Friday, December 7, 2012

பல்லார் மாட்டும் பண்பாலே பழகிட வேண்டும் அன்பாலே !




திரைகடல் ஓடு  எனறாரே
   திரவியம் தேடு  என்றாரே
குறையிலா வழியில்  அதைப்பெற்றே
   கொள்கையாய் அறவழி  தனைக்கற்றே
நிறைவுற அளவுடன்  நீதிசேர்ப்பீர்
   நிம்மதி அதனால்  வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென  புகழ்ப்பெறுவீர்
   கண்ணியம் கடமை  எனவாழ்வீர்

வையம் தன்னில்  வாழ்வாங்கும்
   வாழின்! வாழ்வில்  பெயரோங்கும்
செய்யும் எதையும்  தெளிவாகச்
   செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
   போலியாய் வேடம்  போடாமல்
ஐயன் வழிதனில்  செல்வீரே
   அன்பால் உலகை  வெல்வீரே!

தீதும் நன்றும்  பிறர்தம்மால்
   தேடிவாரா! வருவதும்  நம்மாலே!
நோதலும் தணிதலும் அவ்வாறே
   நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல்லொன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
  இனிதாம் அதுவும் மிகஎன்றார்!

எல்லார்   தமக்கும்  நலமாமே 
   என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரென புகழ்பெற்றே
   நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
  பழகிட வேண்டும் அன்பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

25 comments :

  1. அன்பால் உலகை வெல்லலாம், அருமை கவிதை...!

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி! நலமா மனோ!

      Delete
  2. ஒரே கவிதையில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று முழுவதுமாய் சொல்லிவிட்டீர்கள், ஐயா.

    இன்று தான் முதன் முறையாக, இங்கு வருகிறேன். உங்களது பேட்டி பார்த்தேன், இங்கு,

    http://www.madhumathi.com/2012/12/tamil-blogger-pulavar-ramanujam-interview-video.html

    வியந்தேன்.

    என்பது வயதில் 350 பதிவா? என்று வியந்தேன். நானும் எழுதுகிறேன், இரண்டு வருடமாய், ஆனால், இருநூறு பதிவு தான் எழுதி இருக்கிறேன்.

    உங்களது வழிகாட்டுதலும், ஊக்கமும் என் போன்றோருக்கு வரம்.

    நன்றி,

    உங்கள் பேத்தி,
    கண்மணி அன்போடு!

    ReplyDelete
  3. பொய்யோ புரட்டோ செய்யாமல்
    போலியாய் வேடம் போடாமல்
    ஐயன் வழிதனில் செல்வீரே
    அன்பால் உலகை வெல்வீரே!//
    நிச்சயம் இந்த வரிகள் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  4. அனைவருக்கும் தேவையான படைப்பு .. நன்றிங்க அய்யா

    ReplyDelete
  5. மிகவும் ரசிக்கவைத்தது ஐயா உங்களுடைய ஒவ்வொரு வரிகளும். மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  6. அன்பின் பெருமை அழகாய்ச் சொன்னீர்கள் ஐயா!

    ReplyDelete
  7. வள்ளுவம் பாடும் கவிதை...

    அருமை அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
  8. மிகவும் ரசிக்க வைக்கும் வரிகள்... மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  9. "தீதும் நன்றும் பிறர்தம்மால்
    தேடிவாரா! வருவதும் நம்மாலே!
    நோதலும் தணிதலும் அவ்வாறே
    நவின்றனர் முன்னோர் இவ்வாறே"

    சரிதான் ஐயா..

    ReplyDelete
  10. அன்பின் வழியது உயிர்நிலை என்பதனை அழகாகச் சொன்னீர்கள். தொடரட்டும் அய்யாவின் பதிவுகள்! கவிஞர் மதுமதி அவர்களது பதிவில் தங்கள் நேர்காணலைக் கண்ட பிறகு நான் இட்ட கருத்துரை... ... ...

    // தனது 81 வய்தில் 350 பதிவுகளுக்கும் மேலாக எழுதிவரும் புலவர் அய்யாவைக் கண்டு காணொளியில் நேர்முக உரையாடல் செய்து தந்தமைக்கு நன்றி! ஒலி-ஒளி வடிவத்தை பதிவு செய்ததைப் போல வரி வடிவத்திலும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். //




    ReplyDelete
  11. அழகாகச் சொன்னீர்கள் புலவரே.
    மிகநன்று.

    ReplyDelete
  12. வரிகள் அருமை..!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...