Sunday, November 25, 2012

விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்

 மாவீரர் நினைவாக...


எண்ணில்லாப் புதைகுழிகள் ஈழ மண்ணில்-எம்
     இதையத்தை இரணமாக்க ஆறாப் புண்ணில்
மண்ணெல்லாம் அள்ளிவந்து அதனமேல் தூவி-அதை
      மேன்மேலும் கிளறிவிடும் செயலை மேவி
கண்ணில்லாக் சிங்கள கயவர் நாளும்-அங்கே
     காட்டுகின்ற அடக்கமுறை வெறியாய் மூளும்
விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து
     விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்!

அற்பனுக்கு வந்திட்ட வாழ்வு தானே-இன்று
      அடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே!
பொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ
       புற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்!
கற்பனையாய் எண்ணாதே கடியும் படுவாய்-தேடி
      காலன்தான் வருகின்றான்  மடிந்தே விடுவாய்
சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என
      சொலகின்ற புலவனது சாபம் இதுவே!


எத்தனையோ உயிர்தன்னைப் பறித்தாய் நீயே-ஐ.நா
      இயம்பியதோர் கணக்கதனைத் தாண்டும் மெய்யே
சித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த
      சிங்களமே உன்னாலே முற்றும் அழியும்
இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
      எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை
புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
      போதனையை அறிவாயா? வேண்டாம் மமதே!

புலவர் சா இராமாநுசம்

6 comments:

  1. சாட்டையடி வரிகள்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. நல்ல காலம் பிறக்கட்டும்! அருமையான வரிகள்! நன்றி!

    ReplyDelete
  3. எத்தனையோ உயிர்தன்னைப் பறித்தாய் நீயே-ஐ.நா
    இயம்பியதோர் கணக்கதனைத் தாண்டும் மெய்யே
    சித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த
    சிங்களமே உன்னாலே முற்றும் அழியும்
    இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
    எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை
    புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
    போதனையை அறிவாயா? வேண்டாம் மமதே!

    கவிதைத் தீயாலே இட்ட சாபம் இதுவும் ஓர் நாள் பலிக்கும் ஐயா
    கவலை வேண்டாம். பகிர்வுக்கு மிக்க நன்றி ......

    ReplyDelete
  4. புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
    போதனையை அறிவாயா? வேண்டாம் மமதை! -என்கின்ற இந்த ஆழமாக புண்பட்ட மனதில் பொங்கியெழுந்த வரிகள் தாங்கள் ஓர் பெரும் புலவர் என்பதற்குச் சான்று பகர்கின்றன. வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  5. புலவரின் சாபம் பலிக்கும்
    புலையர் வாழ்வை கெடுக்கும்
    உண்மை ஐயா

    ReplyDelete
  6. புலவரது சாபம் இங்கே பலிக்கட்டும்..

    ReplyDelete