நன்றது ஓட்டுமே நல்கிவிட்டீர்-சற்று
நம்பிக்கைப் பெற்றிட வைத்துவிட்டீர்
சென்றது பழியும் ஓரளவே-நாம்
செய்ய வேண்டுவ பேரளவே
கொன்றவன் தலையும் சாய்ந்திடவே-கொலைக்
கூண்டிலே அன்னோன் மாய்ந்திடவே
இன்றுமை இங்கேப் போற்றுகின்றேன்-ஏக
இந்தியா நிலைத்திட சாற்றுகின்றேன்
இத்துடன் முடியும் கதையல்ல!-தமிழ்
இனமது வாழ்ந்திட மிகநல்ல
சித்தமே கொள்வீர் மத்தியிலே-ஈன
சிங்களர் உணர்ந்திட புத்தியிலே!
பத்தொடு ஒன்றும் இதுவல்ல-அந்தப்
பாவிகள் அறியார் பதில்சொல்ல
எத்தனைக் குண்டுகள் பெய்தாரே-ஈழ
இனமே அழியச் செய்தாரே!
நான்தான் என்பார் சிலபேரே-கபட
நாடகம் என்பார் சிலபேரே
ஏன்தான் இப்படிப் பேசுவதோ-நல்
இதயம் வருந்திக் கூசுவதோ?
தான்தான் எல்லாம் இனியென்றே-வரும்
தலைகனம் நீக்கி நனிநன்றே
ஒன்றென நாம்தான் ஆவோமா?-ஈழம்
உருவாய் மலர்ந்திடச் செய்வோமா?
புலவர் சா இராமாநுசம்
ஈழம் பற்றிய வரிகள் நீண்டு கொண்டே செல்கின்றன .
ReplyDeleteஒன்றென ஆகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் .
உணர்வு மிகும் வரிகள் ஐயா .
எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்த்துக்கொண்டேதான் போகிறது.22ல் நடந்த அந்த வாக்கெடுப்புக்கூட எல்லோருமாகச் சேர்ந்து நடத்திய ஒரு நாடகம்தான் !
ReplyDelete\\ஒன்றென நாம்தான் ஆவோமா?-ஈழம்
ReplyDeleteஉருவாய் மலர்ந்திடச் செய்வோமா? \
நாம் ஒன்றென ஆனால் நிச்சயம் பூமிப்பந்தில் தமிழீழம் மலரும். நிச்சயம். மாண்ட மாவீரரின் கனவுகள் பலித்திடும்.
அனைவரும் ஒன்றென ஆக வேண்டும்... ஈழம் மலர்ந்திடச் செய்ய வேண்டும்... அதுதான் ஆசை! நடக்குமா என்பது தெரியவில்லை. நடக்க வேண்டும் என்கிற ஆசையும், எதிர்பார்ப்பும் இதயத்துக்குள் ஏகமாய்! உங்கள் கவிதை விளக்கு அந்த ஒளியை ஏற்றட்டும்!
ReplyDelete//தான்தான் எல்லாம் இனியென்றே-வரும்
ReplyDeleteதலைகனம் நீக்கி நனிநன்றே
ஒன்றென நாம்தான் ஆவோமா?-ஈழம்
உருவாய் மலர்ந்திடச் செய்வோமா//
விடியலுக்கு வழிகாட்டும் வீரியமிக்க வரிகள். நன்றி ஐயா.
இந்த வாக்கெடுப்பே ஒரு அமெரிக்க நாடகம்தான். பார்ப்போம்.. எங்கு சென்று இது முடிகிறதென்று.
ReplyDeletehttp://anubhudhi.blogsot.in/