பொங்கல் வந்தும் போயிற்றே-கண்ணீர்
பொங்கும் நிலைதான் ஆயிற்றே!
திங்கள் ஒன்றும் ஆகிறதே-இங்கே
தினமும் நெஞ்சம் வேகிறதே!
எங்கள் வாழ்வும் நலமுறுமா-புயல்
இழைத்த அழிவும் வளமுறுமா?
தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி,
தையின் குளிரோ எமைவாட்டும்!
புள்ளி விபரம் போடுகின்றார்-வந்து
போவதும் வருவதாய் ஒடுகின்றார்!
அள்ளிப் போடவும் இடமில்லை-மரத்தை
அறுத்து எடுக்கவும் திடமில்லை!
கொள்ளி வைக்கவே பயன்படுமே-எம்
குடும்பமே அதிலே எரிபடுமே!
வெள்ளம் வந்தால் வடிந்துவிடும்-துயர
வெள்ளத்தில் ஊரே மடிந்துவிடும்!
யானைப் பசிக்கு எதுவேண்டும்-அரசே
எமக்கு உதவ நி(ம)திவேண்டும்!
தானே புயலால் இழந்திட்டோம்-வாழ
தடமே யின்றி அழிந்திட்டோம்!
விணே எம்மை வாட்டாதீர்-வெறும்
வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!
தேனாய் இனித்திட வாழ்ந்தோமே-எட்டு
திசையும் இருண்டிட வீழ்ந்தோமே!
புலவர் சா இராமாநுசம்