மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை
இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்
எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே
மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக் கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே
அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்
பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே
விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே
சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே
நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்
புலவர் சா இராமாநுசம்