Wednesday, October 24, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!



எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!




ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

    திருமிகு இரஜினி பிராதாபும், வேறு சில உறவுகளும்
வெண்பா வேண்டுமென விரும்பி கேட்டதால் இன்று, இது
மீள் பதிவு. விரைவில் புதியன வரும்.
                                  புலவர சா இராமாநுசம்



12 comments:

  1. மீள் பதிவு என்றாலும் தமிழ் நாட்டிற்கு எக்காலமும் பொருந்தும் கவிதை!

    ReplyDelete
  2. காலம் பதில்செ◌ால்லும் கன்னித்தமிழ்வெல்லும்
    ஞாலம் அறியும் சிறப்பு.
    உண்மை வரிகள் ஐயா நன்றி.

    ReplyDelete
  3. மீள் பதிவென்றாலும் இனிய பகிர்வு. தொடரட்டும் புதிய வெண்பா.

    ReplyDelete
  4. கருத்தாழம் கொண்ட கவிதைகளைப் பெற்று
    விருந்தாக உண்டு களித்தேன்! - விருத்தமுடன்
    வெண்பா பிடிக்கும்! வியன்தமிழ் கொஞ்சிட
    அன்பாய் அறிந்தேன் அறம்!



    ReplyDelete
  5. தமிழ் நாட்டிற்கு எக்காலமும் பொருந்தும் கவிதை ஐயா...

    ReplyDelete
  6. நல்லதொரு வெண்பா ஐயா
    புதியது தாருங்கள்

    ReplyDelete
  7. அருமை... ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  8. முண்டாசு பாரதி தான் வந்துவிட்டானோ தமிழுக்கு களங்கம் என்றால் கொதித்தெழுவானே....

    வரிகளில் வெண்பா அழகுறச்செய்தது என்றால்....
    தீந்தமிழை ரசித்து ருசித்து பகிரப்பட்ட திருக்கண்ணமுது ருசியாய் இனித்தது கவிதை வரிகள் அப்பா...

    நம் நாட்டில் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து மற்றமொழி அதிகம் ஆதிக்கம் செலுத்துவதை மிக அருமையாக குறிப்பிட்டீர் அப்பா..

    உண்மையே... தமிழை அழகாய் உச்சரிப்பதற்கும் நுனி நாக்கு ஆங்கிலம் புரியாமல் மொழிவதற்கும் இருக்கும் வேறுபாடு அறியமுடிகிறது....

    தமிழ் வேதங்கள் கரைத்து குடித்தவர் பண்டிதர் ஆகும் காலம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து குருகுலம் என்ற நிலை மாறி ஆங்கில கான்வெண்ட்டில் பிள்ளைகளை சேர்ப்பது பெருமையாக கருதும் பெற்றோரையும் விட்டுவைக்கவில்லை கவிதை வரிகள்....

    மிக மிக அழகிய மீள் பதிவு வெண்பா பகிர்ந்தமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் அப்பா..

    தங்களின் உடல்நலம் எப்படி இருக்கிறது அப்பா?

    ReplyDelete
  9. மீள்பதிவாயிருந்தாலும் நல்லதொரு தமிழில் வெண்பா ஒன்றை இங்கு கண்டது மனதிற்கு நிறைவாக இருந்தது!!

    ReplyDelete
  10. சடங்காகிப் போயிற்றாம் சட்டந்தான் இங்கே

    உன்மையான ஆதங்கம் ,இன்றைய சூழ்நிலையில்

    ReplyDelete