Saturday, February 18, 2012

ஈழ வளமையை மீண்டும் தருவாயா...?

       எழுத எண்ணி எழுந்தேனே-ஆனால்
            இதயம் விம்ம அழுதேனே
        அழுத புலம்பல் கேட்கிலையா-ஈழம்
            அலறிய சேனலை நோக்கிலையா
        விழுதையும் வெட்டி எறிந்தானே-சிங்களன்
            வெறியொடு எங்கும் திரிந்தானே
        தொழுதேன் இறைவா வருவாயா-ஈழத்
              துயரை நீக்கித் தருவாயா

        நாதியும்  அற்றுப் போனானே-தனக்கோர்
             நாடும்  அற்றுப் போனானே
        பீதியே இறைவா எந்நாளும்-ஈழம்
            பெற்றால் உனக்கோர் திருநாளாம்
        வீதி உலாவும்  வருவாயே-எம்
           வேண்டுதல் நடத்தி தருவாயே
        நீதி இல்லா  உலகமிது –துளியும்
           நேர்மை யில்லா உலகமிது


        உன்னை விட்டால் வழியில்லை-ஏனோ
            உனக்குமா கருணை விழியில்லை
        பொன்னை நாங்கள் கேட்கவில்லை-வேறு
             பொருளை நாங்கள் கேட்கவில்லை
        அன்னை ஆமாம் தமிழீழம்-தமிழன்
            ஆண்டால் தானே வளம்சூழும்
        மண்ணை விட்டுத் தரமாட்டோம்-அடிமை
            மண்ணில் உயிரை விடமாட்டோம்

        எத்தனை நாடுகள் இங்குண்டாம்-அவை
             இருந்தும் என்ன பயன்கண்டோம்
        சித்தம் வைப்பாய் இறைவாநீ-வந்து
              செய்வாய் அருள்வாய் விரைவாநீ
        எத்தர்கள் சிங்களர் கயவர்களே-பெரும்
             இனவெறி மொழிவெறி கொடியர்களே
         புத்தரைப் போற்றும தகுதியில்லை-அவர்
             போதனைக் ஏற்கும நாடில்லை


          வருவாய்  இறைவா  வருவாயா-ஈழ
             வளமையை  மீண்டும்  தருவாயா
          திருவாய்  திகழ்ந்ததே எம்தேசம்-சிங்கள
             தீயோர் செய்தார்  படுநாசம்
         ஒருவாய் சோற்றுக்கும் படும்தொல்லை-வேலி
             ஓரம்தானே அவர் எல்லை
         கருவாய்  உருவாய் அழிந்தாரே-உலகம்
            காணவும் கண்ணீர் பொழிந்தாரே
      
  புலவர் சா இராமாநுசம்

                                                              

Thursday, February 16, 2012

மீண்டும் அழைக்கிறேன்

மீண்டும் அழைக்கிறேன் வருவீரே-எனக்கு
    மேன்மைப் பெற்றுத் தருவீரே
வேண்டும் உங்கள் வரவுகளே—என்
    வேண்டுதல் உமக்கே உறவுகளே
யாண்டும் பெருமை எமக்காமே-நன்றி
   என்றும் உரியது உமக்காமே
தூண்டும் உளத்தில் எனைமேலும்-நல்
   தூணாய் தாங்கும் எந்நாளும்

இரண்டு மூன்று நாட்கள்தான்-விழா
   இடையில் உள்ள நாட்கள்தான்
திரண்டு வந்தே வாழ்த்துங்கள்-இன்பத்
   தேனாய் மகிழ்வில் ஆழ்த்துங்கள்
மருண்டு கிடக்குது என்மனமே-உற்ற
   மருந்தென வருவீர் அத்தினமே
வரண்ட நிலமெனும் எனமனமே-உம்
   வரவால் என்னுளம் நலம்பெறுமே

                   புலவர் சா இராமாநுசம 




Tuesday, February 14, 2012

முதல்வர் துணிந்தால் வந்திடும் ஒருவிடிவே!



காதே இல்லையா மத்தியிலே –அதைக்
  கண்டும் நமக்கேன் புத்தியிலே
தீதே செய்திட சிங்களனே-தினம்
  தேம்பி அழுதிட மீனவனே-அவனோ
ஏதும் அறியா அப்பாவி-கோட்சே
  எதற்கும் அஞ்சா கொடும்பாவி
வாதோ செய்தினி பயனில்லை-தீவை
   வாங்கிட தொடுப்போம் அறப்போரே

ஒன்றா இரண்டா சொல்லுங்கள்-வரும்
   ஒவ்வொரு நாளும் மல்லுங்கள்
இன்றா நேற்றா இல்லையே-முடிவு
    இல்லாத் தொடர்கதை! தொல்லையே!
கொன்றான் பலரை பலநாளும்-இக்
    கொடுமை அவர்க்கே திருநாளாம்
நன்றா இனியும் வாளாக-உடன்
     நாமும் கொட்டுவோம் தேளாக
   


துணிந்து எடுப்பீர் ஒருமுடிவே-முதல்வர்
   துணிந்தால் வந்திடும் ஒருவிடிவே!
பணிந்து வேண்டியும் பயனில்லை-எடுத்து
   பலமுறை சொல்லியும் பயனில்லை
தணிந்து போவது பெருங்கேடே-நாளை
   தள்ளிப் போடின் வருங்கேடே
அணியென வருவோம் ஆணையிடும்-மக்கள்
   அலையென திரள தவிடுபடும்

                             புலவர் சா இராமாநுசம்

Monday, February 13, 2012

காதல் கொள்வீர்! இதையும் காதில் கொள்வீர்!

 
அள்ளவரும் நீரலவே காதல்!-அதை
    அறியாது, இருவருமே சாதல்!
எள்ளுகின்ற நிலைதானே தருமே-மேலும்
    என்றென்றும் பழிதானே வருமே
உள்ளமதில் உறுதியுடன் நின்றே-காதல்
    உண்மையாக எதிர்தாலும் வென்றே
வெள்ளமதில் எதிர்நீச்சல் போன்றே-நீர்
    வீறுகெளல் வெற்றிக்குச் சான்றே!


உண்மைக்கு அழிவென்றும் வாரா-காதல்
    உள்ளங்கள் பேதங்கள் பாரா!
பெண்மைக்கு சிலசில குணமே-அவள்
    பெருமைக்கு வேண்டுவ மணமே!
ஆண்மைக்கு ஆசையே தூண்டும்-அதை
   அடக்கியே நடந்திட வேண்டும்!
மேன்மையும் வந்திடும் அதனால்-காதல்
   மேலும் பொலிவுறும் இதனால்


ஒருவரை ஒருவரும் உணர்வீர்- பின்
    உள்ளத்தில் காதலும் கொள்வீர்!
இருவரின் மனமது ஒன்றுபட-எவர்
    எதிர்ப்புமே முற்றிலும் தவிடுபட
உருவத்தின் அழகொன்றே போதா-ஒத்த
    உணர்வு இன்றெனில் ஆகா
பருவத்தில் தெளிவாக சிந்திப்பீர்!-பின்
    பட்டாலே துன்பத்தில் நிந்திப்பீர்!

               புலவர் சா இராமாநுசம்

   


                     


Sunday, February 12, 2012

குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை...?


குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை
குருடாக செய்ததுவே நமதுதேசம் !
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம்
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே!
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில்
வரநீரும் காரணமே கையாமதன்னை!

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே
ஏற்படவும் காரணமா சர்வதேசம்!
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகள்மூட-தமிழன்
கல்நெஞ்சம் கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும் சர்வதேசம்-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...