   கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
    போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
   வந்திடும் மேலும் மின்வெட்டே!

                            புலவர் சா இராமாநுசம்



    

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...