Thursday, March 15, 2012

ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம் உடனடி செய்வது பொறுத்தமே!அ


ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம்
   உடனடி செய்வது பொறுத்தமே!
இருநாள் வீணே போயிற்றே-தமிழ்
   இனமே விரைந்து செயலாற்றே!
வெறிநாய் சிங்களர் உணரட்டும்-படை
   வீரர்கள் அணியென திரளட்டும்!
வருநாள் உலகம் அறியட்டும்-இறுதி
    வாழ்வா சாவா? தெரியட்டும்!

கூடங் குளமாய் ஆகட்டும்-மக்கள்
   கொதித்து ஊர்வலம் போகட்டும்!
பாடம் வடவரும் கற்கட்டும்-அதைப்
   பார்த்தே சிங்களர் மிரளட்டும்!
வேடம் கலைந்திட சிலரிங்கே-தலை
  வெட்கிக் குனிய வருமிங்கே
நாடகம் முடியும் அப்போதே-இதை
   நடத்துவோம்! உண்மை! தப்பாதே!

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
    இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
   மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
    சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவ ஒன்றென செய்வீரே-பெரும்
    அறப்போர்! விரைவில் உய்விரே!

வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
   வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
    அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
   பார்த்தா..?புறப்படும்! இப்போதே!
பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-நம்
    பேரினம் அழியவா வழிவிடுவீர்!?

                                 புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 14, 2012

வங்கக் கடலில் புயல்போல வருவீர்! எழுவீர்! அலைபோல!


இனியும் எதற்காம் வேடிக்கை-மத்தியில்
   எடுத்த முடிவவர் வாடிக்கை!
கனியும் காயல பிஞ்சவரே-ஆடிக்
   காற்றில் பறக்கும் பஞ்சவரே
பணிந்து வேண்டுதல் நம்தவறே-அறப்
   போரினைத் தொடர நம்மவரே
துணிந்து செயல்படின் இப்போதே-உடன்
   தொல்லைத் தீரும் அப்போதே!

ஊருக்கு ஊரும் ஊர்வலமே-உணர்வு
   ஓங்கிடத் தருவீர் ஒலிவளமே
யாருக்கும் அஞ்சிட வேண்டாமே-மேலே
    எதுவும் நடப்பினும் ஈண்டாமே
பேருக்கு செய்வது இதுவல்ல-வீண்
    போட்டிக்கும் செய்வது இதுவல்ல
கோரிக்கை வைத்தோம் பயனில்லை-என்றும்
    கோழையா? நாங்கள்! இனியில்லை

இலவு காத்த கிளியாகி-இரக்கம்
    இல்லா அரசால் பலியாகி
உலவ ஈழம் நடைப்பிணமாய்-நாம்
     உணர்வே இன்றி கிடப்போமா
நலமே பெற்றவர் வாழட்டும்-இன்றேல்
    நம்மினம் முற்றும் அழியட்டும்!
பலமே நமக்கு மனஉறுதி-சிங்கள
    பாவிகள் தமக்கு அதுயிறுதி

பொங்கி எழுவாய் தமிழகமே-சில
    போலிகள் ஒதுங்கட்டும் தமிழினமே
எங்கும் தொடங்கட்டும் அறப்போரே-இன
     அழிவைத் தடுத்திட இப்போரே
தங்குத் தடையது இல்லாமல்-ஏதும்
     தனிவழி யாரும் செல்லாமல்
வங்கக் கடலில் புயல்போல
     வருவீர்! எழுவீர்! அலைபோல!

                புலவர் சா இராமாநுசம்

Tuesday, March 13, 2012

ஈழம் மேன்மை கொண்டே மலரட்டும்!


மீண்டும் இங்கே பாடுகின்றேன்-கருணை
     மத்தியில்  எங்கே? தேடுகின்றேன்
வேண்டும் மௌனம் கலைந்திடவே-உடன்
     விரைவில் முடிவு எடுத்திடவே
மாண்டவர் எம்மவர் நடந்தகதை-அதை
     மாற்றிட செய்வீர் இன்றேயிதை
சீண்டிட வேண்டாம் மேன்மேலும்-தீய
     சிங்களர் வாழந்திட வருநாளும்!

அச்சம் கொள்ள கேட்டவரும்-அந்தோ
     அழுது அலற பார்த்தவரும்
பச்சிளம் பாலகன் படுகொலையை-இன்று 
     பார்த்தன உலகமே கொலைவெறியை
துச்சமா? எம்மினம் எண்ணாதீர்-சிறு
     துரும்பும் தூணாம்! பண்ணாதீர்
மிச்சம் உள்ளவர் வாழட்டும்-ஈழம்
     மேன்மை கொண்டே மலரட்டும்

இமயம் வரையில் வென்றானே-இன்று
     இதயம் வெடிக்க நின்றானே
சமயம் இதுதான் ஆள்வோரே-பெற்ற
     சாபம் நீங்கிடும் மீள்வீரே!
அமையும் ஈழத்தில் நல்வாழ்வே-சிங்கள
     அரசுக்கு எதிராய் ஓட்டளிப்பின்
உமையும் வாழ்த்திப் புகழ்வாரே-எனில்
    உலகில் தாழ்த்தி இகழ்வாரே

கன்றின் வாழ்வும் பட்டதென-தேர்
    காலில் மகனை இட்டவனை
இன்றும் போற்றும் எம்மினமே-என
    எண்ணிப் பாரீர் இத்தினமே
நன்றே செய்வீர் நம்புகிறோம்-ஆனால்
    நடந்ததை நினைப்பின் விம்முகிறோம்
ஒன்றே குரலாய் தமிழினமே-இங்கே
   ஒலிக்கும் ஒலியும் கேட்கிலையா ?

                            புலவர் சா இராமாநுசம்

  

Monday, March 12, 2012

இன்றென் பதிவு இருநூறே!


இன்றென் பதிவு இருநூறே-நான்
   எழுதிடப் பெற்றேன்! பெரும்பேறே!
சென்றன நாட்கள் இப்படியே-இனி
   செல்லுமா காலம் அப்படியே!
ஒன்றென இரண்டென நாளும்தர-என்
    உள்ளத்தில் கவிதை பிறந்துவர
நன்றென நீங்கள் நவின்றதுவே-மேலும்
   நல்கிடக் காரணம் ஆனதுவே

வளர்த்த பெருமை உமக்காகும்-உமை
   வாழ்த்திட வாய்ப்பு எனக்காகும்
தளர்ந்த வயதில் கோல்போல-எனக்கு
    தந்தீர் ஊக்கம் நாள்போல
விளைந்த கவிதை நிலைபோல-நல்
   விதையில் பெய்த மழைபோல
வளைந்த நெல்லின் கதிர்போல-நான்
    வணங்கிட வாழ்த்துவீர் முன்போல
 
தானே புயல்போல் என்னவளே-துயர்
   தாக்க மறைந்துப் போனதிலே
வீணே! வாழ்வு இனியென்றே-மனம்
   வெதும்ப ஏங்கும் நிலையன்றே
ஏனோ இனியும்  வாழ்வதென-என்ற
   எண்ணம் நெஞ்சில் சூழ்ந்ததென
நானோ! வருந்திட வலைப்பூவே-உயிர்
   நல்கிய திந்த அலைப்பூவே!


நேரம் போவது தெரியாமல்-வேறு
   நினைப்பே ஏதும் அறியாமல்
பாரம் மிக்க எண்ணமே-கவிதைப்
   படைக்க சூழும் வண்ணமே
யாரும் வருவார் போவாரே-அவர்
   எவரோ அறியார் ஆவாரோ
கூறும் எதுவும் செவியேறா –அது
   குறையா! நிறையா! மொழிவீரா..?

                புலவர் சா இராமாநுசம்