Thursday, December 13, 2012

எத்தனை நாட்கள் பொறுப்பார்கள் –எனில் என்றுமே உம்மை வெறுப்பார்கள்!




பதிவர்கள்  பலபேர்  எழுதவில்லை தினம்
    பவர்கட்  ஆவதா  தெரியவில்லை!
இதுவரை  தீர்த்திட  முயலவில்லை மின்
    இணைப்பினை  நம்பிப்  பயனில்லை!
எதுவரை  இந்நிலை!  தெரியவில்லை மாற்று
      எதுவென  ஏதும்  புரியவில்லை!
விதியென  கிடப்பதே  நம்நிலையா இருள்
      விலகிட  ஒளிவர   வழியிலையா!

முற்றும்  முடங்கின  தொழில்   கூடம் பூட்டி
    மூடிட  கண்ணீர்  வழிந்தோடும்!
வற்றின  நீர்நிலை  மழையில்லை இரவு
    வந்தால்  கொசுவோ பெருந்தொல்லை!
பற்றின  துயரோ  தீயாக நோய்
    பற்றிட , தொற்றிட  பேயாக!
பெற்றனர்  நாளும்  துன்பந்தான் இனிப்
   பெருவரோ?  வாழ்வில்  இன்பந்தான்!

கடிதம்  எழுதி  வருவதில்லை !நேரில்
    கண்டுப்   பேசிடின்  தீரும்தொல்லை!
அடிமேல்  அடியும்  அடித்தாலே பெரும்
    அம்மியும்  நகரும் அதுபோலே!
துடியாய நேரில்  போவீரே மெகா
    தொடர்கதை  மின்வெட்டை  முடிப்பீரே!
முடியா  நிலையென  ஏதுமிலை மேலும்
    மௌனம்  காப்பது  நீதியிலை!

மத்திய  மாநில  அரசுகளே ஈகோ
     மனதை  விடுவீர்  அரசுகளே!
நித்தம்  மக்கள்  படும்பாடே மேலும்
     நீண்டால்  அடைவீர்  பெரும்கேடே!
சித்தம்  இரங்கிட  வேண்டுகிறேன் உடன்
     செயல்பட  உம்மைத்   தூண்டுகிறேன்!
எத்தனை  நாட்கள்  பொறுப்பார்கள் எனில்
     என்றுமே  உம்மை  வெறுப்பார்கள்!

                     புலவர் சா இராமாநுசம்

24 comments:

  1. மின் வெட்டுத் தந்த இனிய கல்வெட்டுக் கவிதையா !!!!!..........அருமை துன்பத்திலும் ஓர் இன்பம் தருவது உங்கள் கவிதைகள்தான் ஐயா ....அரசு இக் கவிதையைக் கண்டால் அவசியம் ஒளி ஏற்றி விடுவர் அத்தனை அழகாய் உள்ளது .கவலைகள் வேண்டாம் கவிதைகள் தொடர வழி பிறக்கும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. ஆஹா! சூப்பர் ஐயா. அழகா சொல்லிட்டிங்க... மின்வெட்டைப்பற்றி....கலக்கல்.

    ReplyDelete
  3. என்ன அழகாக அவஸ்தையையும் சொல்லிட்டீங்க ஐயா.

    ReplyDelete
  4. //நித்தம் மக்கள் படும்பாடே –மேலும்
    நீண்டால் அடைவீர் பெரும்கேடே!//
    நடக்க இருப்பதை அழகிய கவிதையில் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. பாட்டாவே பாடிட்டீங்களே..நிலை மாறவேண்டும் ஐயா..மாறுமா?

    ReplyDelete
  6. “அடிமேல் அடியும் அடித்தாலே –பெரும்
    அம்மியும் நகரும் அதுபோலே!
    துடியாய நேரில் போவீரே –மெகா
    தொடர்கதை மின்வெட்டை முடிப்பீரே!
    முடியா நிலையென ஏதுமிலை –மேலும்
    மௌனம் காப்பது நீதியிலை!“ அருமை அருமை!

    செவிடன் காதில்
    சங்கை ஊதி பயன் இல்லை.
    அந்த சங்காலே
    நல்லா நாலுசாத்து
    சாத்தினால் தான் உறைக்கும்.

    கவிதை அருமையாக உள்ளது புலவர் ஐயா.

    ReplyDelete
  7. மின்வெட்டின் தாக்கம் கவிதையாக ஒலிக்கின்றது.

    ReplyDelete
  8. பாட்டில் புத்தி சொல்லி இருக்கிறீர்கள்.எட்டவேண்டியவர்களுக்கு விரைவாய் எட்டவேண்டும்.

    ReplyDelete
  9. அழகாகச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.....
    நிறைய நண்பர்களை காணவில்லை :(

    ReplyDelete
  10. மத்திய மாநில அரசுகளே –ஈகோ
    மனதை விடுவீர் அரசுகளே!///
    உங்களால் மட்டுமே தெளிவாகவும் தீர்க்கமாகவும் உண்மையை சொல்ல முடியும்

    ReplyDelete
  11. எங்கள் ஊரில் பகலில் 2 மணி நேரம் மட்டுமே கரெண்ட்....இதன் காரணமாகவே பிளாக் பக்கம் அதிகம் வர முடிவதில்லை ...பவர்கட் எந்த நிமிடமும் சரியாகலாம் ...ஏனென்றால் இது செயற்கையாக ஏற்படுத்தப் பட்டுவரும் மின்வெட்டு...

    ReplyDelete
  12. மின் வெட்டின் கொடுமையை உரைத்த விதம் அருமை!

    ReplyDelete
  13. மின் வெட்டும்,முகப்புத்தகமுமே எழுதுவதை நிறுத்தியிருக்கிறது.நல்ல கவிதை ஐயா !

    ReplyDelete
  14. தமிழ் போற்றும் நல்ல உள்ளம் காணுவது அரிது
    மரபு மீறாத புதுமையில் நனைந்த புது கவிதை அருமை

    ReplyDelete
  15. அன்பின் புலவர் சா இராமாநுசம் அய்யா

    கவிதை அருமை - இன்றைய நிலையினை நன்கு விளக்கி - மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் கவிதை விளைந்த சிந்தனை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete