Saturday, January 28, 2012

இலையதை தடுத்திடும் எண்ணமே!



கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
    கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
   தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
    ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
    நிம்மதி ஏற்பட செய்வீரா?

பட்டப் பகலில் வங்கியிலே-பெரும்
    பணமே கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறது!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
    திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!


வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
     வாழ்வை நடத்திட கடலோரம்
அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

             புலவர் சா இராமாநுசம்
  








Friday, January 27, 2012

மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்!



உண்ணும் உணவும் நஞ்சாகும்-நாம்
     உட்கொள்ளும் மருந்தும் நஞ்சாகும்
எண்ணும் எண்ணமும் நஞ்சாகும்-நம்
     எழுதும் எழுத்தும் நஞ்சாகும்
கண்ணும் பார்வையால் நஞ்சாகும்-சில
     கருத்துகள் கூட நஞ்சாகும்
பண்ணும் பாடலில் நஞ்சாகும்-இறை
    படைப்பில் சிலவும் நஞ்சாகும்

காற்றும் இன்றே  நஞ்சாகும்-அலை
    கடல்தரும் உணவும் நஞ்சாகும்
தூற்றும் குணமே நஞ்சாகும்-உற்ற
    துணையே சிலருக்கு நஞ்சாகும்
போற்றும் போலிகள் நஞ்சாகும்-சேர்த்த
    பொருளும் சிலருக்கு நஞ்சாகும்
ஆற்றல் மிகுதியும் நஞ்சாகும்-ஏதும்
    அறியா நிலையும் நஞ்சாகும்

உற்றார் சிலரும்  நஞ்சாகும்-பெற்ற
      உரிமையும் கூட நஞ்சாகும்
பெற்றவர் பிள்ளைக்கே  நஞ்சாகும்-சில
      பிள்ளைகள் அதுபோல் நஞ்சாகும்
கற்றநல் கல்வியே நஞ்சாகும்-அதை
      கல்லார் வாழ்வும் நஞ்சாகும்
மற்றவை பலவே நஞ்சாகும்-இதை
     மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்


            புலவர் சா இராமாநுசம்







Monday, January 23, 2012

இன்றே எழுவோம் அறிவீரே!


தேவி குளமும் பீர்மேடும்-இன்றே
         தேவைக் கச்சத் தீவுமே
பாவிகள் செய்வது பாதகமே-மேலும்
           பார்ப்பதா மத்தியில் சாதகமா
ஆவித் துடித்திட விவசாயம்-என்ன
           ஆகுமோ? அங்கே போராட
கேவி அழுகிறான் மீனவனோ-தினம்
        கேட்பார் எங்கே அவன்வாட

கொடுத்தோம் இரண்டும் தவறாமே-உடன்
          கொடுத்ததை மீண்டும் பெறுவோமே
அடுத்தாய் எண்ணிச் செயல்டுவோம்-எனில்
          அல்லல் பட்டே துயர்படுவோம்
எடுத்திட வேண்டும் ஒருமுடிவே-காலம்
           எடுத்தால் என்றும் இலைவிடிவே
படுத்துவர் மேலும் துயர்படவே-அப்
          பாவியாய் நாமும் உயிர்விடவே

மத்திய மாநில அரசுகளே-மேலும்
       மௌனம் வேண்டாம் அரசுகளே
மெத்தனம் இதிலும் காட்டாதீர்-வீணாய்
        மேலும் காலத்தை நீட்டாதீர்
சித்தமே இரங்கிச் செயல்படுவீர்!-உடன்
         சிந்தனை இன்றேல் துயர்படுவோர்
எத்தனைக் நாட்கள் பொறுத்திடுவர்-பொங்கிச்
         செயல்படின் யாரதைத் தடுத்திடுவர்!?

என்றும் தாழ்ந்தது தமிழ்நாடா-என்ற
        எண்ணத்தில் செய்வதே! இக்கேடா?
நன்றே அல்லவாம் ஆள்வோரே-இப்படி
         நடந்தால் கோபம் மூள்வாரே!
குன்றே உடையும் சிற்றுளியில்-இக்
        கொடுமையைத் தடுக்க அறவழியில்
இன்றே எழுவோம் அறிவீரே!-தமிழ்
         இனமே திரளும் புரிவீரே!

               புலவர் சா இராமாநுசம்