Sunday, January 15, 2012

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே !


  மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய்ய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்
            



14 comments:

  1. நாம் தொழுதிட உரியவன் உழவன். அருமையாகச் சொன்னீர்கள். நாம் அரிசியைச் சாப்பிட்டு மாட்டுக்கு தவிடையும், நாம் வாழையிலையில் சாப்பிட்டு மாட்டுக்கு வாழையிலையையும் தருகிறோம். பயனற்றதைத் தரும் நமக்கு மாடுகள் தருவதோ பால், வெண்ணெய், நெய், தயிர் போன்ற பயனுள்ள பொருட்கள். அந்த ஜீவன்களுக்காகவும் பொங்கலை உவப்புடனே கொண்டாடி மகிழ்வோம் ஐயா...

    ReplyDelete
  2. அருமை...அருமை...
    எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. ஒவ்வொரு வருடமும் எல்லா பண்டிகைகளும் வரத்தான் செய்கிறது....ஆனால் நாம் மாட்டுப்பொங்கல் என்று சொன்னாலும் மஞ்சுவிரட்டு தான் நினைவுக்கு வருவது... அந்த அளவுக்கு புகழ்பெற்றது....

    நான் உண்ணும் உணவு உழவனின் கிருபையால் என்பதை நினைக்கும்படியான வரிகள்... விவசாயிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்...

    மாடுகளின் அழகையும் அதன் உழைப்பையும் மேன்மைப்படுத்தி ஒவ்வொரு வரிகளில் நீங்கள் சொல்லி செல்லும்போது கண்மும் அழகாய் காட்சி விரிகிறது ஐயா...

    தங்கள் உடல்நலம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம் ஐயா.....

    நான் இந்தியா வரும்போது தங்களை சந்திக்க நினைக்கிறேன் ஐயா....

    தாங்கள் என்றும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  4. உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
    உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
    தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
    தொழுதிட உரியவன் உழவன்!

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  5. மாடாய் உழைக்கிறான் என்று கடின உழைப்புக்கு ஒப்புமைப்படுத்தப்படும் மாடுகளின் பெருமைதனைப் பறைசாற்றும் அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  6. உழவுத்தோழனையும் வாழ்த்துவோம் !

    ReplyDelete
  7. கணேஷ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. நண்டு @நொரண்டு -ஈரோடு said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. மஞ்சுபாஷிணி said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. இராஜராஜேஸ்வரி said...



    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கீதா said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ஹேமா said...



    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. அழகுக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா...இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete