Friday, November 16, 2012

எனது ஊரே எதுவெனக் கேட்பீர்!?




எனது ஊரே எதுவெனக் கேட்பீர்!
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல 
பெரிதாய் ஏதும் இல்லா தெனினும் 
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே 
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே 
இரண்டு அணைகள் இரட்டணை பேரே!
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம் 
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம 
வந்ததும் விரைவே! வடிவதும் விரைவே !
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே 
செப்பிட இதுதான என்னுடை விருப்பே !
மேலும்,
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் !
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம் 
சிற்றூர் என்றும் செப்பிட இயலா 
பேரூர் என்றும் பேசிட இயலா 
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண 
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க 
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும், 
செய்யும் தொழிலில் சிறப்பெனக் கருதி 
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும், 
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும 
தன்னேர் இன்றி செய்திடப் பலரும் 
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும் 
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும் 
சொல்லப் பலவே எல்லை இலவே 
சொல்வதில் கூட வேண்டும் அளவே 
அதனால்--நான் 
இருந்த காலதில் இருந்ததை அங்கே 
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே 
ஆனால்-- 
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே 
வேண்டியே நானும் வழிந்திட அன்பே 
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே 
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம் 
அடடா ஊரே முற்றம் மாற்றம 
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம் 
கனவாய ஆகிட கண்டேன் சிலரே 
நினவில் வைத்தெனை நலமா என்றார் 
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட 
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு 
பாடலை முடித்தேன் படித்திட நன்றி 

புலவர் சா இராமாநுசம்

14 comments:

  1. தங்கள் ஊரைப் பற்றி அழகான பா வகையில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். நிறைவு வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.மாற்றங்கள் கிராமத்தையும் விட்டுவைக்கவில்லை.

    ReplyDelete
  2. இனிய நினைவுகள்... சிறப்பான வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. சிறிசோ! பெருசோ?! அடிப்படை வசதி இருக்கோ?! இல்லியோ?!
    அவங்கவங்களுக்கு அவங்கவங்க சொந்த ஊர்ன்னா
    ஒசத்திதான்னு உங்க கவிதை புரிய வெச்சுட்டுது ஐயா!

    ReplyDelete
  4. /ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
    வாடிய உளத்தொடு வந்தேன்/

    காலத்தின் கட்டாயம் ஐயா..என்ன செய்வது?மாற்றம் தொடருமே..

    ReplyDelete
  5. ஒவ்வொறு இடமும் தற்போது தன்னுடைய அடயாளங்களையும் பெருமைகளையும் தன்னுடைய புனிதத்தையும் இழந்துக்கொண்டுதான் இருக்கிறது....


    ReplyDelete
  6. ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
    வாடிய உளத்தொடு வந்தேன் .

    சொந்த ஊரைப்பார்க்க போகும் அனைவருக்குள்ளும் எழும் வருத்தம் வரிகளில் தெரிகிறது ஐயா.

    ReplyDelete
  7. அழகான வார்த்தைகளில்
    தெளிவான பொருளுடன்
    இயல்பாக சொன்னவிதம்
    அருமை ஐயா ....
    இன்றைக்கு விளைநிலங்கள்
    எல்லாம் விலை நிலங்களாக
    மாறிப்போய்
    தலைகுனிந்து நிற்கும்
    நெற் கதிர்களுக்கு பதிலாக
    தலை நிமிர்ந்து நிற்கும்
    கட்டடங்களே உள்ளன...

    அருமையான ஆக்கம் பெருந்தகையே...

    ReplyDelete
  8. எல்லோருக்குமே உண்டாகும் மனக்கிலேசம்தான். புலவர் என்பதால் கவிதையாய் நீர் தந்துவிட்டீர்.

    ReplyDelete
  9. ஆம் அய்யா காலம் காட்சிகளை புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது

    ReplyDelete