Saturday, November 12, 2011

தூண்டி வருவதும் இதுவல்ல

   
     அன்பு  நெஞ்சங்களே!  மாண்புமிகு அமைச்சர்
       திருமிகு, நாராயணசாமி அவர்கள்  கூடங்குளம்
      போராட்டம் பற்றி கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார்
      அதன் விளைவே இக்கவிதை மீண்டும் வந்துள்ளது!
      

 மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!

புலவர் சா இராமாநுசம்



Friday, November 11, 2011

வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்



வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம் அதனாலே
இங்கே

இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்றக் காவியமே
செயற்கை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கைச் செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும் தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி

புலவர் சா இராமாநுசம்

Thursday, November 10, 2011

நியாயம் தானா அம்மாவே



நியாயம் தானா அம்மாவே-இது
   நியாயம் தானா அம்மாவே
ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்
   ஆணையில் நீக்கினீர் சும்மாவே
தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
   தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்
ஆயன உடனே செய்வீரா-நீக்க
   ஆணயை இரத்தும் செய்வீரா

நீதி கேட்டே அலைகின்றார்-தம்
   நிலையை எண்ணிக் குலைகின்றார்
வீதியில் புரண்டே அழுகின்றார்-உமை
   வேதனை நீக்கத் தொழுகின்றார்
நாதியில் அவர்கே எண்ணுங்கள்-உடன்
   நலன்பெற வழியும் பண்ணுங்கள்
சாதியில் ஏழைகள் அனைவருமே-அவர்
   சந்ததி வாழ்ந்து நலம்பெறுமே

தவறா செய்தார் அன்னவரே-வேலை
    தந்தது ஆண்ட முன்னவரே
இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
    எதற்கு இந்த முன்கோபம்
சுவரா என்ன இடித்துவிட-ஒரு
    சொல்லில் வாழ்வை முடித்துவிட
அவரால் வாழ இயலாதே-அவரை
    அநாதை ஆக்க முயலாதீர்

இரண்டு முறையே பட்டார்கள்-பாபம்
   இனியும் தலையில் குட்டாதீர்
திரண்டு உதிக்கும் கண்ணீரே-அவர்
   தினமும் வடிக்க பண்ணீரே
மிரண்டு ஓடும் மாடக-உடல்
   மேலும் வற்றி கூடாக
வரண்டு போகும் அவர்வாழ்வே-இனி
   வாழ்வும் தாழ்வும் உம்கையில்

                  புலவர் சா இராமாநுசம்


      
  

Wednesday, November 9, 2011

சுகத்தைத் தருவது எந்நாளோ



காலில்  ஒட்டிய  சேற்றோடும்- தன்
      கைகளில்  நெல்லின்  நாற்றோடும்
தோலும்  வற்றி  உடல்தேய-என்றும்
     தொலையா  உழைப்பால்  தானோய
நாளும்  அற்றுப்  பலநாளும்-மிக
      நலிந்த  உழவர்  இல்லத்தில்
மூளும் வறுமை தீராதோ-வாழும்
     முறைப்படி வாழ்வதும்  எந்நாளோ

இருண்ட  இரவே  என்றாலும்-தன்
    எதிரே  எதுதான்  நின்றாலும்
மருண்ட  நிலையே  அறியாது-சற்றும்
    மலைத்து  மனமும்  முறியாது
உருண்ட  பந்தாய்  வாழ்வாக-அவன்
    உழைத்துப்  பெற்றது  தாழ்வாக
சுருண்ட  உழவர்  இல்லத்தில்-நல்
    சுகத்தைத்  தருவது  எந்நாளோ

கொட்டும்  மழையே  என்றாலும்-உடல்
    குளிரால்  நடுங்கி  நின்றாலும்
வெட்டும்  மின்னல்  ஒளியாலே-இரு
    விழிகள்  காட்டும்  வழியாலே
கட்டிய  மடைகள்  உடையாமல்-அவன்
    கைகள்  சோர்வு  அடையாமல்
வெட்டிய  மணைக்  கொட்டியவன்-பட்ட
    வேதனை  குறைப்பதும்  எந்நாளோ

பருவம் தவறி மழைபெய்ய- வெள்ளம்
    பாய்ந்து இட்ட பயிரழிய
உருவம் மாறி மேடுபள்ளம்-நில
    உருவே ஆகிடிட கண்டுஉள்ளம்
வருமா வாழ்வில் வளமென்றே-துயர்
    வாட்டிட அந்தோ தினம்நொந்தே
கருவே கலைந்த நிலைபோல-உழவன்
     கண்ணீர் நிற்பது எந்நாளோ
     
காட்டைத் திருத்தி உழுதானே-பெரும்
    கடனும் பட்டே அழுதானே
நாட்டின் பசிப்பிணி போக்குமவன்-ஏதோ
    நடைப்பிணம் ஆனதை நோக்கியவன்
வீட்டில் மகிழ்வு பூத்திடவே-ஆள்வோர்
    விரைந்து அவனைக் காத்திடவே
கேட்டை நீக்குதல் எந்நாளோ-நெஞ்சக்
    குமுறல் போக்குதல் எந்நாளோ

        புலவர் சா இராமாநுசம்
          

Monday, November 7, 2011

எங்கே போனாய் நிம்மதியே



எங்கே போனாய் நிம்மதியே-உனை
    எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நான்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
     உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-படும்
     துயரம் நீக்கிட  போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
     சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீ
     மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என
     நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
     புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
     போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
     அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அவர்
      பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வி
      கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீ
     இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார்  மனதிலும் இவ்வாறே-இன்றிப்
     பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
     ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர்  வாழ்வொடு போனாயோ-பொருள்
     மாறிட நிம்மதி  ஆனாயோ

                         புலவர் சா இராமாநுசம்