Monday, June 25, 2012

வலையேற ஒருகவிதை வாராது போகுமந்தோ!


புத்தம் புதுமலரே பூங்கொத்தே உனைப்போன்றே
நித்தம் ஒருகவிதை நினைக்கின்றேன்! எழுதிவிட
சித்தம் கலங்கிவிட சிலநேரம் குழம்பிவிட
எத்தனை முயன்றாலும் இயலாது போகுமந்தோ!

அலைபோல ஓயாது அலைகின்ற உள்ளத்தில்,
விலைபோகாப் பொருளாகி வீணாகும்!பள்ளத்தில்
நிலைதவறி வீழ்கின்ற நிலைதானே! என்நிலையும்     
வலையேற ஒருகவிதை வாரது போகுமந்தோ!

எடுத்த அடிதன்னை எப்படியோ முடித்தாலும்
அடுத்த அடிகாணா! அடிப்பட்டு போகுமனம்
தொடுத்த மாலையது துண்டுபல ஆனதுவே
விடுத்த விடுகதையாய் விடைகாணாப் போகுமந்தோ!

தேன்தேடும் வண்டெனவே திரிகின்ற என்மனமோ
தான்தேடி அலைந்தாலும் தவிப்பேதான் கண்டபலன்
மான்தேடி ஏமாந்த வேடனது நிலையேதான்
நான்தேடி அலைந்திடவும் நாட்கள்பல போகுமந்தோ!

கூடிக் கருமேகம் மின்னலிட்டும் இடிமுழக்கி
ஓடிக் கலைந்தனவே ஒருசொட்டும் பெய்யாமல்
வாடும் பயிர்பச்சை வானநோக்க, என்கவிதை
தேடும்  மனவெளியில் திசையறியா போகுமந்தோ!

இலவே காத்தகிளி என்நிலையும் ஆனதய்யா!
உலவாத் தென்றலென உள்ளம்தான் போனதய்யா
நிலவே காணாத நீள்வானாய் நெஞ்சந்தான்!
பலவே நினைத்தேனோ பாழ்பட்டு போகுமந்தோ!

                    புலவர் சா இராமாநுசம்




27 comments:

  1. புலவருக்கு கவிதையே உயிர் மூச்சாய் நிற்கும் போது
    அங்கே தேடுதலுக்கு வேலையில்லை. வலையை வீசுங்கள்! வந்து விழும் வார்த்தைகள்!

    ReplyDelete
  2. நீங்கள் புலவர்
    வார்த்தை மலர்கள்
    உங்களை தேடிவரும்
    கவிதை மாலை கோர்க்க சொல்லி

    ReplyDelete
  3. தங்களுக்கே வார்த்தை பஞ்சமா.?

    ReplyDelete
  4. வார்த்தைத் தேடல்களுக்கே இவ்வளவு வார்த்தைகள் ஊறும்
    அற்புதக் கேணியல்லவா நீங்கள்...

    ReplyDelete
  5. அன்பின் புலவர் சா.இராமானுசம்

    கவிதை அருமை - இக்கவிதை சொற்கள் தேடுகிறதா ? சிந்தனை நன்று. செயலாற்றுக - கவிதை தானே மணக்கும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அருமையான கவிதை. உங்களின் கவிதை ஆறு என்றும் வற்றாதது தான் ஐயா.

    ReplyDelete
  7. கண்களைக் காணாமல் கண்மணிகள் தேடியதை
    என்னவென்று சொல்வேன் எடுத்து!!

    புலவரே நீர் வாழ்க!

    ReplyDelete
  8. கவிதை வரவில்லையே என்று புலம்பும் கவிதையை என்ன சொல்வேன்!

    ReplyDelete
  9. உங்களுக்கு வசப்படாத கவிதை உண்டா என்ன?பெய்யட்டும் கவிதை மழை!

    ReplyDelete
  10. தங்களுக்கேவா ...?

    ReplyDelete
  11. தங்களுக்கு வார்த்தைப் பஞ்சமே இல்லை புலவரே. அப்படி நினைத்ததை ”பா” ஆக்க எத்தனை வார்த்தைகள்....

    நல்ல கவிதை.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. புலவர்கா புனைவதற்கு வார்த்தைகள் இல்லை..

    இதோ புனைந்து விட்டீர்களே ஜயா....

    ReplyDelete
  13. நீங்கள் கவிதைக்காக குழம்புவதும், தேடுவதும் நல்லதுதான்.அதனால்தானே இது போன்ற கவிதைகளும் எங்களுக்கு கிடைக்கின்றன. தொடரட்டும் உங்கள் தேடுதல்!

    ReplyDelete
  14. கவிதையே கவிதையை தேடுவது முரணாயிருக்கிறதே.

    ReplyDelete
  15. உங்கள் எண்ணம்போல் வண்ணக் கவிதை
    அருவியாகக் கொட்டிட வாழ்த்துகின்றேன் ஐயா!...
    சிறு பிள்ளையேனும் உங்கள் தவிப்பை என்னால்
    நன்கு உணர முடிகிறது கவலை வேண்டாம் .
    தொடர்ந்தும் முயற்சியுங்கள் .மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  16. நன்றி! நன்றி

    ReplyDelete
  17. வார்த்தைகள் வந்து உங்கள்
    கவிதையில் விரும்பி விழுந்து புரள்வதை பார்த்தால்
    கவிதையை நீங்கள் விட நினைத்தாலும்
    அதுவிடாது போலிருக்கே
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete