Saturday, December 24, 2011

நாளை தன்மானம் காப்போம் திரளுங்கள்



தலைநகர் வாழும் தமிழர்களே-நாளை
    தன்மானம் காப்போம் திரளுங்கள்
அலைகடல் சீரணி அரங்கத்தின்-முன்
    அலையலை எனவே வாருங்கள்
நிலைபெற முல்லை அணைகட்டும்-உரிய
   நீதியின் குரலே முழங்கட்டும்
இலையிடம் துளியென கூடட்டும்-கேரள
    எதிரிகள் மிரண்டு ஓடட்டும்

உடைப்போம் அணையை என்கின்றார்-இது
    உறுதி உறுதி என்கின்றார்
எடுப்போம் அனைவரு உறுதிமொழி-நம்
   எதிர்பை காட்டும்  இறுதிவழி
தடுப்போம் உயிரைக் கொடுத்தேனும்-வீரத்
   தமிழனாய் வாழ்வோம் இனியேனும்
தொடுப்போம்  அறப்போர் திரளுங்கள்-பலி
    தேவையா ஆள்வோர் கூறுங்கள்

எங்கும் மக்கள் வெள்ளமென-கண்
    எட்டிய வரையில் சொல்லவென
பொங்கிய கடலாய் பொங்கட்டும்-மக்கள்
    புரட்சியின் குரலே ஓங்கட்டும்
சிங்கம் போன்றே எழுவீரே- பெரும்
   சென்னை மாநகர் வாழ்வோரே
அங்கம் துடித்திட  வாருங்கள்-சீரணி
   அரங்கத்தின் முன்னே திரளுங்கள்
           
                      புலவர் சா இராமாநுசம்
  

Friday, December 23, 2011

மிக நன்றா? ஒன்றா? கூறுங்கள்!



ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
             
                    புலவர் சா இராமாநுசம்
     
      
      
           

Thursday, December 22, 2011

கவிதைப் பிறந்தச் சூழ்நிலை-1


இனிய அன்பர்களே!
      சில நேரங்களில் சில சூழ்நிலைகளால் கவிதை வருவதுண்டு
      அவ்வகையில் வந்த கவிதை இது!
      ஊரில், என் நண்பன்! என் கவிதைப் பிரியன்,கோபித்துக் கொண்டு
      இரவு வீட்டை விட்டு சென்னை வந்து விட்டான். இல்லமே
      அழுது புலம்பியது. நண்பரிடம் தங்கியிருந்த அவனை,சென்னை வந்து
       யார் அழைத்தும் வர மறுத்து விட்டான்
                நான் பின் வரும் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்
       அடுத்த நாளே வந்து விட்டான்!
            
             அன்னையின் கண்ணீர் இங்கே
                 ஆறெனப் பெருகி ஓட
             சென்னையும் சென்றாய் அங்கே
                 சென்றுநீ என்னக் கண்டாய்
             உன்னுரு காட்டும் நிழலை
                  ஒழித்திட முயலல் மடமை
             என்னுயிர் நண்பா இதனை
                   எண்ணிட மறந்தாய் ஏனோ
             
             இடமிலை என்று நீயும்
                   இவ்வூரினைப் பிரிந்து செல்ல
               திடமிகு உமதுத் தந்தை
                   தீதென்ன செய்தேன் என்றே
              உடலுமே குலுங்க குலுங்க
                  உள்ளமே நொந்து அழுதார்
               மடமையாம் நண்ப இந்த
                   மனநிலை பெற்றாய் ஏனோ
              
             பெ ற்றவர் சுற்றம் நீங்கி
                  பிரிதொரு ஊரும் செல்ல
               பற்றுமே அற்றார் போல
                  பறந்தனை இரவில் நன்றோ`
               கற்றவர் செய்யும் செயலா
                  கண்ணீரோ வெள்ளம் புயலா
                உற்றவன் நீதான் என்றால்
                   உடனடி விரைந்து வாவா!

                                புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 20, 2011

செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!



விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி
     எழுதினேன்! வலைதன்னில்! எனினும், முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    பொறுப்பேற்பீர்! தக்கோரே! வருக! வருக!

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
     தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை
    சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்
    அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்
    சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்

தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
    தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
    பொதுநலமே சேவையெனத் தருக! தருக!
எத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-உடன்
    ஏற்றயிடம் உறுதி செய்ய இயலவில்லை
சித்தமதை, வருகைதனைச் செப்ப வேண்டும்!-மேலும்
    செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!

                                       புலவர் சா இராமாநுசம்

Sunday, December 18, 2011

சங்கப் பதிவு, இரண்டாம் கட்ட நடவடிக்கை!


அன்புடையீர்
              வணக்கம்!
இன்று இப் பதிவில் சங்கத்தின் இரண்டாவதுக் கட்ட
நடவடிக்கைப் பற்றிய விவரங்கள்!
               தமிழ்நாடு மொத்தம் முப்பத்திரண்டு
 மாவட்டங்களாகும்
              உடன்
           
மாவட்டங்கள் செய்ய வேண்டிய
பணிகள்!
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர்
முன் நின்று அம் மாவட்டத்திலுள்ள வலைப்
பதிவர்களைச் சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்க்க
வேண்டும்
 
          பிறகு, உறுப்பினர் அனைவரும் சேர்ந்து
அம் மாவட்டத்திற்குரிய, தலைவர், செயலாளர்,
பொருளார், துணைத்தலைவர், துணைச் செயலர்
ஆகியோரைத் தேர்வு செய்ய வேண்டும்
        
இவர்களே ஆட்சியாளர் ஆவர்
 இவர்கள் தவிர மேலும் செயற்குழு உறுப்பினர்களாக
ஐந்து அல்லது ஏழு பேரைத் தேர்வு செய்யவேண்டும்
     
ஆக இந்த,  பத்து அல்லது பன்னிரண்டுபேர்
சேர்ந்த குழுவே  அம் மாவட்டத்திற்குரிய
செயற்குழு ஆகும்
        
மொத்த உறுப்பினர் அனைவரும் அம்
மாவட்டத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்
       
எனவே, இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும்
உள்ளவர்கள், செயல் பட்டு தங்கள் மாவட்டத்தின்
ஆட்சியாளர்கள்குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகிய
வற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

     அடுத்தது மாநிலக்கழகம்!
   -----------------------------------------------------
மாநிலச் செயற்குழு-
  
         மாவட்டந்தோறும் தேர்வு செய்யப்பட்ட,
ஆட்சிக் குழுவில் உள்ள, தலைவர் செயலர், பொருளர்
ஆகிய மூவரும், (மொத்தம் 96) சேர்ந்ததே மாநிலச் செயற்குழு
ஆகும்.

மாநிலப் பொதுக்குழு-
          
மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட செயுற்குழு
உறுப்பினர்களை  சேர்ந்த குழுவே மாநிலப் பொதுக்குழு ஆகும்
 
பிறகு தமிழகத்தில் மையப் பகுதியில், அனைவரும் கலந்துக்
கொள்ள, வசதியான பொது இடத்தில் மாநிலப்பொதுக்குழுவைக்
கூட்ட வேண்டும்,
       
அக் கூட்டத்தில்  மாநிலத் தலைவர், மாநிலச் செயலர்
மாநிலப் பொருளர், ஆகியோரும், மேலும் தேவைக்கு ஏற்ப
துணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள் ஆகிய ஆட்சிக்
குழுவைத் தேர்வு செய்ய வேண்டும்
     
மேலும், சங்கத்திற்குரிய சட்டதிட்டங்கள்,
நோக்கம், வெளிநாடுகளில் உள்ள தமிழ் வலைப்
பதிவர்களை எம்முறையில் சேர்த்துக் கொள்வது
என்பவைப் பற்றி எல்லாம் மாநிலப் பொதுக் குழுவில்
ஆய்வு செய்யவேண்டும்.
       
மாவட்டச் சங்கங்கள் மேற்கண்டவாறு
செயல்பட்டு தற்போது பதிவு செய்யப்பட உள்ள
தலைமைச் சங்கத்திற்கு அறிக்கையை அனுப்பப் வேண்டும்
     
         அவர்கள் தான் முறையா மாநிலப் பொதுக்
குழுவைக் கூட்டி தேர்தலை நடத்துவார்கள்

         இவையே அடிப்படைப் பொதுவான
நடைமுறை விதிகளாகும்
          
பிற பின்னர்
  
ஐயமிருப்பின் கீழ் வரும் என் தொலைபேசியில்
             தொடர்பு கொள்ளவும்
தொலை-24801690        அலைபேசி-90944766822
               அன்பன்
        புலவர் சா இராமாநுசம்