Thursday, February 2, 2012

ஐயா கூகுல் ஐயாவே!


 கூகுல் செய்வது பெரும்சேவை-ஏனோ
        கொடுத்தார் நமக்கே மனநோவை
போகும் டாட்காம் என்றேனும்-இன்
         புகுந்திடும் பதிலாய் என்றேனும்
ஆகும் என்றே ஒருசெய்(தீ)தி-முன்பே
       அறிந்தால் வருமா இப்பீதி
வேகும் நெஞ்சும் இதனாலே-நம்
        வேதனை நீங்குதல் எதனாலே

காலையில் எழுந்ததும் இம்மாற்றம்-கண்
      கண்டது! கொண்டது! ஏமாற்றம்!
மாலை வரையிலும் புரியவில்லை-இதை
      மாற்றிய காரணம் தெரியவில்லை
சாலையின் குறுக்கே மாமரமே-புயல்
      சாய்த்தது போல துயர்தருமே
ஆலையில் பட்ட கரும்பானோம்-கடல்
       அலையில் வீழ்ந்த துரும்பானோம்

ஐயா கூகுல் ஐயாவே-துன்பம்
       அடைந்தார் பலரும் ஐயாவே
பொய்யா ! இல்லை வலையுலகே-இப்
        புலம்பல் ஒலிக்கும் நிலையுளதே
செய்யா தவறுக்கு தண்டணையா-என
        சிந்தையில் வருத்தம் கொண்டய்யா
மெய்யா இன்றுள நிலைதானே-இதனை
      மேலும் விளக்கிட இலைதானே!

                            புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 1, 2012

உடன் வேரொடு தமிழரை அழித்துவிடு!



வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைச்சுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றியா கண்துஞ்சல்!
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

Monday, January 30, 2012

இரத்தம் சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்!

                                                     அன்று

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 


       ஓயாத அழுகுரலே  ஈழ  மண்ணில்-தினம்
                ஒலிக்கின்ற நிலைகண்டு  அந்தோ  கண்ணில்
        காயாது  வந்ததன்று  கண்ணீர்  ஊற்றே-அதைக்
                 காணாமல் மறைத்ததந்தோ  தேர்தல் காற்றே
        சாயாத  மனத்திண்மை   கொண்டோர்  கூட-ஏனோ
                 சாயந்தார்கள்  பதவிக்கே  ஓட்டு  தேட
         வாயார  சொல்லுகின்ற கொடுமை  அன்றே-அது
                 வரலாற்றில்  என்றென்றும்   மறையா  ஒன்றே
 
         கொத்துமலர்  வீழ்வதுபோல்   வன்னிக்  காட்டில்-ஈழ
                  குடும்பங்கள்  வீழ்வதனைக்  கண்டு   ஏட்டில்
        முத்துகுமார்   முதலாக  பலரும்  இங்கே-தீ
                 மூட்டியவர்  உயிர்துறந்தும்  பலன்தான்  எங்கே
       செத்துவிழு   மவர்பிணத்தை  எடுத்துக்  காட்டி-ஓட்டு
                 சேகரிக்க  முயன்றாராம்  திட்டம்  தீட்டி
      எத்தர்களும்  ஐயகோ கொடுமை  அன்றோ-அது
                 எதிர்கால  வரலாற்றில்  மறையா   தன்றோ
  
         வீரத்தின்   விளைநிலமே  ஈழ  மண்ணே-மீண்டும்
                 வீறுகொண்டே  எழுவாய்நீ  அதிர  விண்ணே
        தீரத்தில்   மிக்கவராம்  ஈழ  மறவர்-எட்டு
                 திசையெங்கும்  உலகத்தில்  வலமே  வருவார்
        நேரத்தில்  அனைவருமே  ஒன்றாய்   கூடி-தாம்
      நினைத்தபடி   தனிஈழப்   பரணி  பாடி
கூறத்தான்  போகின்றார்   வாழ்க  என்றே-உள்ளம்
                   குமுறத்தான்  சிங்களவர்  வீழவார்  அன்றே

இரக்கமெனும்  குணமில்லார்   அரக்கர்   என்றே-கம்பர்
                 எழுதியநல்   பாட்டுக்கே  சான்றாய்   இன்றே
         அரக்கனவன்  இராசபக்சே  செய்யும்   ஆட்சி-உலகில்
                 அனைவருமே  அறிந்திட்ட  அவலக்   காட்சி
         உறக்கமின்றி  ஈழமக்கள்   உலகில்  எங்கும்-உள்ளம்
                 உருகியழ  வெள்ளமெனக்  கண்ணீர்  பொங்கும்
        தருக்கரவர்  சிங்களரின்  ஆட்சி  அழியும்-உரிய
                 தருணம்வரும்  தனிஈழம்  மலர்ந்தே   தீரும்

அழித்திட்டோம   தமிழர்களை  என்றே  கூறி-சிங்களர்
                    ஆலவட்ட   மாடினாலும்  அதையும்   மீறி
           கழித்திட்ட  காலமெல்லாம்  துன்பப்   படவும்-சில
                    கயவர்களாம்   நம்மவர்கை   காட்டி  விடவும்   
           விழித்திட்டார்  உலகுள்ள  ஈழ  மறவர்-அதன்
                     விளைவாக  அணிதிரள  விரைந்தே  வருவார்
             செழித்திட்ட  வளநாடாய்  ஈழம்  மாறும்-இரத்தம்
                     சிந்தாமல்  தனிஈழம்  மலர்ந்தே  தீரும்
               
                                                     புலவர் சா இராமாநுசம்