Wednesday, September 5, 2012

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதையும் வேண்டுகோளும்!

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
   எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
    ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
    சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
    அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
   
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
   படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
   வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
   தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
   திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
   பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
  நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
  அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
  விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
   சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
   காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
   பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர்  சேவை–உலக
   மக்களின் வாழ்வுக்குச் செய்திடும்  சேவை

                    புலவர் சா இராமாநுசம்

48 comments:

  1. பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
    பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
    மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
    மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை//

    எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமாயின்
    சூழல் குறித்தும் மாணவர் சமுதாயம் குறித்தும்
    நாம் அதிக அக்கறை கொள்ளத்தான் வேண்டும்
    என்பதை நேர்த்தியாகச் சொல்லிப்போகும்பதிவு
    அருமையிலும் அருமை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. உங்கள் பாணியில் ஆசிரியர் கவிதை அருமை.உங்கள் வேண்டுகோளை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும்.

    ReplyDelete
  3. சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு... நன்றி ஐயா...

    மெழுகுவர்த்தி போல் வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அய்யா! எழுத்துருவின் அளவை சற்று அதிகரித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.என் கணினியில் மட்டும் சிறியதாகத் தெரிகிறதா? என்பதும் தெரியவில்லை
    த ம 2

    ReplyDelete
  5. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. தங்களுக்கு எங்கள் பணிவான ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  7. சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வை வளரும் பருவத்திலேயே பிள்ளைகளுக்கு ஊட்டுதல் ஆசிரியர்தம் பொறுப்பென்றும் அவற்றைப் பேணல் மாணவர்தம் கடனென்றும் அழகாய் உணர்த்திய வரிகள். இயற்கையைப் பேண, இனிய வாழ்வு தானே அமையும் என்று அறிவுறுத்திய கவிதைக்குப் பாராட்டுகளும், ஆசிரியர் தின வாழ்த்துக்களும் ஐயா.

    ReplyDelete
  8. அருமையான வரிகளுடன் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
    என்னையும் வியப்பில் ஆழ்த்தியது !........வாழ்த்துக்கள்
    ஐயா உங்களுக்கும் .மனதை கவர்ந்த வரிகள் ....

    பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
    பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
    நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
    நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
    அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
    அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
    விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
    விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை


    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  9. புலவர் அய்யா அவர்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. // தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்// மிக மிக அருமையான வரிகள் அய்யா

    ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
    பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
    மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
    மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை

    ஆசிரியர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  12. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
    உங்களுக்கும் தனியாக.

    ReplyDelete
  14. நல்லது ஐயா..!

    தங்கள் வாழ்த்துக்கள். அன்புக்கும் நன்றி

    ReplyDelete
  15. ஆசிரியர் தினத்தன்று அருமையாக எழுதப்பட்ட அழகுக்கவிதை.நல்வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
  16. அழாகான கவிதை அய்யா, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

    ReplyDelete
  17. அன்பு ஐயா.
    உங்கள் கவிதை அருமையைக் குறிப்பிட எனக்கு அருகதை இல்லை.
    ஆசிரியராக உங்கள் எழுத்தைப் படிக்க எனக்கு எழுத்தறிவூட்டிய
    என் தமிழ் ஆசிரியரையும் உங்களையும் வணங்குகிறேன்.

    ReplyDelete
  18. வணக்கம் அய்யா

    பதிவுலகில் தமிழ் வளர்க்கும் ஆசானே வாழ்த்துங்கள்!

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

    நன்றி!!

    ReplyDelete
  19. இன்று தேவையான வேண்டுகோளுடன் அருமையான கவிதை.

    வணங்குகிறேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  20. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete
  21. வழமையான வேண்டுகோள் அல்ல
    வாழ்வதற்கான வழி -ஆம்
    சுற்றுசூழல் பேணுதல்

    இனியதை வேண்டும்
    இந்நாளில்
    தங்களின் ஆசி வேண்டும்

    ReplyDelete
  22. உங்கள் வரிகளை அழகு என்று சொல்லிச் செல்ல எனக்கு தகுதியில்லை என நினைக்கிறேன் ...
    உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் வாக்கியங்களின் பிறப்புக்கள் போல் எனக்குத் தோன்றுகிறது...

    ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  23. //கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
    காரணம் யாருக்கும் புரியவே இல்லை
    பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
    பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே//

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  24. நல்ல நாளில், நல்ல கருத்தை முன் வைத்துள்ளீர்கள்..
    நல்லது....

    பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
    பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
    நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
    நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
    அலையாக பேராழி புகுந்திட உள்ளே

    ReplyDelete