Tuesday, October 16, 2012

இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே!




கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
    கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
   தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
    ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
    நிம்மதி ஏற்பட செய்வீரா?

பட்டப் பகலில் நடக்கிறதே-பெரும்
    பணமே கொள்ளை! அடிக்கிறதே!
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
    வெறியுடன் ஊரில் திரிகிறதே!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
    திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
    கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!


வலையைக் கொண்டே தினத்தோறும்-தன்
     வாழ்வை நடத்திடக் கடலோரம்
அலையைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையே தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையா! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

தொழிலே இன்றி வாழ்கின்றான்-மனத் 
     துயரால் குமுறி அழுகின்றான்
விழிநீர் வழிய வேண்டுகின்றான்-மின்
    வெட்டை நீக்கென தொழுகின்றான்
வழியே இல்லையே இனிவாழ-அவன்
     வாழ்வில் இருளே நனிசூழ
பழிதான் முடிவில் நிலையாகும்-எங்கு
    பார்க்கினும் அமைதி இலையாகும்
     

             புலவர் சா இராமாநுசம்




27 comments:

  1. நடக்கும் உண்மைகள்... நன்றாக சாடியுள்ளீர்கள்... பல முடிவுகள் விரைவாக எடுக்க வேண்டும்...

    ReplyDelete
  2. என்ன செய்வது என்ற கேள்வி தான் எல்லோர் மனதிலும் எழுகிறது. உங்களின் வருத்தங்கள் சந்த நயத்துடன் இருக்கிறது. ஆனால் நம் தமிழக அரசோ நயமில்லாமல் இருக்கிறது. வருத்தங்கள் மட்டுமல்ல, ஏமாற்றத்துடனும் ஏக்கத்துடனும் இன்றோ நாளையோ தீரும் என்ற நம்பிக்கையுடனும்... தமிழகம்

    ReplyDelete
  3. தொழிலே இன்றி வாழ்கின்றான்-மனத்
    துயரால் குமுறி அழுகின்றான்.

    உண்மை நிலையை உணர்த்திய வரிகள் ஐயா.

    ReplyDelete
  4. அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். அதை எதிரொலித்த உங்கள கவிதை நன்று ஐயா.

    ReplyDelete
  5. //இலையோ நாட்டில் அரசென்றே//
    இந்த ஐயம் உண்மையிலேயே எனக்கும் எழுகிறது. எல்லோருடைய மனக்குமுறலையும் கவிதையில் வடித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. வாழ்கையில் நடக்கும் உண்மையை மிக அழகாக சொல்லி இருக்கிறிர்கள் ஐயா!....பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. நல்ல வரிகள் ரசித்தேன்
    படிக்கும் போது எங்க ஊரில நடந்த சம்பவமொன்றும் ஞாபகத்துக்கு வருகிறது
    தன் மகன் உழைத்து அனுப்பிய 40 இலட்சம் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வரும்போது வழியில் கொள்ளையர்கள் பணத்தைத் திருடிச் சென்றதுதான் அச் சம்பவம்

    ReplyDelete
  8. வணக்கம் புலவர் ஐயா.

    புவியில் நடக்கும் கொடுமைகளைப்
    பொறுக்க முடியா கண்டித்தே
    கவியின் வழியில் கொட்டிநன்றாய்க்
    கருத்தாய் அழகாய்க் கவிபடைத்தீர்!
    குவிந்த மனதாய் நம்அரசு
    கொடுத்தக் கருத்தை அலசிடுமா?
    தவித்த வாயில் தண்ணீராய்த்
    தமிழின் சுவைதான் நமக்கன்றோ!

    நன்றி.

    ReplyDelete
  9. வழியே இல்லையே இனிவாழ-அவன்
    வாழ்வில் இருளே...
    துன்பங்கள் கவிதையாக.

    ReplyDelete
  10. வேதனையின் வெளிப்பாடு.. அருமை புலவர் ஐயா

    ReplyDelete
  11. தமிழகத்தின் இருள் நிலையை அழகாக படம் போட்டுக் காட்டியது தங்களது கவிதை. வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  12. மன வேதனையை வெளிப்படுத்தும் கவிதையின் உணர்வுகள் என்னையும் தாக்கியது!

    ReplyDelete
  13. மீனவர்கள், உழைப்பாளர்கள் என்று அத்தனை பேரும் மிகவும் துன்பப்படுகிறார்கள். மத்திய அரசும் மாநில அரசும் இரண்டுமே வேடிக்கைதான் பார்க்கின்றன. என்று மாறும் இந்நிலை? அருமையான படைப்பு அய்யா! கவிச்சுவை நன்று.

    ReplyDelete
  14. நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி புலவர் ஐயா....

    வேதனையின் வெளிப்பாடு...
    நல்லதொரு படைப்பு புலவர் ஐயா...

    ReplyDelete
  15. இலையோ நாட்டில் அரசென்றே-
    அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே!

    விடிவுகாலம் விரைவில் பிறக்கட்டும் !

    ReplyDelete
  16. இன்றைய அரசியலும் நாடு படும் அவஸ்தைகளும் மக்கள் படும் வேதனைகளையும் பட்டவர்த்தனமாக இங்க வரிக்கு வரி கவிதை சொல்லி செல்கிறது ஐயா… ஐந்தாண்டுக்கு ஒரு முறை நாட்டுமக்களின் தலைவிதி மாறி சுபிக்ஷம் கிடைக்குமென்று மக்கள் எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்து நம்பிக்கையுடன் ஓட்டு போட…. ஆனால் அரசியல்வாதிகளின் நிலை தான் உயர்ந்தும் தாழ்ந்தும் போகிறது. மக்களின் நிலை தாழ்ந்தே தான் இருக்கிறது என்பதை நிதர்சனம் உரைக்கச்சொல்கிறது கவிதை வரிகள்….

    கொலை எங்க திரும்பினாலும் வீடு புகுந்து திருட்டு, கொலை, கள்ளக்காதலன் வெட்டிக்கொலை, தந்தைமீது கோபம் கொண்டு படிக்கச்சொன்னார் என்று கோபத்தில் துப்பாக்கி எடுத்துச்சுட்டு கொலை…. திறந்திருந்த வீட்டில் துணிகர திருட்டு… இப்படி தான் தினம் தினம் செய்திகளில் படிக்கிறோம்…இதெல்லாம் ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க இதெல்லாம் சீர் செய்ய வேண்டிய அரசியல்வாதிகளோ தனக்கென்ன வந்தது என்று தான் மட்டும் சுகபோகமாக சௌக்கியமாக நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கின்றனர்…. இந்த நாட்டுக்கு அரசன் இருந்தா என்ன இல்லன்னா என்ன எப்பவும் அதே அவஸ்தைகள் தான் தொடர்கிறது என்ற நிலையில் வேதனைகள் வரிகளாக இங்கே கவிதை மிக சிறப்பு ஐயா…

    ஒருபுறம் தினம் தினம் வயிற்றுப்பிழைப்புக்காக கடலில் தன் உயிரைக்கூட பொருட்படுத்தாது செல்லும் மீனவர்கள் திரும்ப உயிரோடு வருவதே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் இரண்டு பக்கமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் எத்தனை சாவுகள் என்று மனதை கனக்கச்செய்யும் வரிகளால் கவிதை எழுதி இருப்பது மிக அருமை ஐயா…

    எங்கும் எப்போதும் பிரச்சனைகளே சூழ மின்வெட்டு ஒரு பக்கம், விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்வது ஒரு பக்கம், திருட்டும் கொள்ளையும் கொலையும் ஒரு பக்கம் இதெல்லாம் நம்மை முழுமையாக அமிழ்த்திக்கொண்டிருக்கிறதே. இதில் இருந்து மீண்டு வெளியேறும் வழி காண்பிக்கச்சொல்லி இறைஞ்சும் உன்னதமான கோரிக்கை வரிகள் அற்புதம் ஐயா…

    சிறப்பான கவிதை பகிர்வுக்கு அன்புநன்றிகள் ஐயா….

    ReplyDelete