Monday, April 9, 2012

நேற்றுவரை இதுபோல நடக்குமென்றே!




நேற்றுவரை இதுபோல நடக்குமென்றே-நான்
       நினைக்கவில்லை!அடடா நம்புமென்றே
சாற்றுகின்ற பலபேரைக் கண்டதுண்டே-பல
      சந்தர்பம் வாழ்கையிலே வந்ததுண்டே
போற்றுகின்ற மனிதர்களை ஒருநாள்வந்தே-மனம்
      போனபடி குறைகளையே எடுத்துத்தந்தே
தூற்றுகின்ற நிலைதன்னைப் பார்ப்பதுண்டே-பெரும்
      துரோகியெனும் பட்டியலில் சேர்ப்பதுண்டே

நீதிக்கும் இடத்திற்கு ஏற்பமாறும்-என்ற
     நிலையுண்டு உலகத்தில்!மறுப்பார்!கூறும்
சாதிக்கி ஒருநீதி இங்கேஉண்டே!-வரும்
    சண்டைக்கும் சரிபாதி பங்கும்உண்டே!
போதிக்க பல்வேறு மதங்களிங்கே-ஆனால்
    பொறுமைதான் மக்களிடம் எங்கேயெங்கே?
ஆதிக்க மனப்பான்மை அழியவில்லை!-எனில்
     அதுவரைத் தீராது நமதுத்தொல்லை!

ஒன்றேதான் குலமென்று அண்ணாசொல்ல-மேலும்
    ஒருவனே தேவனென அவரேசொல்ல
என்றேதான் அந்நிலை தோன்றுமிங்கே?-எண்ணி
     ஏங்கியே வாழ்கின்றோம் வெற்றியெங்கே?
நன்றேதான் எதுவென்று அறிதல்வேண்டும்!-பல
    நல்லோரின் சொல்கொண்டு வாழயாண்டும்
அன்றேதான் நம்நாடு உயரும்உலகில்-ஏதும்
     ஐயமே அதிலில்லை! தீமைவிலகில்!

                            புலவர் சா இராமாநுசம்





17 comments:

  1. நல்லோரின் சொல் கொண்டு வாழ வேண்டும். மிகச் சரியாகச் சொன்னீர்கள். அஃது இருந்துவிட்டால் யாவும் சுகமே! அருமை ஐயா!

    ReplyDelete
  2. புலவர் அவர்களுக்கு வணக்கம்! நாட்டில் நடக்கும் பல சண்டைகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணம், தனியாகவோ குழுவாகவோ இயங்கும் ஆதிக்க எண்ணம்தான்.

    // ஆதிக்க மனப்பான்மை அழியவில்லை!-எனில்
    அதுவரைத் தீராது நமதுத்தொல்லை! //

    என்ற தங்கள் கவிதை வரிகளை அனைவரும் உணர்ந்தால் இல்லை தொல்லை!

    ReplyDelete
  3. சூபபர் சரியா சொன்னீங்க

    ReplyDelete
  4. ///போதிக்க பல்வேறு மதங்களிங்கே-ஆனால்
    பொறுமைதான் மக்களிடம் எங்கேயெங்கே?
    ஆதிக்க மனப்பான்மை அழியவில்லை!-///

    போதனைகள் ஆயிரமேனும்..
    அதன் சாரங்களை சரியாய் நெஞ்சிலேற்றி
    அதன் வழி கடைபிடிக்க
    ஒழுக்கங்களை கற்றறிய வேண்டும்
    என அழகாய் உரைத்தீர்கள் ஐயா..

    ReplyDelete
  5. ஒற்றுமையே நாட்டின் முன்னேற்றத்தின் முதல் படி என்பதை விளக்கும் கவிதை...அனைவரும் உணர்ந்தால் நல்லது!

    ReplyDelete
  6. உலகம் புரிந்து நடக்க வேண்டும்...

    ReplyDelete
  7. "போதிக்க பல்வேறு மதங்களிங்கே-ஆனால்
    பொறுமைதான் மக்களிடம் எங்கேயெங்கே?"
    சிந்திக்கத் தூண்டும் வரிகள்.
    செம்மையான கருத்துக்கள்

    ReplyDelete
  8. //நீதிக்கும் இடத்திற்கு ஏற்பமாறும்- என்ற
    நிலையுண்டு உலகத்தில்! //

    நிதர்சனமான வரிகள் ஐயா.!
    தங்கள் கவிதையை இப்பொழுதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். அருமையாக உள்ளது நன்றி.. வாழ்த்துகள்.!

    ReplyDelete
  9. நன்றேதான் எதுவென்று அறிதல்வேண்டும்!-பல
    நல்லோரின் சொல்கொண்டு வாழயாண்டும்
    அன்றேதான் நம்நாடு உயரும்உலகில்-ஏதும்
    ஐயமே அதிலில்லை! தீமைவிலகில்!///

    எதுவென்றறியா பக்குவப்பட்டோர் போதித்தும் பாதைமாறியே பயணப்பட்டோர் தடம் மாற மாறும் ....

    ReplyDelete
  10. நல்லாவே சொன்னீர்கள், மண்டையில் ஏறனுமே.....

    படைப்புக்கு வாழ்த்துக்கள் - நன்றி

    ReplyDelete
  11. \\போதிக்க பல்வேறு மதங்களிங்கே-ஆனால்
    பொறுமைதான் மக்களிடம் எங்கேயெங்கே?\\

    நிதானம் இருந்தால்தான் நியாயம் எது அநியாயம் எது என்று பகுத்துணரும் அறிவு பெற்றிருக்க இயலுமே... அருமையாய் சொன்னீர்கள். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  12. வறட்டு கௌரவம் இல்லாமல் ஒற்றுமை இருந்தாலே அமைதியான சூழ்நிலை கிடைக்கும்.அருமையான வரிகள் ஐயா !

    உப்புமடச் சந்தியில் உங்கள் கவிவரிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !

    ReplyDelete
  13. கவிதை நன்றாகவுள்ளது புலவரே

    ReplyDelete
  14. //நன்றேதான் எதுவென்று அறிதல்வேண்டும்!-பல
    நல்லோரின் சொல்கொண்டு வாழயாண்டும்
    அன்றேதான் நம்நாடு உயரும்//

    அருமை

    ReplyDelete
  15. அருமையான படைப்பு ஐயா!

    ReplyDelete
  16. ஒன்றேதான் குலமென்று அண்ணாசொல்ல-மேலும்
    ஒருவனே தேவனென அவரேசொல்ல
    என்றேதான் அந்நிலை தோன்றுமிங்கே?//
    ஒற்றுமை குலைவதே அனைத்து அழிவுக்கும் காரணம் என்று விளங்குமோ நம் இனத்தவருக்கு ? அருமை ஐயா.

    ReplyDelete