Friday, September 7, 2012

வந்தாரை வரவேற்று வாழும்தமிழ் நாடே-உலா வந்தவரை விரட்டியது சிந்திக்கா கேடே!


வந்தாரை வரவேற்று வாழும்தமிழ் நாடே-உலா
    வந்தவரை விரட்டியது சிந்திக்கா கேடே
நொந்தாராய் திரும்பினாராம் அன்னவரும் வீடே-நல்
    நோக்கமல்ல! நோக்கிடுவீர்! நோக்கின்எதிர் கேடே!

அவரென்ன செய்தார்கள் விரட்டிவிட அங்கே-பாவம்
    ஆண்டவனை வணங்குதற்கே வந்தவராம் இங்கே
தவறென்ன செய்தார்கள் தாக்கியவர் ஓட-அழகுத்
    தமிழ்ப்பேசக் கண்டோமே! எண்ணியதேன்? சாட

அப்பாவி மக்களிடம் நமக்கென்ன கோபம்-வெறும்
    ஆத்திரத்தில் விரட்டுவது அறியாமை! பாவம்!
அப் பாவி பக்சேவும் வருகின்றான் தடுப்போம்-நாம்
    அனைவருமே ஒன்றாகி அறப்போரும் தொடுப்போம்!

ஒற்றுமைக்கே நம்மிடையே வழியில்லா தன்மை-காலம்
    உணர்த்தியதே பல்வகையில் அறிந்திட்ட உண்மை!
பெற்றதென்ன இதனாலே! ஆய்திடவும் வேண்டும்-மேலும்
    பெரிதாக்கி இனியேனும் செய்யாதீர் மீண்டும்!

போர்குற்ற வாளியென  ஐ.நா வும சொல்ல-ஆய்ந்து
    புகன்றபின்னும் வருகின்றான் துணிவுமிக கொள்ள
யார்குற்ற வாளியிங்கே எண்ணிடவோம் ஈண்டும்-ஈழம்
    யாராலே அழிந்ததென ஆய்வோமா யாண்டும்!

யாதுமெம தூரென்றே வாழ்ந்தவனே தமிழன்-உலகில்
   யாவருமே கேளீரென வாழ்ந்தவனே தமிழன்!
தீதுமென எவருக்கும் செய்தறியாத் தமிழன்-எட்டுத்
    திசைநோக்கி ஓடுவதா? ஐயகோ! தமிழன்!

அரக்கனவன் வருகைதனை தடுக்கவென வாரீர்-இங்கே
    அனைவருமே இணைந்தரென சொல்லவென சேரீர்
இரக்கமிலா கொடுங்கோலன் வந்துவிட்டே செல்ல-நாம்
    இடங்கொடுத்தால்! இழிவாகும் உலகமெல்லாம் சொல்ல

எண்ணிடுவீர்! இணைந்திடுவீர்! உலகமதும் காண-எனில்
    எள்ளல்தான் மிஞ்சிடுமே உள்ளமிக நாண
திண்ணியராய் செயல்படுவீர் நாம்தமிழர் என்றால்-உடன்
    தேவையிது வெற்றிபெற சேர்ந்தின்றே நின்றால்...!

              செய்வீரா?  

                         புலவர் சா இராமாநுசம்

34 comments:

  1. //அரக்கனவன் வருகைதனை தடுக்கவென வாரீர்-இங்கே
    அனைவருமே இணைந்தரென சொல்லவென சேரீர்
    இரக்கமிலா கொடுங்கோலன் வந்துவிட்டே செல்ல-நாம்
    இடங்கொடுத்தால்! இழிவாகும் உலகமெல்லாம் சொல்ல//

    அருமையான கவிதை ஐயா ! வந்துவிட்ட அப்பாவிகளை விட்டு விட்டு வரவிருக்கும் படுபாவிகளை விரட்ட முனைவோம் !!! அது தான் உண்மையான தமிழன் வீரம் !!!

    ReplyDelete
  2. // ஒற்றுமைக்கே நம்மிடையே வழியில்லா தன்மை-காலம்
    உணர்த்தியதே பல்வகையில் அறிந்திட்ட உண்மை! //

    ஒற்றுமை இல்லாததோட, விளைவு 1 கோடி சிங்கள மக்கள், 10 கோடி தமிழர்கள உதாசீனப்படுத்துறாங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete

  3. யாதுமெம தூரென்றே வாழ்ந்தவனே தமிழன்-உலகில்
    யாவருமே கேளீரென வாழ்ந்தவனே தமிழன்!
    தீதுமென எவருக்கும் செய்தறியாத் தமிழன்-எட்டுத்
    திசைநோக்கி ஓடுவதா? ஐயகோ! தமிழன்!
    /////////////////////////////////////////////////

    அழகான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. ஒற்றுமையோடு இருந்தால் எதனையும் செய்ய முடியும்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. ஆமாம்... அரக்கன்தான். அவசியம் விரட்டிவிட வேண்டியது அவரைத்தான். தமிழ் மக்களின் ஒற்றுமை... அது ஒன்றுதான் பற்றாது. சிந்தனையைத் தூண்டிய நற் கவிதை. அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. வணக்கம் அய்யா ...
    நம் அறிவீனத்தை மிக அழகாய் வரிகளில் செதுக்கி உள்ளீர் ..
    அரக்கனை அழிக்க முடியாமல் அவர்கள் நாட்டினரை விரட்டுவது சரியல்ல...

    அன்பு வணக்கங்களும் , நன்றிகளும் அய்யா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  7. அப்பாவித் தமிழரை மஹிந்தன் கொன்றொழித்த போது பாற் சோறு பொங்கி உண்டவர்கள் இவர்கள். இவர்களை துரத்தியதில் தவறென்ன. சரித்திர காலம் தொட்டெ எம்மை எதிர்த்தவர்கள் எதிரியாய் அசிங்கங்களாய் எண்ணியவருடன் எப்படி இனைந்து வாழ முடியும். எம் வலிகள் இவர்களுக்கும் புரிய வேண்டும். அது சரி வந்தாரை வாழ வைத்த தமிழகம் அகதிகளாய் வந்தாரை வாழவா வைக்கின்றது?? பார்ப்போம் கொலைவெறியனுக்கு எப்படியான வரவேற்பு என்பதனை. இதில் கூட ஒற்றுமை இல்லை. இதற்கு மேல் இனி என்ன சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  8. " ஆழ்ந்த பார்வையில்லாமல்
    எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  9. நண்பர் ஜெய் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்!

    அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  10. முற்றிலும் உண்மை! அவர் நாண நன்னயம் செய்யாவிட்டாலும் நாமே நாணுமளவு அவருக்கு இன்னா செய்யாமல் இருப்பதே சிறப்பு!

    ReplyDelete
  11. வணக்கம்

    புலவா் இராமா நுசம்கவியைப்
    பிரட்டிப் பிரட்டி நான்படித்தேன்!
    குலவும் தமிழின் சந்தங்கள்
    கும்மிக் கொட்டி ஆடினவே!
    நிலவும் கொடுமைக் கெதிராக
    நீட்டும் போர்வாள் இவா்கவிதை!
    உலவும் பபையே ஓடிவிடு!
    உண்மைத் தமிழர் இருக்கின்றார்!

    அன்புடன்
    கவிஞா் கி. பாரதிதாசன்
    தவைலா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  12. அரக்கனவன் வருகைதனை தடுக்கவென வாரீர்-இங்கே
    அனைவருமே இணைந்தரென சொல்லவென சேரீர்
    இரக்கமிலா கொடுங்கோலன் வந்துவிட்டே செல்ல-நாம்
    இடங்கொடுத்தால்! இழிவாகும் உலகமெல்லாம் சொல்ல//

    நெஞ்சைத் துளைக்கும் ஆழமான வரிகள்
    நல்ல திசைகாட்டிப்போகும் அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  13. ஒற்றுமைக்கே நம்மிடையே வழியில்லா தன்மை-காலம்
    உணர்த்தியதே பல்வகையில் அறிந்திட்ட உண்மை!

    ஆம் ஐயா,ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின்
    அனைவருக்கும் தாழ்வு என்று உலகுக்கு உணர்த்திய தமிழினத்தின்
    இன்றைய நிலையினைப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  14. //அப்பாவி மக்களிடம் நமக்கென்ன கோபம்-வெறும்
    ஆத்திரத்தில் விரட்டுவது அறியாமை! பாவம்!
    அப் பாவி பக்சேவும் வருகின்றான் தடுப்போம்-நாம்
    அனைவருமே ஒன்றாகி அறப்போரும் தொடுப்போம்!//

    உண்மைதான் அய்யா. அனைவரும் ஒற்றுமையாய் இருக்கவேண்டிய நேரம் இது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  15. கவிதை சிறப்புடைத்து.
    கவிதை சொல்லும்
    கருத்தும்
    கனமுடைத்து.

    சினம் கொண்ட வேங்கையும் தன்
    இனம் கண்டு கொள்ளும்.
    இருந்தும்
    பசி என்று வந்துவிட்டால்
    பத்துமே பறந்து போகும்

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  16. மரபுக் கவிதை வழியே வெளிப்பட்டிருக்கும் அறச்சீற்றம் மிக அருமை ஐயா....!

    உணர்வுகளைக் கவிதையாக்கும் போது மொழியின் நெறியிலேயே நின்று அதன் கட்டுக்குள் சீறிப்பாய்வது ஒரு கலை. மரபினை உடைத்து எழுதும் போது மனிதர்களுக்கு ஒரு சுதந்திரம் இயல்பிலேயே வந்து விடுகிறது.....அது எளிது...

    கட்டுக்குள் நின்று நீங்கள் கவி பாடி உணர்வேற்ற முயன்றிருப்பது தங்களின் தமிழ்ப் புலமையினைப் பறைசாற்றுகிறது.

    நன்றிகள் ஐயா...!

    ReplyDelete
  17. மக்களும் அரசாங்கமும் சிந்தித்து செயல் படவேண்டும்.ஈழத் தமிழர் நன்மைக்காக
    த.ம 14

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  18. உண்மை தான் ....ஒன்று பட்டால் உண்டு வாழ்வு....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete