நினைத்து நினைத்துப் பார்க் கின்றேன்
நினைவில் ஏனோ வர வில்லை
அனைத்தும் மனதில் மறைந் தனவே
அறிவில் குழப்பம் நிறைந் தனவே
தினைத்துணை அளவே செய் நன்றி
தேடிச் செய்யின் மன மொன்றி
பனைத்துணை யாகக் கொள் வாரே
பயனறி உணரும் நல் லோரே
அடுத்தவர் வாழ்வில் குறை கண்டே
அன்னவர் நோக அதை விண்டே
தொடுத்திடும் சொற்கள் அம் பாக
தொடர்ந்து அதுவே துன் பாக
கெடுத்திட வேண்டுமா நல் லுறவை
கேடென தடுப்பீர் அம் முறிவை
விடுத்திட வேண்டும் அக் குணமே
வேதனை குறையும் அக் கணமே
கீழோ ராயினும் தாழ உரை
கேடோ! குறையோ! அல்ல! நிறை
வீழ்வே அறியா பெரும் பேறே
விளைவு அதனால் நற் பேரே
பேழையில் உள்ள பணத் தாலே
பெருமையும் வாரா குணத் தாலே
ஏழைகள் பசிப்பிணி போக்கி டுவீர்
இணையில் இன்பம் தேக்கி டுவீர்
மக்கள் தொண்டு ஒன்றே தான்
மகேசன் தொண்டு என்றே தான்
தக்கது என்றே சொன் னாரே
தன்நிகர் இல்லா அண் ணாவே
எள்ளல் வேண்டா எவர் மாட்டும்
இனிமை ஒன்றே மகிழ் வூட்டும்
சொல்லல் யார்க்கும் எளி தன்றோ
சொன்னதை செய்தல் அரி தன்றோ
புலவர் சா இராமாநுசம்