Friday, September 28, 2012

எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே



எங்கே போனாய் நிம்மதியே-உனை
    எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நான்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
     உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-படும்
     துயரம் நீக்கிட  போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
     சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீ
     மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என
     நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
     புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
     போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
     அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அவர்
      பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வி
      கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீ
     இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார்  மனதிலும் இவ்வாறே-இன்றிப்
     பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
     ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர்  வாழ்வொடு போனாயோ-பொருள்
     மாறிட நிம்மதி  ஆனாயோ

                         புலவர் சா இராமாநுசம்

                  மீள் பதிவு

32 comments :

  1. சிறப்பான கவிதை
    மீள்பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    கடல் மீன் கடலைத் தேடி அலைந்த கதையாய்
    நிம்மதியை உள்ளே வைத்துக் கொண்டே வெளியில்
    தேடுகிறோமோ ?

    ReplyDelete
  2. பட்டினத்தார் புலமபல் முதல் எங்கே நிம்மதி என்று பாடிய கண்ணதாசன் வரை தேடிய நிம்மதியைத் தேடி நீண்டதோர் கவிதை!
    // ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
    ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை //
    உங்களைப் போல் எடை போட்டவர் எவரும் இல்லை!

    ReplyDelete
  3. இன்றைய வாழ்க்கை சூழ்நிலையை அருமையாக வெளிப்படுத்துகிறது இக்கவிதை....

    ReplyDelete
  4. தேடலிலே பயணிக்கிறோம் அனைவரும்...

    ReplyDelete
  5. /அருளைத் தேடியே அலைபவனும்-பாவம்
    அடைந்தது உண்டா நிம்மதியே/

    நல்லதொரு கேள்வி ஐயா..ஆனால் விடை கிடைப்பது கடினம் தான்..

    ReplyDelete
  6. ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
    ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
    மாண்டவர் வாழ்வொடு போனாயோ-பொருள்
    மாறிட நிம்மதி ஆனாயோ

    வணக்கம் ஐயா நீங்கள் சுகமாக இருகின்றீர்களா ?...
    யார் யார் வாழ்வில் நின்மதி இல்லை யாரிடம்தான் நீ
    உள்ளாய்?... என மிக சிறப்பாகத் தொடர்ந்து இறுதியில்
    நின்மதியே சமாதி அடைந்துவிட்டதென எவ்வளவு
    அழகாக ஆணித்தரமாக எடுத்துரைதுள்ளீர்கள் !!!!!!...
    தலை வணக்குகின்றேன் தங்கள் கவிதைக்கு எப்போதுமே
    ஒரு தனிச் சிறப்பு உள்ளதைக் கண்டு .மென்மேலும்
    உழைக்க இறைவன் எல்லா ஆசியையும் தந்த வண்ணமே
    இருக்க வேண்டும் என உங்களுக்காக பிரார்த்திக்கின்றேன் .
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  7. "நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நதி
    நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே "

    கண்ணதாசன் வரிகளே நினைவுக்கு வருகிறது ஐயா.

    ReplyDelete
  8. மீள் பதிவு - படித்ததில்லை...

    சிறப்பான பகிர்வு (உண்மை வரிகள்)... மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  9. யாருமே தொலைக்கவில்லை இருந்தாலும் தேடிக்கொண்டே இருக்கிறோம்.. நிம்மதியை..

    ReplyDelete
  10. எங்கே போனாய் நிம்மதியே-உனை
    எண்ணிக் கலங்குது என்மதியே
    அங்கே இங்கே உனைத்தேடி-நான்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

    அதைத் தேடத் தேடத்தான் ஒதுங்கி ஓடும்.
    வேண்டாம் போ... என்று தள்ளிவிடுங்கள்.
    தானாக உங்களைத் தேடி வரும்.

    கவிதை அருமைங்க புலவர் ஐயா.

    ReplyDelete
  11. எங்கே நிம்மதி,எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும்!
    அருமை ஐயா

    ReplyDelete
  12. அழகான மீள்பதிவு..
    அழகாகச் கோர்த்துள்ளிர்கள் ஐயா வார்த்தைகளை

    ReplyDelete
  13. சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
    சாலையில் தாரைப் போடுகின்றான்
    மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீ
    மாற்றிட வாவது போனாயா


    உண்மையில் இவர்கள் நிம்மதி யாகத்தான் இருக்கிறார்கள் பணம்/பதவி உல்லவன் தான் நாய்க்கு கிட்டிய தெங்கம் பழமாக இருகின்றனர்.

    ReplyDelete
  14. அமைதியின்றி இருக்கையில்
    அமைந்த கவிதையோ

    ReplyDelete
  15. மீள்பதிவானாலும் மீண்டும் மீண்டும் வாசிக்கலாம் ஐயா !

    ReplyDelete
  16. இப்போதுதான் வாசிக்கிறேன். நிம்மதியைத் தேடித்தான் வாழ்க்கை தொலைகிறது.அருமையான கவிதை.

    ReplyDelete
  17. மிக்க நன்றி!

    ReplyDelete
  18. //நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என
    நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
    பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
    புரளுவோன் வாழ்விலும் நீயில்லை// அருமையான வரிகள் நன்றி புலவரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...