Thursday, October 4, 2012

ஏன் சிரித்தார் பிள்ளையார் ! ! ! ? ? ?

ஊருக்கு ஒருபுறத்தில் ஒற்றை ஆலமரம்
வேருக்குத் துணையாக விழுதுபல தொங்கிடவும்
பேருக்குக் கடவுளென பிள்ளையார் அமர்ந்திருக்க
யாருக்கும் அவர்மீது ஏனோ பாசமில்லை

ஏழைக் கடவுளவர் எண்ணையில்லை விளக்குமில்லை
பேழை வைத்துப்பணம் போடுபவர் ஒருவரில்லை
வாழை இலையில்லை வைக்கவில்லை வடைஎதுவும்
கோழை ஏழையென குடியிருந்தார் அவர்பாவம்

பிள்ளையார் பிறந்தநாள் ஊர்நடுவே பந்தலிட்டு
உள்ளமிக பக்தியொடு உருவான பிள்ளையாரின்
வெள்ளைநிற உருவத்தை வீதியெல்லாம் வலம்விட்டு
மெள்ளவரும் ஊர்வலமே மேளதாளம் சத்தமிட

மரத்தடி பிள்ளையாரோ மௌனமாய் பார்த்திருக்க
சிரத்தையெடு ஊர்வலமும் சென்றதுவே குளம்நோக்கி
கரமெடுத்து வணங்கிவிட்டே கரைத்தார்கள் நீரதிலே
வரசக்தி  மரத்தடியார் வாய்விட்டு  சிரித்தாரே!

                            புலவர் சா இராமாநுசம்

14 comments:

  1. நிச்சயம் சிரித்திருப்பார் விநாயகர் இவர்களைக் கண்டு. நகைச்சுவையும் கருத்துச் சுவையும் இழையோடிய கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. //வரசக்தி மரத்தடியார் வாய்விட்டு சிரித்தாரே!//
    அவர் மட்டுமா சிரித்தார். நானும் வாய்விட்டு சிரித்தேன் கவிதையைப் படித்ததும்.

    ReplyDelete
  3. மரத்தடி பிள்ளையாரோ மௌனமாய் பார்த்திருக்கசிரத்தையெடு ஊர்வலமும் சென்றதுவே குளம்நோக்கிகரமெடுத்து வணங்கிவிட்டே கரைத்தார்கள் நீரதிலேவரசக்தி மரத்தடியார் வாய்விட்டு சிரித்தாரே!//
    அற்புதமான வரிகள்!
    முடிந்தால் என்னுடைய வலைப்பூ பக்கம் வாருங்களேன்!
    www.esseshadri.blogspot.in
    கவிதையென சில உண்டு! கண்டுங்கள் கருத்தினக் கூறுங்களேன்! நன்றியுடன்

    ReplyDelete
  4. நல்லதொரு கவிதை ஐயா...:)
    ஆலமரம் இருக்கும் இடங்களிலெல்லாம் பிள்ளையாரையும் உருவாக்கி விட்டால் பிள்ளையாரின் எண்ணைக்கை அதிகரிக்கத்தான் செய்யும் பின்னர் கடவுளை (கோயிலை) பராமரிக்க செலவும் கூடும் அதனால் கடவுள் கூட அனாதையாகிறார்......
    நாம் ஏன் எல்லாம் மரத்தடியிலும் கடவுளை நிறுத்த வேண்டும்.....?

    ReplyDelete
  5. கட்டாயம் சிரித்திருக்க வேண்டும் அய்யா ..
    இப்போ பெருவிட்டன இந்த கூத்துக்கள் .. தெருவுக்கு தெரு

    ReplyDelete
  6. நல்ல வரிகள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  7. மிகவும் ரசிக்கவைத்தக் கவிதை. கல்லுப்பிள்ளையாராய் இருப்பதில் எத்தனை நன்மை? ஊர்வலமும் வேண்டாம். ஊருணியில் கரைக்கவும் வேண்டாம். நகைச்சுவை இழையோடியக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  8. பாவம் தான் பிள்ளையார்!

    கவிதை அருமை புலவர் ஐயா.

    ReplyDelete
  9. மரத்தடியாரைப்போல நானும் சிரித்தேன்..

    ReplyDelete
  10. நானும் மிகையாக சிரித்தேன் தங்கள் கற்பனை வளங்கண்டு
    பிள்ளையாரும் சிரித்திருப்பார் இந்தக் கவிதையைக் கண்டு :)
    அருமை !...மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  11. அருமையான கவிதை. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற கவிதை.

    செய்யது
    துபாய்

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete
  13. அரசமரத்தடிப் பிள்ளையார்கள் இப்படித்தான்!

    ReplyDelete