Saturday, November 19, 2011

கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

 தாழ்ந்தாய்த் தமிழா தாழ்ந்தாய் நீ
   வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய் நீ
வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற
   வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற
சூழ்ந்ததே உன்னைப் பழி பாவம்
   சொன்னால் எதற்கு வீண் கோவம்
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
    அடிமையா? வருமா இனி வேகம்

அல்லல் பட்டு ஆற்றாது அவர்
    அழுகுரல் உனக்குக் கேட்க லையா
கொல்லப் பட்ட உடல் தன்னை
    குழியில் புதைப்பதை பார்க் லையா
சொல்லப் பட்டது மிகை யில்லை
    சொன்னதே சேனல் துய ரெல்லை
உள்ளம் உண்டா இல் லையா
    உண்மைத் தமிழா சொல் லையா

ஓடிஓடி தேடுகி றார்  தம்
     உறவினர் உடலைத் தேடு கிறார்
ஆடிப் போகுதே நம் உள்ளம்
    அருவியாய் கண்ணீர் பெரு வெள்ளம்
தேடி எங்கும் தெருத் தெருவாய்
   திரியும் அவர்நிலை கண் டாயா
கோடி எடுக்கவும் ஆள் இல்லை
   கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

வேண்டாம் தமிழா வேண்டாமே
     வேதனை தீரா ஈண்டாமே
கூண்டாய் இறந்து போவோமா கை
     கூலிகள் உணர  சாவோ மா
மாண்டார் மானம் காத் தாரே
      மற்றவர் பின்னர் தூற் றாரே
ஆண்டோம் அன்று இவ் வுலகே
     அடைவோம் இன்று அவ் வுலகே
         
          வருவீரா????  எழுவீரா?????
                      அன்பன்
                   புலவர் சா இராமாநுசம்
    
         சேனல் நான்கைக் கண்டு எழுதியது

Thursday, November 17, 2011

பட்டறிவும் பகுத்தறிவும்



பட்டே அறிவது பட்டறிவு-எதையும்
   பகுத்து அறிவது பகுத்தறிவு
தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை
  தொட்டு அறிவது  பட்டறிவு
விட்டால் குழந்தை தொடுமென்றே-நாம்
  விளங்கிக் கொள்ளல் பகுத்தறிவு
கெட்டார் பெறுவதும் பட்டறிவே-எதனால்
   கெட்டோம் அறிவது பகுத்தறிவு

ஆய்ந்துப் பார்த்தல் பகுத்தறிவு-பெரும்
   அநுபவம் அனைத்தும் பட்டறிவே
மாய்ந்து போமுன் மனிதர்களே—இதை
   மனதில் கொள்வீர் புனிதர்களே
வாய்ந்தது துன்ப வாழ்வென்றே-உளம்
   வருந்தி நிற்றல் தீர்வன்றே
ஓய்ந்து போகா உளம்பெற்றே-பகுத்து
   உணரின் வாழ்வீர் நலம்பெற்றே

சொன்னவர் யாராய் இருந்தாலும்-அவர்
    சொன்னது எதுவாய் இருந்தாலும்
சின்னவர் பெரியவர் என்பதில்லை-அதை
     சித்திக்க முயல்வது தவறில்லை
என்னவோ எதுவென மயங்காதீர்-பகுத்து
     எண்ணியே ஆய தயங்காதீர்
இன்னார் இனியர் பாராதீர்-பகுத்து
     எண்ணாமல் என்றும் கூறாதீர்

சித்தர் பாடல் பட்டறிவாம்-பிறர்
    செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவர்
    போதனை அனத்தும் அதன்விளைவாம்
உத்தமர் காந்தியின் பட்டறிவே-நமக்கு
    உரிமைக்கு விதையென நாமறிவோம்
எத்தகை செயலுக்கும் பட்டறிவே-என
    என்றும் ஆய்தல் பகுத்தறிவே!

                  புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 15, 2011

குழந்தைகள் தினவிழாப் பாடல்



சின்னஞ் சிறுக் குழவி
  சிங்கார இளங் குழவி
கன்னம் குழி விழவும்
  களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முக மாகும்
  அன்றலரும் தாமரை போல்
தன்னை மறந்த தவளும்
   தாலாட்டு பாடு வளாம்

பூவின் இதழ் போல
   பொக்கை வாய் விரிய
நாவின் சுவை அறிய
   நறுந் தேனை தடவிட
பாவின் பண் போல
   பைந்தமிழ் சுவை போல
காவின் எழில் போல
   களிப்பாயே தேன் சுவையில்

கண்ணே நீ உறங்கு
  கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ் கின்ற
  வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
  வரைந்த நல் ஓவியமே
மண்ணை வள மாக்கும்
   மழைத் துளியே நீயுறங்கு

கொஞ்சும் மழலைக் கோர்
   குழல் இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
    பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னை மனம்
    அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
   நீவளரும் வரை யவளே

       புலவர் சா இராமாநுசம்

 

Monday, November 14, 2011

மனிதா மனிதா ஏமனிதா



       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
     
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
      
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
     
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
         

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...