Friday, November 25, 2011

சொல்லல் யார்க்கும் எளி தன்றோ



நினைத்து நினைத்துப் பார்க் கின்றேன்
     நினைவில் ஏனோ வர வில்லை
அனைத்தும் மனதில் மறைந் தனவே
    அறிவில் குழப்பம் நிறைந் தனவே
தினைத்துணை  அளவே செய் நன்றி
    தேடிச் செய்யின் மன மொன்றி
பனைத்துணை யாகக் கொள் வாரே
    பயனறி உணரும் நல் லோரே

அடுத்தவர் வாழ்வில் குறை கண்டே
     அன்னவர் நோக அதை விண்டே
தொடுத்திடும் சொற்கள் அம் பாக
     தொடர்ந்து அதுவே துன் பாக
கெடுத்திட வேண்டுமா நல் லுறவை
     கேடென தடுப்பீர் அம் முறிவை
விடுத்திட வேண்டும் அக் குணமே
     வேதனை குறையும் அக் கணமே

கீழோ ராயினும் தாழ உரை
   கேடோ! குறையோ! அல்ல! நிறை
வீழ்வே அறியா பெரும் பேறே
   விளைவு அதனால் நற் பேரே
பேழையில் உள்ள பணத் தாலே
   பெருமையும் வாரா குணத் தாலே
ஏழைகள் பசிப்பிணி போக்கி டுவீர்
   இணையில் இன்பம் தேக்கி டுவீர்

மக்கள் தொண்டு ஒன்றே தான்
   மகேசன் தொண்டு என்றே தான்
தக்கது என்றே சொன் னாரே
   தன்நிகர் இல்லா அண் ணாவே
எள்ளல் வேண்டா எவர் மாட்டும்
   இனிமை ஒன்றே மகிழ் வூட்டும்
சொல்லல் யார்க்கும் எளி தன்றோ
   சொன்னதை செய்தல் அரி தன்றோ

                  புலவர் சா இராமாநுசம்

Thursday, November 24, 2011

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை



மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது
    மனமென்னும் நிலத்திலே போட்ட விதை
இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல
    எண்ணினால வந்துடன் கண்ணில் படும்
புறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்
    புனைந்தது பத்தோடு தொகையும் எட்டே
அறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு
    வழியொற்றி வந்ததாம்  பலரும் பாட

ஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்
    உயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்
வருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை
    வடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே
இருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்
    எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
திருமுறை எந்நாளும் மரபே ஆகும-இன்றேல்
    தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்

இலக்கியம் கண்டேபின் இலக்கணம கண்டார்-பின்
    எதற்காக அன்னவர் மரபினை விண்டார்
கலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என
    கருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்
விளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதன்
    வீணென்று எண்ணிட எவருமே சொல்லார்
அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
    அழியாமல் காப்பதும் நமக்குள்ளப் பொறுப்பே

மழைநாளில் தோன்றிடும்  காளானைப் போல-உடன்
    மறைவதா எண்ணுவீர் கவிதையும்  சால
விழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்
    வேண்டுகோள் மட்டுமே  மாசில்லை வேறே 
பிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்
    பிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்
அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
    ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை
                        
                                    புலவர் சா இராமாநுசம் 

Wednesday, November 23, 2011

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்


 ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின்  வருவது துன்பாகும்
கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
   கருதி நடப்பின் சேதமிலை

சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
   சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
   பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த
   தேசமும் மதவெறி பித்தரென
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

Monday, November 21, 2011

மாண்டவர் பிழைத்திடப் போமோ

அறிஞர்  அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய
திராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை!
              இது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது
எழுதியது! ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்!

இந்தியா என்பதோர் நாடே-என்ற
    எண்ணத்தில் வந்ததிக் கேடே
நந்தமிழ் எழில்மிகு வீடே-இந்தி
    நலம்தரா மாகள்ளிக் காடே
வந்தது இன்றெனில் ஓடே-இந்தி
    வருகின்ற வழியெலாம் மூடே
பந்தென அதையெண்ணி ஆடே-இந்தி
    பறந்திட வடக்கினைச் சாடே!

பள்ளியில் கட்டாயம் வேண்டும்-என்ற
     பல்லவி கேட்குது மீண்டும்
துள்ளி எழுந்துமே ஈண்டும்-இந்தி
     தொலைந்திட செய்வோமே யாண்டும்
கொள்ளியை எடுத்தெவர் உலையில்-அதை
     கொண்டுமே வைப்பாரா தலையில்
எள்ளியே நகைக்காதோ நாடே-இந்தி
     ஏற்பது தமிழுக்குக் கேடே!

தாண்டவ மாடுது இந்தி-அஞ்சல்
     தலைகளில் சொகுசாகக் குந்தி
வேண்டாதப் பொதுமொழி இந்தி-அதை
     விரட்டுவோம் அனைவரும் முந்தி
ஈண்டெவர் மரித்திட வரினும்-அதை
     எத்தனை வகைகளில் தரினும்
மாண்டவர் பிழைத்திடப் போமோ-இந்தி
     மறுமுறை நூழைந்திட ஆமோ!?
     
               புலவர் சா இராமாநுசம்