Sunday, November 18, 2012

எங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா!



எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே!
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல!

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னே!
மற்றது பின்னர் ஆகட்டுமே-குப்பை
     மலையென கிடப்பது போகட்டுமே!
குற்றம் சொல்வதென்  நோக்கமல்ல-இது
     குத்தும் கவிதை ஆக்கம்லல!
வெற்றுச் சொல்லுமி துவல்ல-பட்ட
     வேதனை விளைவா மிதுசொல்ல!

அண்மை காலமாயிவ் வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்ப தெவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தாலே போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றேதான்  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கிப்  பாவை!
சொன்னதே! ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீரா ? வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

  குறிப்பு- மீள் கவிதை. பட்டாசுக்குப்பையோடு இன்று சென்னை
                    காட்சி அளிக்கும் பரிதாப நிலை.

23 comments:

  1. குப்பை தொல்லையால் அன்றாடம் பாதிக்கப் பாடுபடுபவன் நான்.எங்கள் வீட்டு எதிரில் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது.எங்களைப் போன்றவர்களின் ஆதங்கத்தை தாங்கள் கவிதையாய் வடித்து விட்டீர்கள்

    ReplyDelete
  2. ‘’எங்கு காணிலும் குப்பையடா-நம்
    எழில்மிகு சென்னை காட்சியடா!’’

    இன்றைக்கு பாரதிதாசன் இருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார் என்பதை தங்கள் பொருள்மிகு கவிதைமூலம் சொல்லிவிட்டீர்கள். சென்னைக்கும் நல்ல காலம் பிறக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
  3. // எங்கு காணிலும் குப்பையடா-நம்
    எழில்மிகு சென்னை காட்சியடா! //

    புலவர் அய்யா! உங்கள் சிங்காரச் சென்னை மட்டுமல்ல! தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைமைதான்! எனவே உங்கள் கவிதை தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  4. விரைவில் மாறட்டும்...

    நல்லதொரு கவிதை ஐயா...

    ReplyDelete
  5. உங்கள் ஆதங்கம் நல்ல கவிதையாக.

    ReplyDelete
  6. சிங்காரச் சென்னையின் நிலை இதுவா?

    ReplyDelete
  7. குப்பைக்கும் கொசுவுக்கும் பஞ்சமில்லை குடிமக்கள் துயரோ கொஞ்சம் நஞ்சமில்லை-உண்மை

    ReplyDelete
  8. சென்னை மட்டுமல்ல எங்கும் இதே நிலையே மக்கள் திருந்த வேண்டும்.

    ReplyDelete
  9. வாரிக்கொட்ட வேண்டிய குப்பைகள் பல உள்ளன!
    நன்று

    ReplyDelete
  10. மக்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும்
    மாநகராட்சி தான் பொறுப்பேற்க வேண்டுமா...?

    என்னவோ போங்கள் புலவர் ஐயா.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  11. மீள் பதிவு என்றாலும்
    என்றும் புதிய பதிவாகவே தெரிகிறது ஐயா...
    இங்கிருக்கும் நிலை மாறாமல் இருக்கையிலே...

    ReplyDelete
  12. Arumaiyaana kavidhai. Angu mattumalla, ilangaiyin colombo pondra nagarangalilum idhe nilai thaan. Vaalththukkal. Pls visit my site.

    http://newsigaram.blogspot.com/2012/11/naangalum-thamilargal-thaan-46-14.html

    ReplyDelete
  13. இருபது ஆண்டுகளுக்கு முன் எழில் கொஞ்சும் சொர்க்க பூமியாக இருந்த சென்னை, இன்று மக்கள் பிதுங்கும், காங்கிரீட் விதும்பும் நரகமாய் மாறியது வேதனையே .. ! குப்பைக் கூழங்கள் நிரம்பின, குளங்கள் மறைந்தும் விட்டன .. ! காற்று மாசுப்பட்டும் விட்டன. என் சென்னை நகர் அழகிழந்து பொழிவிழந்து நிற்பதை எண்ணினால் வேதனையே மிஞ்சும் .. :(

    ReplyDelete
  14. எல்லா ஊர்களிலும் இது ஒரு பாரிய பிரச்சனை
    அருமையான கவிதை ஜயா

    ReplyDelete