Friday, October 5, 2012

வேங்கட உன்னடி தொழுகின்றேன்!


  குறிப்பு- புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை!
                      பாமாலை!

    ஆதவன் எழுவான் அதிகாலை
      ஆயர் பாடியில்  அதுவேளை
    மாதவன்  குழலை  ஊதிடுவான்!
      மாடுகள்  அனைத்தும்   கூடிடவே
    ஒன்றாய்   கூடிய   ஆவினங்கள்
      ஊதிய  குழலின்  இசைகேட்டு
    நன்றாய்  மயங்கி  நின்றனவே
      நடந்து மெதுவாய் சென்றனவே!
 
   ஆயர்  பாடியில் மங்கையரும்
     ஆடவர்  பிள்ளைகள் அனைவருமே!
   மாயவன் இசையில் மயங்கினரே
     மகிழ்வுடன் பணியில் இயங்கினரே !
   சேயவன்   செய்த  குறும்புகளே
     செப்பிட இனிக்கும் கரும்புகளே!
   தூயவன்  திருமலை வேங்கடவா
     திருவடி தலைமேல்  தாங்கிடவா !

   ஆயிரம் ஆயிரம்  பக்தர்தினம் 
      ஆடிப் பாடி வருகின்றார்!
   பாயிரம்  பலபல பாடுகின்றார்
      பரமா நின்னருள்  தேடுகின்றார்!
   கோயிலைச்  சுற்றி  வருகின்றார்
     கோபுர தரிசனம் பெறுகின்றார்!
   வாயிலில் உள்ளே நுழைகின்றார்
     வரிசையில் நின்றிட விழைகின்றார்!
 
    எண்ணில் மக்கள் நாள்தோறும்
     ஏழாம் மலைகள் படியேறும்
   கண்ணுக் கெட்டிய தூரம்வரை
     கண்ணன் புகழே போற்றுமுரை
   பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
     பஜகோ விந்தமே செய்கின்றார்!
   விண்ணொடு மண்ணை அளந்தவனே
      வேங்கட உன்னடி தொழுகின்றேன்
        
              புலவர் சா இராமாநுசம்

11 comments:


  1. மரபுக்கவிதையெனச்சொல்லி எம்
    மனம் கவர்ந்த
    மாதவன் மாயவன் புகழ் பாடி
    மயங்க வைத்தீரே = எம்மை
    இரங்க வைத்தீரே..!

    சுந்தரக் கவிதை இது.
    சொல்லமுதமும் இது.
    தேனுமிது.
    தீஞ்சுவைத் தமிழுமிது.

    பாடு பாடு என என் உள்ளம்
    படாத பாடு படுத்துகிறது.
    பாடுகிறேன்.
    ஆடுவதும் இல்லை
    ஓடுவதும் தங்கள்
    விருப்பம்.

    சுப்பு ரத்தினம்.



    ReplyDelete
  2. கண்ணன் மீதோர் பாமாலை
    கண்டோர் மகிழத்தான் சூட்டி
    விண்ணார் முகிலும் தாள்வணங்கும்
    வேங்கடகிரியான் புகழ்தன்னை
    வண்ணந்தீட்டி ஓவியமாய்
    வழங்கிட்டீரே வந்தோர்க்கே
    எண்ணாதவரும் உம்கவியால்
    எய்துக என்றும் மாலருளை!

    ReplyDelete
  3. பாமாலை அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete
  4. மிக அருமை. மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  5. ஏழு மலையானை போற்றும் கவிதை இனிமை.பாமாலை மணக்கிறது.
    த.ம.3

    ReplyDelete
  6. அழகிய பாமாலை
    வணக்கம் ஜயா எப்படி சுகம்?

    ReplyDelete
  7. ஐயா எனக்கும் தங்கள் துணைவியாரின் நினைவே வருகிறது.

    ReplyDelete

  8. திருவேங்கடவனின் புகழினை பாமாலை சாற்றி பாடி மகிழ்ந்த நெஞ்சத்திற்கு நன்றி!


    ReplyDelete
  9. தங்கள் பாமாலை கண்டால் மாதவனின் மனமும் மயங்கும். அழகுதமிழில் அருமையான பா படைத்தமைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  10. வேங்கடவன் அருள் கிடைக்கட்டும்!
    த.ம.7

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா! அருமையான பா மாலை! இங்கு விரதம் பிடிக்கலாம்! ஆனால் காகங்களைத்தான் காணவே முடியாது!

    ReplyDelete