Monday, September 10, 2012

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி

 நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்
   நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன்  ஒன்றும்
தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்
   தோற்றதெவர் வென்றதெவர்! ஆயவதென்ன! விடிவில்!
   
 கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
   கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
  தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
   பேசுவதால் பலனுண்டா  அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
  புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே


நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
    நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
    விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே


பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
    பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே  தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
   முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்


நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
    நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
    அவலந்தான் முடியாத தொடராக நின்றும்


                                              புலவர் சா இராமாநுசம்


  
  


26 comments :


  1. சாக்கடை எனச் சொல்லியே நல்லோரும் வல்லோரும்
    ஒதுங்கிவிடுவதால் வருகிற கேடு இது
    சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான கவிதை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வீணானது மக்களின் வரிப்பணம் மட்டுமல்ல; அவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான்!

    //பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
    பேசுவதால் பலனுண்டா அத்தனையும் களவே//

    மிகச்சரி!

    ReplyDelete
  3. //நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
    நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி//

    அந்த நாள் வருமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும். நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. மிகவும் வெட்ககேடான விஷயம்..

    நல்லதொரு அரசியலமைப்பு உறுவாகவேண்டும்

    ReplyDelete
  5. நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
    நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
    விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
    விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே...
    ஆதங்க வரிகள் ஐயா பதில் தான் எங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  6. //நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
    நிறம்மாறும் பச்சோந்தி கட்சிகளே தொல்லை
    விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
    விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே//

    அருமையான கேள்விகள்.. பதில்தான் யாருக்கும் தெரியலை :-(

    ReplyDelete
  7. சாக்கடைகளை தொடரும் சாக்கடைகள் நிறைய பேர்கள் உள்ளனர்... நல்லவர்களுக்கு அவர்களின் நினைப்பே இல்லாமல் இருந்தாலே போதும்... நல்லவர்களுக்கு நல்லவர்கள் தானாக வந்து சேருவார்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  8. பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
    பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்//


    உண்மை உண்மை அய்யா ... மாறனும் அய்யா ..

    ReplyDelete
  9. ஐயா இன்றைய அரசியல் வாதிகள் முதல் போட்டுதான் அரசியலுக்கு வருகிறார்கள்! நல்லவர்களை தேட வேண்டியுள்ளது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  10. சாட்டையடிக் கவிதை ஐயா...
    அருமையான கவிதை.

    ReplyDelete
  11. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை " என்னும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வந்தது.
    தங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  12. மக்கள் பணத்தை வீணாக்கும் அரசியல் வாதிகளுக்கு கவிதையில் சவுக்கடி கொடுத்திருக்கிறீர்கள.அவர்கள் காதுகளில் ஏறுமா?
    த ம 10

    ReplyDelete
  13. பணத்திற்கும் பதவிக்குமான மனிதர்களுக்கு நல்லதொரு கவியெறி !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...