Saturday, December 29, 2012

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரி தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்




தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரி
   தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்
வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக
    வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
   போகவில்லை!அறிந்தோமே! சிறுமைப் பட்டோம்
ஆண்டாரே, ஆள்வோரே எண்ணிப் பாரும்-இந்த
   அவலத்தைப் போக்கவழி விரைந்துக் கூறும்

ஊராட்சி தலைவரென தலித்தும் வந்தால்-அவர்
    உட்கார நாற்காலி ஒன்று தந்தால்
பாராட்சி போனதெனல், சாதி வெறியே-நற்
   பண்பல்ல! ஒம்புங்கள் உயர்ந்த நெறியே
யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
   எண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே
சீராட்சி நடந்திட வழியே காண்பீர்-சாதிச்
    சிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்

ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-அது
   ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
    நீக்குவோம் ஒற்றுமை காணும் ஒன்றாய்
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை-நம்முள்
   சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
   போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்
   

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என
   உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்
நன்றேதான்  அதுவென்றே ஏற்றுக் கொண்டோம-நம்
   நாடெங்கும் கொள்கையென பரப்பி விண்டோம்
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
   இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
   ஏங்கிட நீங்குமா சாதி மடமை! 

                  புலவர்  சா  இராமாநுசம்

12 comments :

  1. அருமையான வரிகள்...

    யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
    எண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே
    ////////////////

    எவ்வளவுதான் சொன்னாலும் சில ஜந்துகளுக்குப் புரியாது.. அந்த ஜந்துக்களால் தான் பிரச்சனையே

    ReplyDelete
  2. ரத்தத்தில் ஊறியுள்ள சாதி வெறி எப்போதுதான் நீங்கு மோ தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
    பாடம் சொல்லும் கவிதை.

    ReplyDelete
  3. //இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
    இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே
    என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
    ஏங்கிட நீங்குமா சாதி மடமை! //

    உங்கள் ஆதங்கம் புரிகிறது, என் செய்வது? இந்த ஜாதி என்னும் தொற்று நோயை ஒழிக்க வேண்டிய மருத்துவர்களே, ஊர் ஊராய் சென்று அந்த தொற்று நோயை பரப்பி வருகிறார்கள்.

    ReplyDelete
  4. உங்களின் கவிதை மிக பொருத்தமாய் உள்ளது .இதுவரை பேசாத சாதி இன்று ஏன் வருது பணமா?பாசமா? ஒட்டா?ஒட்டு பொறுக்கிகளின் உண்மையான முகம் நாட்டு மக்களுக்கு தெரியும்வரை சாதிப் பாட்டு கேட்கத்தான் வேண்டும்

    ReplyDelete
  5. மிக அருமையான வரிகள்....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  6. நல்ல கவிதை ஐயா

    ReplyDelete
  7. சாதியை வேரறுக்க, சனநாயக அரசினால் முடியாது!

    நல்லார் ஒருவரால் ஆளப்படும் இரும்புக் கரம்கொண்ட இராணுவ ஆட்சியே சாதியை வேரறுக்கக் கூடியது!

    சாதியை ஒழிக்க, தனியார் கல்லூரிகளை ஒழிக்க வேண்டும்
    சாதியை ஒழிக்க, சாதிச்சான்றிதழை ஒழிக்க வேண்டும்
    சாதியை ஒழிக்க,வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏற்படுத்தவேண்டும்
    சாதியை ஒழிக்க, ஆலயங்களின் நிர்வாகத்தையும் பூசை உரிமையையும் துறவிகளின் அமைப்புக்களிடம் கையளிக்க வேண்டும்.
    சாதியை ஒழிக்க, சாதிப்பாகுபாடுகளை ஏற்படுத்துவோர்,பின்பற்றுவோர்,பரப்புவோர்,திணிப்போர் அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமந்திரமும் "கோத்திரமும் குலமும் கொண்டென்செய்வீர்" என்று திருநாவுக்கரசரும் எடுத்தியம்பியும், 1000/2000 வருடங்களாக எந்தமாற்றத்தையும் காணவில்லையென்றால்.......சனநாயக ஆட்சி என்னைத்தைச் சாதிக்கும்?

    இலங்கைத் தமிழ் இளையோரில் சாதியை சொல்வது நாகரீகம் அற்றதென்ற கூட்டம் உருவாகியுள்ளது. இத்தனையும் தந்தை பெரியாரின் புத்தகங்கள் படித்தோ......ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்டோ வந்த மாற்றம் அல்ல!

    அரசு தமிழ்ப்பற்றோடு இயங்கினால் அரசியல் சாசனம் அரசு உருவாக்கும் சட்டங்களுக்குத் தடைபோடும்! "அனைத்துச் சாதியினரும் அந்தணர் ஆகலாம்" சட்டம் நல்லதொரு உதாரணம்!

    ஆக; நாம் சாதியில்லையடி பாப்பா என்று பாரதிபாடியதுபோல் பாடியபடி இருப்போம்! இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் காத்திருப்போம் அடுத்த சிறுமாற்றத்தைக் காணுவதற்கு!!!!!!!
    பல்லாயிரம் ஆண்டுகளுக்கொரு சிறுமாற்றம் என்னும் வீதத்தில் சாதி ஒழியுமென்றால்.......அது ஒழிவதால் என்ன பயன்?

    ReplyDelete
  8. எத்தனையோ பேர் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.நாளுக்கு நாள் கொடுமைகள் கூடுதே தவிரக் குறைந்தபாடில்லை !

    ReplyDelete
  9. சரியாக சொன்னீர்கள் ஐயா தொற்று நோயைப்போலத்தான் இருக்கிறது சாதி.

    ReplyDelete
  10. "சாதிச்சிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்"
    உழைக்கும் வர்க்கமாய் ஓரணியில் திரள்வீர்!

    வாழ்த்துகள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...