Saturday, October 13, 2012

பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான் பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்



                புலவர் கல்லுரி விடுதியில் தங்கிய
           போது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....!


பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்
          பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்
  நோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்
          நோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்
  வாயெடுத்து  சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்
           வாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்று
  தாயெடுத்து அணைக்காத குழந்தை போல-ஐயா
         தவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சா

  நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ
           நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே    
  சித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக
         செப்பினால்  நாங்களும் அதனைக் கண்டே
  தத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்
           தகராறு வேண்டாமே வயிறும் மூட
  இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து
         இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்


   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
            மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
   கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அட்டா
            கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்
    அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
            அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
    படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
             பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!


                                    புலவர் சா இராமாநுசம்

17 comments:

  1. மூட்டை பூச்சி விளைவிக்கும் தொல்லையைக் கூட அழகான கவிதை ஆக்கிவிட்டீர்களே!ஒழிக மூட்டைப் பூச்சி உங்களை கடித்ததற்கு,நன்றி மூட்டைபூச்சிக்கு கவிதை கிடைத்ததற்கு.

    ReplyDelete
  2. சற்றேநம் கண்ணிமைகள் சாயும்நேரம்-வந்து
    சட்டென்றே குடிக்கும்நம் உதிரம்தன்னை
    உற்றேதான் பார்த்தாலும் மாயம்போல– தம்
    உருவத்தைக் காட்டாதே ஒளிந்திருக்கும்
    குற்றேவல் மூட்டைக்கே செய்கின்றோமோ?– ஓர்
    குடிபானம் ஆனதுவோ மாந்தர் ரத்தம்
    வற்றாத தமிழெடுத்தே வாதைதன்னை- நீர்
    வழங்கிட்டீர் வாசிப்போர் அறிவதற்கே!

    ReplyDelete
  3. மூட்டை பூச்சி வைத்து ஓர் கவிதையா நன்று புலவரே

    ReplyDelete
  4. haaa haa...

    arumai ayya!

    moottaikku oru kavithai...

    ReplyDelete
  5. கடைசியில்தான் கண்டுகொண்டேன் கவிதையின் கருவினை..
    அழகாக வடித்துள்ளிர்கள் ஐயா

    ReplyDelete
  6. ஹா... ஹா... மூட்டை பூச்சியை நசுக்கினாலும் நிறைய வருமே...

    ReplyDelete
  7. அருமையான செந்தமிழ்க் கவிதை. ஒவ்வொரு வரியையுமே நன்கு ரசித்தேன் அய்யா! நன்றி உங்களுக்கும் உங்களைக் கடித்த மூட்டைப்பூச்சிக்கும்.

    ReplyDelete
  8. மூட்டைப் பூச்சியாரே ஒழிக!!!!! .....எவ்வளவு தைரியம்
    எங்க ஐயா உடம்புல இருந்து இரத்தம் குடிச்சதும் இல்லாமல்
    அவருக்கு அருமையான சந்தக் கவிதை கேக்குது ஓசியில :)
    இருந்தாலும் இப்படி ஒரு அருமையான கவிதைய வர வச்சதுக்கு
    சின்னதா நன்றி மூட்டைப் பூசிக்கும் .இனி கிட்டவும் நெருங்க கூடாது
    எங்க ஐயாவ .இறைவன் உங்களுக்கு எல்லா நலனையும் வழங்க
    வேண்டும் என்பதும் இந்த மகளுடைய வேண்டுதல் ஐயா .உங்கள்
    விருப்பத்துக்கு இணங்கி தொடர்கதைகள் தொடர்ந்துள்ளேன் .
    முடிந்தவரை வாசித்து மகிழுங்கள் .குறைகள் இருப்பின் அதையும்
    செம்மைப் படுத்துங்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .உடல்
    ஆரோக்கியத்திலும் தயவு செய்து மிகுந்த அக்கறை கொள்ளுங்கள் ஐயா .

    ReplyDelete
  9. வல்லவருக்கு புல்லும் ஆயுதம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

  10. வணக்கம்!

    கவிச்சுடா் இராமாநுசரைப் போற்று!

    சோலையென மணக்கின்ற கவிதைக் காடு! - பெண்ணே
    சொக்குதடி சொக்குதடி இதயக் கூடு!
    மாலையென மின்னுதடி சொற்கள் யாவும்! - எனறன்
    மதியேறி அமா்ந்திடவே மெல்ல மேவும்!
    ஆலையெனக் கவிதைகளை நெய்யும் ஐயா! - உங்கள்
    அருந்தமிழை எழுதுவது தெய்வக் கையை?
    காலையென இரவுமெனப் பாக்கள் தீட்டும் - நற்
    கவிஇராமா நுசா்போல உண்டா காட்டும்!

    சந்தமொலிர் இவ்வலையை நாடி வந்தேன் - வல்ல
    சிந்துகவி பாரதிநான் சீா்கள் தந்தேன்!
    தந்தமொளிர் பொருளாக வலையின் மேன்மை - இங்குத்
    தந்தகவி அத்தனையும் இனிக்கும் தேன்..மை!
    சொந்தமொளிர் நெஞ்சுடனே வருவேன் நாளும் - உங்கள்
    சுடா்தமிழால் என்புலமை வளரும் மேலும்!
    சிந்தையொளிர் கவிஇராமா நுசரைப் போற்று - மனமே
    செப்புகின்ற அவா்வழியில் கடமை யாற்று!

    கல்மூட்டை மீதிருந்தும் உறங்கக் கூடும் - நன்றே
    காய்துள்ள புல்மீதும் துாக்கம் நீளும்!
    நெல்மூட்டைக் குட்டியென மூட்டைப் பூச்சி - அம்மா
    நீளிரவு முழுமையிலும் அதனின் ஆட்சி!
    வல்மூட்டை போலிருக்கும் எழுத்தின் தன்மை - எல்லா
    வரிகளிலும் மிளிர்கிறது தமிழின் நுண்மை!
    சொல்மூட்டை அழகாக அடிக்கிப் பாடும் - கவிச்
    சுடா்இராமா நுசரையே நெஞ்சம் தேடும்!

    ReplyDelete
  11. அன்ஙிலத்திக் ode என்ரு ஒரு வகை உண்டு,;அது போல இது” ode to a bedbug"!அருமை

    ReplyDelete
  12. திருத்தம்”ஆங்கிலத்தில்” ’அன்விலத்தில்’ அல்ல

    ReplyDelete
  13. புலவர் ஐயாவைக் கடித்த மூட்டைப்புச்சி...
    வாழ்க வாழ்க...

    (இல்லையென்றால் இப்படி ஒரு பாடல் நமக்குக் கிடைத்திருக்குமா...?)


    ReplyDelete
  14. மூட்டைப் பூச்சுகூட கவிதையாகும் அற்புதம் அருமை

    ReplyDelete
  15. அன்புள்ள புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! உங்களுடைய இந்த கவிதையின் கடைசி பாராவை எனது மூட்டைப் பூச்சி தொல்லை என்ற கட்டுரையில் மேற்கோளாக எடுத்து சொல்லியுள்ளேன். நன்றி!
    http://tthamizhelango.blogspot.com/2014/06/blog-post_3.html

    ReplyDelete