Wednesday, November 28, 2012

இடுவீர் பிச்சை இடுவீரே!




 இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே!
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே!
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை!
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர!

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே!
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்,
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா!

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா!
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்!
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா!
 கல்லார் என்றும் அவர்தானா-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா!

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்!
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திடப் பணமது தாம்பாக!
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென!
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே!

                               புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. பணம் செய்யும் நோக்கிலே
    குணமதை தொலைவில் வைத்து
    பிணமாகிப் போனாரே

    இப்படித்தான் இன்றைய கல்விக்கூடங்களின்
    நிலைகள்...

    வீறுகொண்டு எழச் செய்யும்
    வீச்சரிவாள் வார்த்தைகள் பெருந்தகையே....

    கல்விதாகம் தீர்த்துவிட்டால்
    வேறு
    செல்வம் ஏதும்
    தேவையில்லை இங்கே....

    ReplyDelete
  2. இன்றைய நிலைமையின் உண்மை வரிகள் ஐயா...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  3. பணம் இல்லாத கல்வியை யாரும் தர முன்வருவதில்லை என்ன செய்ய ?
    வாருத்தமாய் உள்ளது

    ReplyDelete
  4. நல்லதொரு விண்ணப்பம்...

    செவிகொடுத்து கேட்க மட்டும்தான் யாருக்கும் நேரம் இல்லை...

    ReplyDelete
  5. கல்வியில் இலஞ்சத்தை இல்லாமல் செய்வது முடியாத காரியமாய் அல்லவா ஐயா இருக்கிறது..

    ReplyDelete
  6. அழகான கவிதை...
    அங்கு பணமில்லாமல் கல்வியில்லை இங்கு இலவசக் கல்விதான் ஆனாலும் முன்னுரிமை பேதம் பார்த்துத்தான்..

    ReplyDelete
  7. ஐயா1இன்றைய செய்தி கே.ஜி,யில் இடம் கிடைக்க 17 லட்சம் நன்கொடையாம்!எங்கே போகிறோம் நாம்?

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா ரொம்ப நாளைக்கு பிறகு
    பரீட்சைக்கு போட்டி போகும் பந்தய குதிரைகளை பணம்கொடுத்து படிப்பிக்க பணக்காரர் இருக்குமட்டும் ஏழையின் கல்வி எட்டா கனியே

    ReplyDelete
  9. கல்வியும் வியாபாரமாகிப்போன காலமாச்சு !

    ReplyDelete
  10. அட்சயப் பாத்திரங்கள்
    பிட்சைக் கேட்கின்றன!!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...