Monday, April 2, 2012

யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே!


யாதும் ஊரே யாவரும் கேளீர்!
ஓதினான் அன்றே புலவன் நன்றே
கோதில் அன்னோன் கூற்றை ஏற்றே
மேதினி அறியதன் மேன்மையை சாற்றே!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!
சேதியை எடுத்தும் செப்பினான் அவனே!
நோதலும் தணிதலும் அதுபோல் என்றே
நுவன்றவன் அவனே! மேலும் நன்றே!


இப்படிப் பல்வகைக் கருத்துகள் கொண்டே
ஒப்பிட இயலாத் தமிழில் உண்டே!
செப்பிட முடியா இலக்கியப் பாடல்
எப்படி யேனும் படித்திட வேண்டும்!


பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல என்றே வகுத்தனர் இலக்கணம்!
பிழையென எதையும் தள்ளுதல் வேண்டா
விழைவன தவறெனில் கொள்ளுதல் வேண்டா!


உள்ளுவ தெல்லாம் உயர்வென இருப்பின்
எள்ளும் நிலையே என்றும் வாரா!
தெள்ளிய தமிழில் திருமறை வடித்த
வள்ளுவன் வகுத்த வழிதனில் செல்வீர்!


ஏதிலார் குற்றம் கண்டது போதும்
வாதமே செய்து வாழ்ந்தது போதும்!
சோதனைப் பற்பல! மோதும் போதும்
சாதனைச் செய்திட முனைவீர் ஏதும்!


இரவும் பகலுமாம் இன்பம் துன்பம்!
வரவும் போதலும் வழிவழி யாகும்!
உறவும் உணர்வும் ஒன்றிடவாழின்
துறவும் வேண்டா துன்பமும் தீண்டா!


நல்லன செய்தே நலமிக வாழும்
அல்லன நீக்கி அறமது சூழும்
வல்லமை ஒன்றே! வாழும் வழியாம்!
இல்லறம் காக்கின் இல்லை பழியாம்!

                                   புலவர் சா இராமாநுசம்

13 comments:

  1. //நல்லன செய்தே நலமிக வாழும்
    அல்லன நீக்கி அறமது சூழும்
    வல்லமை ஒன்றே! வாழும் வழியாம்!
    இல்லறம் காக்கின் இல்லை பழியாம்!//

    சிறப்பான வார்த்தைகள்....

    சிறந்த கவிதை ஐயா....

    ReplyDelete
  2. நல்லதே நினை
    நல்லதையே செய்

    என்று அறிவுறுத்தும் அழகிய கவிக்கு
    நன்றிகள் ஐயா....

    ReplyDelete
  3. உள்ளுவ தெல்லாம் உயர்வென இருப்பின்
    எள்ளும் நிலையே என்றும் வாரா!
    -அருமையான வரிகள். நன்றே செய்து நலமிக வாழ்வோம். நன்றி ஐயா...

    ReplyDelete
  4. ஏதிலார் குற்றம் கண்டது போதும்
    வாதமே செய்து வாழ்ந்தது போதும்!
    சோதனைப் பற்பல! மோதும் போதும்
    சாதனைச் செய்திட முனைவீர் ஏதும்!//

    மிகவும் அருமையான சொல்லாடல்கள். வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  5. நல்ல சிந்தனைகளும்
    வாழ்விற்கான படிப்பினைகளும் உள்ளடங்கிய
    தொன்மைத் தமிழில் கோர்க்கபட்ட
    அழகிய பாடல்

    மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  6. நல்ல கவிதை... நன்றி ஐயா.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா நலமா?
    நற்சிந்தனைக் கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா.!!

    ReplyDelete
  8. வணக்கம்!

    // இப்படிப் பல்வகைக் கருத்துகள் கொண்டே
    ஒப்பிட இயலாத் தமிழில் உண்டே! //

    என்று நற்றமிழின் புகழ் பாடும் உங்கள் மொழிப் பற்று வாழ்க!

    ReplyDelete
  9. நல்ல செய்திகளின் ஆயுள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு, கவிதையாக்கத்திற்கு பாராட்டுகள் அய்யா!

    ReplyDelete
  10. எப்போதும் உங்கள் கவிதைகள் பொன் வார்த்தைகைகளாக மனதில் பதிகிறது ஐயா !

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா...

    வாழ்வியலுக்கு அர்த்தம் சொல்லும் அருமையான மரபுக் கவிதை!

    ReplyDelete
  12. //உள்ளுவ தெல்லாம் உயர்வென இருப்பின்
    எள்ளும் நிலையே என்றும் வாரா!//

    அருமை ஐயா

    ReplyDelete
  13. vanakkam,
    ungal kavithaikalai palar pukalndullanar varavetkiren.aanaal oru thiranaivalaraka ennal poruththukkolla mudiyaathathu ,sondangal enru porulpadum kealir enkira vaarthaiyai kealeer enru upayoakikkireerea aiyaa?

    ReplyDelete